இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, குற்றப் புலனாய்வு பிரிவினரால், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

குருநாகல் மாவட்டத்தின் பொத்துஹெர பகுதியில் 2010 ஆம் ஆண்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமரவீர என்ற அந்த சிறுவனை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தபோது கடைசியாக உறவினர்கள் பார்த்துள்ளனர். அதன் பின்னர் யாரும் பார்க்கவில்லை.

காய்ச்சல் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், திருகோணமலை கடற்படைத்தளத்தின் இரகசிய வதைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அந்தச் சிறுவன் திருகோணமலைய இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது, எழுதிய கடிதம் ஒன்று, அந்த வதைமுகாம் சுவர் இடுக்கிற்குள் செருகி வைக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதம் தான் இப்போது, விசாரணைகளை தூண்டி இருக்கிறது.

அதன் அடிப்படையிலேயே, அந்த இரகசிய முகாமுக்கு பொறுப்பாக இருந்த கடற்படையின் அப்போதைய புலனாய்வு பணிப்பாளர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்ற 11 ஆவது சந்தேகநபர் இவர்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு 3 பொலிஸ் அதிகாரிகள், கடற்படை கப்டன் தர அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

ஆனால், கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் உலுகேதென்னவின் கைது நடவடிக்கை எதிர்பார்க்கப்படாத ஒன்று.

ஏனென்றால், திருகோணமலை கடற்படை வதைமுகாம் தொடர்பாக, ஏற்கெனவே பல கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அட்மிரல் உலுகேதென்னவுக்கு தொடர்பு இருப்பதாக முன்னர் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அத்துடன், இது தொடர்பாக அவரிடம் இதற்கு முன்னர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், இவர் கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலகட்டத்தில் இரகசிய வதை முகாமை இயக்கியது தொடர்பாக, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, குற்றச்சாட்டுகள் இருந்தன.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் ‘கன்சைட் வதை முகாம்’ இவரது மேற்பார்வையின் கீழேயே செயற்பட்டது என்றும், அங்கு இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக இவர் அறியாமல் இருந்திருக்க முடியாது என்றும், குற்றச்சாட்டுகள் இருந்தன.

ஜெஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

அந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவர் கைது செய்யப்பட்டிருக்கின்ற சம்பவத்திற்கும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, கொமடோர் தசநாயக்க உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கிற்கும் தொடர்பு இல்லை.

ஆனால், அந்த காலகட்டத்தில் எல்லோரும் ஒன்றாக பணியாற்றியிருந்தவர்கள்.

அதைவிட, 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரிகள் கன்சைட் வதைமுகாமில் விசாரணைகளை நடத்திய போதே, சுவர் ஒன்றுக்குள் செருகியிருந்த சமரவீரவின் கடிதக் குறிப்பை கண்டுபிடித்தனர்.

அங்கிருந்து தொடங்கிய விசாரணை தான், அட்மிரல் உலுகேதென்னவை சிறைக்குள் தள்ளியிருக்கிறது.

அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இறுதிக்கட்ட போரின் போது, 4ஆவது அதிவேக தாக்குதல் படகுகள் அணிக்கு பொறுப்பாக இருந்தவர்.

பின்னர் கடற்படையின் ஏவுகணை கப்பலான நந்திமித்ரவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர்.

அதற்குப் பின்னரே, கடற்படையின் புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பிறகு 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அட்மிரல் உலுகேதென்னவை, கடற்படையின் 26 ஆவது தளபதியாக நியமித்தார்.

2022 ஆம் ஆண்டு வரை அவர் இந்த பதவியில் நீடித்திருந்தார்.

‘அரகலய’ போராட்டம் தீவிரமடைந்து, ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்த போது, உயர் அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல், கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றியவர், அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தான்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து இரகசிய சுரங்கப்பாதை வழியாக, கொழும்பு துறைமுகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவை அழைத்துக் கொண்டு போய், கடற்படையின் கஜபாகு போர்க்கப்பலில் ஏற்றி, அவரை திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஒப்படைத்தவர் அட்மிரல் உலுகேதென்ன.

அதுவரை அவர் கோட்டாபாய ராஜபக்ஷவுடனேயே இருந்தார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் அவரை கடற்படை தளபதியாக தொடர்ந்து வைத்திருக்க தயாராக இருக்கவில்லை.

2022ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெறுகின்ற சூழல் வந்த போது, அவரை கியூபாவுக்கு தூதுவராக ரணில் நியமித்திருந்தார்.

அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த பின்னர் நிஷாந்த உலுகேதென்ன உள்ளிட்ட அரசியல் நியமனம் பெற்ற தூதுவர்களை திருப்பி அழைத்தார்.

இதனால் கியூபாவுக்கு தூதுவர் பதவியை நிறைவு செய்ய முடியாமலேயே அவர் நாடு திரும்ப நேரிட்டது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்ட செய்தி சர்வதேச அளவில் ஊடகங்களில பரபரப்பை ஏற்படுத்தியது.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னர், அட்மிரல் வசந்த கரன்னகொடவையும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்தினவையும் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், அரசியல் தலையீடுகள் காரணமாக அவர்களை கைது முடியவில்லை.

அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவே இவர்களை கைது செய்வதற்கு தடை விதித்திருந்தார்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கைது செய்வதற்கு தடை ஏற்படுத்தவில்லை.

புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்காது என தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

அந்த வாக்குறுதி சரியாக காப்பாற்றப்படுகிறதா இல்லையா என்பது வேறு வடிவம்.

ஆனால், தற்போதைய சூழலில் முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றுவதற்கு அரசாங்க முயற்சிக்கவில்லை.

அவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்பதால் கூட, இந்த விடயத்தில் அநுரகுமார திசாநாயக்க ஒதுங்கியிருக்கக் கூடும்.

அதைவிட, அநுரகுமார திசாநாயக்க நாட்டில் இல்லாத போது தான், அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒருவகையில் அதுவும் கூட ஒரு திட்டமிட்ட ஏற்பாடாக இருந்திருக்கலாம்.

நாட்டில் இல்லாத பொழுது இந்த கைது இடம் பெற்றதாக, அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நழுவிக் கொள்வதற்கான சாத்தியமும் இருக்கிறது.

அது தவிர நியாயமான முறையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அரசாங்கம் இதனை பயன்படுத்தி கொள்ளக்கூடும்.

வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும்.

அந்த சமயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அதற்கான பொறுப்புக் கூறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும்.

அவ்வாறான சூழலில், உள்நாட்டு விசாரணைகளின் மூலம், இதற்கு தீர்வு கட்ட முடியும் என்ற நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்காகவும், தண்டனை விலக்கு பற்றிய தொடர் குற்றச்சாட்டுகளில் இருந்து நாடு விடுபட்டிருக்கிறது என்று காட்டுவதற்காகவும் கூட, அரசாங்கம் இந்த கைது நடவடிக்கையை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.

கைது செய்யப்படுவது மாத்திரம் முக்கியமல்ல.

அவர் குற்றவாளி என்பதை சரியான முறையில் நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் முக்கியம்.

உள்நாட்டு விசாரணை முறைகள் குற்றம் இழைத்தவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாத வகையில் செயற்படுமா என்பதுதான் சந்தேகம்.

சுபத்ரா

Share.
Leave A Reply