“சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை போலீசாரால் கடந்த ஜூன் 28-ந் தேதி கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர் பாக சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன் குமார், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஜூன் 27-ந் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா காரை பார்க் செய்து தருமாறு அங்கிருந்த கோவில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமாரிடம் கூறி சாவியை கொடுத்து உள்ளார்.

அவர் அதை அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் அருணிடம் கொடுத்து காரை கோவில் எதிரே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 2 நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் அஜித்கு மார் கொடுத்து விட்டார்.

ஆனால் நிகிதா கொடுத்த புகாரில் கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தந்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும் காரை அஜித்குமாரும் அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் அருணும் சேர்ந்து வடகரை வரை ஓட்டி வந்ததாக கூறப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகளும் முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்து தான் தொடங்கினர். வழியில் உள்ள சி.சி. டி.வி., கேமரா காட்சிகளை பார்த்தபோது கார் வந்ததாக தெரிய வில்லை.

இதனிடையே காரை நிகிதாவே ஓட்டி சென்று, மீண்டும் அவரே ஓட்டி வருவது பதிவாகி இருந்தது.

நிகிதாவின் காரை மடப்புரம் கோயில் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 2 நிமிடத்தில் சாவியை ஒப்படைத்துள்ளனர்.

மீண்டும் பார்க்கிங்கில் இருந்து காரை எட்டு நிமிடத்தில் எடுத்து வந்து கொடுத்துள்ளனர். எனவே கோயிலுக்கு நிகிதா காரில் வந்த பின் கோயிலை விட்டு கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.

இவ்வாறு சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணையில் அவர் இவ்வாறு முரண்பட்ட தகவல்களை கூறியுள்ளதால், நிகிதா அஜித்குமார் மீது பொய் புகார் அளித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.”,

Share.
Leave A Reply