கடந்த 22 மாதங்களுக்கு மேலாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் ஆதரவுடன் பலஸ்தீனர்களை அமெரிக்காவும் -இஸ்ரேலும் இனப்படுகொலை செய்ய அரபு சர்வாதிகாரிகள் உதவி வருகின்றனர்.
இந்த சர்வாதிகாரிகள் தங்கள் அரசியல் இருப்புக்காக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் நம்பியிருப்பது, அவர்களது மக்களின் கோபத்தை தூண்டி உள்ளதுடன், அவர்களின் ஆட்சிகள் இன்று அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளன.
காஸாவில் அமெரிக்க- இஸ்ரேலிய இனப்படுகொலையின் வரலாறு எழுதப்படும் ஒரு நாள் வரும் போது அன்று அரபு சர்வாதிகாரிகளின் பங்கு மிக மோசமான துரோகமாக எழுதப்படும்.
இன்றைய காலத்தின் தேவை ஜெருசலேமைக் கைப்பற்ற ஒட்டகத்தில் தனது பணியாளனுடன் சென்ற உமர் போன்ற ஒரு கலீபாவின் தலைமைத்துவமே அன்றி, தமது சுய இருப்புக்காக முஸ்லிம்களுக்கு எதிரான தீய நிகழ்ச்சி நிரல்களுடன் உள்ள அமெரிக்காவையும் இஸ்ரேலையும் நம்பியிருக்கும் மற்றும் அவர்களோடு கை கோர்க்கும் ஆட்சியாளர்கள் அல்ல.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் காஸாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்தை 24 மணி நேரமும் பார்க்கின்றார்கள்.
2023 அக்டோபர் 8 முதல் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த கொடுமை, பலஸ்தீனர்களைக் கொல்வதற்கும் பட்டினியால் வாட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கக் கோரி உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களை உசுப்பி விட்டுள்ளது.
இத்தகைய அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கு கூட மத்திய கிழக்கில் அனுமதி வழங்கப்படவில்லை. உண்மையில் காஸாவில் பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களுக்காக பிரார்த்தனை செய்வது கூட இஸ்லாத்தின் பிறப்பிடமான சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2017 டிசம்பர் 6 ஆம் திகதி ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அதிகாரபூர்வமாக அங்கீகரித்து, அமெரிக்க இராஜதந்திர பணியை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றினார்.
ஜெருசலேமில் உள்ள மஸ்ஜித் அல் அக்ஸாவை தொழுகைக்கு தங்கள் முதல் கிப்லா திசையாக கருதும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இது ஒரு வரலாற்று ரீதியானஅவமானமாகும்.
2020 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கைகள், பல்வேறு அமெரிக்க ஆதரவுகளுக்கு ஈடாக இஸ்லாம் மற்றும் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பதை அரபு அரசாங்கங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
இப்போது ஜனாதிபதி ட்ரம்ப் காஸாவில் பலஸ்தீனர்களை படுகொலை செய்வதில் இஸ்ரேலுடன் ஒரு பங்காளியாக இருக்கின்றார்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான அவரது அனைத்து விரோதங்களும் அப்படியே இருந்தபோதிலும், அரபு சர்வாதிகாரிகளான சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன அண்மையில் ட்ரம்ப் தமது நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் போது அவருக்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான வரவேற்பை வழங்கின.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் சுமார் 2 ட்ரில்லியன் டொலர் மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்களையும் அவர் செய்துகொண்டார்.
இதுவும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு வரலாற்று அவமானமாகும்.
அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை.
உதாரணத்துக்கு எகிப்தில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக நடைபெற்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் முஸ்லிம் சகோதரத்துவத்துவ அமைப்பிற்கு ஆதரவான முகமது முர்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் எகிப்தியர்கள் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், இந்தத் தெரிவுக்கு எதிராக அமெரிக்கா- ஐரோப்பா மற்றும் இஸ்ரேலில் எச்சரிக்கை மணிகள் அடிக்கத் தொடங்கின.
அவர்கள் தங்கள் சவூதி, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கைப்பொம்மை ஆட்சியாளர்களைத் தூண்டி அவர்கள் மூலம் எகிப்திய மக்கள் மத்தியில் செயற்கையாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க பதினொரு பில்லியன் டொலர்களை செலவிட வைத்தனர்.
இது மக்கள் மத்தியில் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. அதன் விளைவாக முர்சி அரசாங்கம் கவிழ்ந்தது. அமெரிக்க-, இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்வதற்காக இந்த சதித்திட்டத்தை அமுல் செய்தவர்கள் உடனடியாக தங்களுக்கு சார்பான இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல் சிசியை அதிகாரத்தில் அமர்த்தினர்.
இன்று சிசியின் கொடுங்கோல் ஆட்சி அமெரிக்காவால் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டொலர் செலவில் பராமரிக்கப்படுகிறது.
பதிலுக்கு சிசி, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்க-- இஸ்ரேலிய சதித்திட்டங்களையும் காஸாவில் நடக்கும் இனப்படுகொலைகளையும் கீழ்ப்படிதலுடன் ஆதரிக்கிறார்.
காஸாவில் இஸ்ரேலின் “இனப்படுகொலை பட்டினியை” கண்டிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையை திரும்பப் பெறுமாறு உலகின் முன்னணி இஸ்லாமிய நிறுவனமான அல் அஸ்ஹரின் பிரதம இமாம் அகமது அல்-தய்யிப்புக்கு சிசி அழுத்தம் கொடுத்துள்ளார்.
சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பன பல பில்லியன் டொலர் கூட்டு முதலீட்டு திட்டங்களை உள்ளடக்கி இஸ்ரேலுடன் நெருங்கிய இரகசிய உறவுகளை பேணி வருகின்றன. சூடானிலும் உள்நாட்டுப் போரைத் தூண்டிய அபுதாபி, இஸ்ரேலியர்களுக்கு பக்க பலமாக உள்ளது.
இந்தப் பிரதேசத்தில் மக்கள் புரட்சிகள் வெடித்து ஒரு தசாப்தத்துக்கும் சற்று அதிகமான காலம் கழிந்துள்ள நிலையில் பலவீனமான அரசுகளே எஞ்சி உள்ளன.
இன்று அரபு ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் மக்களுக்கும் இடையிலான இடைவெளி இதற்கு முன் ஒருபோதும் இந்தளவு விரிவானதாக இருந்ததில்லை. இது நீண்ட காலத்திற்கு சகித்துக் கொள்ளக் கூடியதும் அல்ல.
இதற்கிடையில் எகிப்து, ஜோர்டான், சிரியா, கத்தார், சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஈரான் மீதான சமீபத்திய தாக்குதல்களில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்ததாக செய்திகள் தற்போது வெளி வருகின்றன. இது ஈரானைத் தூண்டும் ஒரு ஆபத்தான நிலைமையாகும். இது முழு பிராந்தியத்தையும் பொசுக்கக் கூடும்.
சமீபத்திய நிகழ்வுகள் மக்கள் அணிதிரட்டலுக்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட காலமாக புதைக்கப்பட்டிருந்த கேள்விகளை மீண்டும் எழுப்பி உள்ளன. ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பிராந்தியத்தின் எதோச்சதிகாரிகள் இன்னும் அதிக அடக்குமுறையுடன் தான் பதிலளித்து வருகின்றனர்.
பல வளைகுடா நாடுகளில் பலஸ்தீன கொடிகளை அசைப்பது மற்றும் அவர்களின் சால்வையை அணிவது என்பன கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன.
பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செய்யப்படும் பிரார்த்தனைகள் கூட சவூதியின் புனித மக்கா நகரில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தின் உண்மை நிலை என்னவென்றால், அரபு ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் மக்களுக்கும் இடையிலான இடைவெளி ஒருபோதும் இந்தளவு விரிவானதாக இருந்ததில்லை.
பிரேஸில், பொலிவியா, சிலி மற்றும் கொலம்பியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்தும், அல்லது சியோனிச அரசுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தும் அல்லது குறைத்தும் உள்ள போதிலும் சுற்றி உள்ள அரபு நாடுகளோ இஸ்ரேலுடன் உறவுகளை “இயல்பாக்கி ” உள்ளனவே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
உலக அதிசயங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில்! டாக்டர் மஹ்பூப் ஏ கவாஜா அரேபியர்கள் எங்கே இருக்கின்றார்கள்? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
“அரபு தார்மீக, அறிவார்ந்த மற்றும் அரசியல் நடத்தையில் இத்தகைய சீரழிந்த கலாசாரத்தை வரலாறு ஒரு போதும் கண்டதில்லை. எதிரிகளுக்கும் நண்பர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்கள் வாழும் வரலாற்றிலிருந்து எப்போது இவர்கள் கற்றுக்கொள்வார்கள்?
ஆச்சரியம் என்னவென்றால், சில முஸ்லிம் அல்லாதவர்களால் முஸ்லிம்களை விட அதிகமாக செய்ய முடிந்துள்ளது.
ஐ.சி.சி யில் இஸ்ரேலிய போர்க் குற்றவாளிக்கு எதிரான வழக்கு தென் ஆபிரிக்கா போன்ற ஒரு முஸ்லிம் அல்லாத அரசால் தான் பதிவு செய்யப்பட்டது.
சவூதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி அல்லது பாகிஸ்தான் இதை செய்யவில்லை. இஸ்ரேலுக்கு எதிரான மிகப்பெரிய எதிர்ப்பு பேரணிகள் லண்டன், பாரிஸ் மற்றும் ரோம், .ெவாஷிங்டனில் நடத்தப்படுகின்றன. ரியாத், கெய்ரோ, இஸ்தான்புல் அல்லது கராச்சியிலோ அல்ல.
இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான கண்டனமும் உதவப் போவதில்லை. சில நடைமுறை நடவடிக்கைகள் தான் இதற்கு தேவை. ஒவ்வொரு முஸ்லிமும் பலஸ்தீனர்களுக்கு உதவுவதில் தனது பங்கை வகிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று டாக்டர் மஹ்பூப் ஏ. கவாஜா தெரிவித்துள்ளார்.
லத்தீப் பாரூக்