உ லக அரசியலின் போக்கு வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசுகளுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு வரிவர்த்தகத்துக்கும் இராஜதந்திரத்திற்குமான போட்டியாக உலக அரசியல் நகர்ந்து செல்கிறது.
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிக் கொள்கை இந்திய ரஷ்ய உறவை மேலும் பலப்படுத்துவதோடு பிரிக்ஸ் கட்டமைப்பை புதிய திசைநோக்கி எடுத்துச் செல்லத் தொடங்கி இருக்கிறது.
சீனாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரிக்ஸ் அமைப்பானது, உலக வர்த்தகத்திலும் பொருளாதார கொள்கைகளில் மட்டுமல்லாது, அரசியல் இராஜேந்திர ரீதியிலும் வலுவான நிலையை நோக்கி எழுச்சி பெறத் தொடங்கியிருக்கிறது.
இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பின் விளைவுகளைத் தேட முயலுகின்றது.
ரஷ்ய- – உக்ரைன் போர் முடிவுகளை நோக்கிய அமெரிக்காவின் அணுகுமுறைகள் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டு வருகின்றன.
ஒன்றுக்கும் மேற்பட்ட காலக்கெடுவையும் பொருளாதாரத் தடைகளையும் எச்சரிக்கைகளையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யா மீது முன்வைத்த போதும், பிற நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராக தூண்டிய போதும், உக்ரைன் போரை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.
இத்தகைய சூழலுக்குள் மீண்டும் ஒரு சந்திப்புக்கான வாய்ப்பை இரு நாட்டு தலைவர்களும் திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீவ் விக்கோவ்வின் க்ரெம்பிளின் விஜயத்தில் இரு தலைவர்களுக்குமான சந்திப்பு தீர்மானம் ஆகியுள்ளது.
ஸ்ரீவ் விக்கோவ்வின் ரஷ்ய விஜயம் ட்ரம்ப்ன் 50 நாள் போர்நிறுத்தக் காலக் கெடுவிலேயே நிகழ்ந்துள்ளது.
இதே நேரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டதுடன் புட்டினுடனான சந்திப்பின் பின் வெளிவரும் கருத்துக்களும் இந்திய ரஷ்ய கூட்டுறவின் பலத்துடன் ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க திட்டமிடுகிறார் என்றே தெரிவிக்கின்றன.
புட்டின் முன்னாள் உளவுத்துறையின் பணிப்பாளர் மட்டுமின்றி ரஷ்யாவின் நீண்டகால ஆட்சியாளரும் சிறந்த இராஜதந்திரியாகவும் பார்க்கப்படுகின்றார்.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒரு வர்த்தகராக அல்லது ஒரு வியாபாரியாக அரசியலைப் பார்க்கும் ஒருவர். இது இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. அதனை விரிவாக புரிந்து கொள்ளுதல் அவசியம்.
முதலாவது, அமெரிக்காவின் நோக்கம் அடிப்படையில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்துவதற்கான சூழலை உருவாக்குவதாகும்.
ஆனால் அத்தகைய சூழலை அமெரிக்காவே நிராகரித்துவிட்டு அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஏகப்பட்ட தடைகளை விதித்துவிட்டு இத்தகைய சந்திப்பை வெற்றிகரமானதாக சாத்தியப்படுத்தலாமா என்பது பிரதான கேள்வியாகும்.
ரஷ்யாவைப் பொறுத்தவரைக்கும் மேற்குலக நாடுகள் விதித்த அனைத்து வகையான சவால்களையும் தாம் வெற்றிகண்டிருப்பதாகவும் தமது எல்லைக்குள் உரையாடல் அமைவதற்கான சூழல் இருப்பதாகவும் கருதுகிறது.
உக்ரைனுடனான போரை ரஷ்யாவே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஐரோப்பாவின் நேட்டோ விஸ்தரிப்பு என்பது அபாயமானது. அதனை முறியடிப்பதற்கான உத்திகள் தவிர்க்க முடியாது என்ற நிலையிலுமே ரஷ்யா பேச்சுக்களை தொடர திட்டமிடுகிறது.
ஆனால் அமெரிக்கர்கள் அல்லது டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் கனிமவளங்களை பங்கீடு செய்வதிலும் உபரியான வர்த்தகத்தை சாத்தியப்படுத்துவதும் அமெரிக்க- மேற்கு கூட்டாக இப்பிராந்தியத்தை சூறையாட திட்டமிடுவதுமே பேச்சுவார்த்தையின் அடிப்படைகளாக தெரிகிறது.
இதனால் பேச்சுவார்த்தையின் அரங்கம் அதிக மாற்றத்தை தரக்கூடியதாக அமைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
முன்னுக்குப்பின் முரணான அணுகுமுறைகளுக்கு ஊடாக சமாதான உரையாடலை சாத்தியப்படுத்துவது என்பது வெற்றிகரமானதாக அமையுமா என்பது சந்தேகமானதாகவே தெரிகிறது.
வேண்டுமாயின் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்கலாம். இரு தலைவர்களும் உரையாடலை நீடிக்கலாம். விளைவுகள் பலவீனமானதாகவே அமைய வாய்ப்பு அதிகம் உண்டு.
இரண்டாவது, உக்ரைனைப் பொறுத்தவரை இப் பேச்சுவார்த்தையின் மூலம் ரஷ்யாவை கட்டுப்படுத்துவது நோக்கமாக இருக்கின்றது.
ஆனால் ரஷ்யாவை பேச்சுவார்த்தையில் ஒரு பங்குதாரராகக் கூட கருத முடியாத அளவுக்கு உக்ரைனில் நடவடிக்கை அமைந்திருந்தது.
நேட்டோவை கிழக்கு ஐரோப்பாவுக்குள் ஊடுருவச் செய்வதன் மூலம் பிராந்திய வளங்களை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவானதாக உள்ளது.
அதனால் உக்ரைனை பெரிய விடயமாக கருத்தில் கொள்ளாது புட்டின், அமெரிக்க ஜனாதிபதியோடு உரையாடுவதை வேறொரு கோணத்தில் முதன்மைப்படுத்த முனைவது தெரிகிறது.
அவரது இராஜதந்திர அணுகுமுறைகள் மிகத் தெளிவாகவே உக்ரைனை ஓரங்கட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது.
மறுபக்கத்தில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் தனிமைப்படுத்துவதற்கு முயன்றுள்ளார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு, ஐரோப்பா, ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகளை கடந்து முக்கியமானது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே பேச்சுவார்த்தை உக்ரைனுடைய இருப்பை மேலும் பலவீனப்படுத்துவதோடு, உக்ரைன் பலியிடப்படுவதற்கான வாய்ப்புகள் இருதரப்பாலும் நிகழ்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
போரிலும், போர்க்களத்திலும் எதிர்கொள்ள முடியாத நெருக்கடிகளை உத்திகளாலும் இராஜதந்திரத்தாலும் நகர்த்துகின்ற பொறிமுறையோடு இரு தரப்பினரது சந்திப்புக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பேச்சுவார்த்தை ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகளை தகர்ப்பதோடு ரஷ்ய – அமெரிக்க ஒத்துழைப்பு சாத்தியமானதாக அமையப்போகின்றது.
இதன் விளைவுகள் உக்ரைனுடைய இருப்பை அதிகம் பலவீனப்படுத்துவதாக அமையும். ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிகழும் மறைமுக மோதல் என்பது வெளிப்படையான சில முடிவுகளை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவிருக்கிறது.
மூன்றாவது, இந்தியா மீது அமெரிக்காவின்; வரி தொடர்பிலான அணுகுமுறைகள் இந்தியாவை அதிகம் பாதித்திருக்கிறது.
அமெரிக்கா மீதான அதீதமான அதிர்ச்சியை இந்தியாவுக்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்குமான பலமான உறவை மேலும் பலப்படுத்தும் அதேநேரம் பிரிக்ஸ் அமைப்பை வலுவான வர்த்தகப் பொருளாதாரக் கூட்டாகவும், இராஜேந்திர ரீதியான சக்தி மிக்க நிறுவனமாகவும் மாற்றுவதில் அமெரிக்காவின் அணுகுமுறை வெற்றிகரமானதாக மாறி வருகிறது.
இதில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் அல்லது பிரிக்ஸ்சை பலவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் இரு தலைவர்களின் சந்திப்பு சாத்தியமாகும் என்பது பற்றி அமெரிக்க தரப்பினர் விவாதிக்கின்றனர்.
ஆனால் ரஷ்ய ஜனாதிபதியைப் பொறுத்தவரை அத்தகைய வாய்ப்புக்களுக்கு ஒரு போதும் சந்தர்ப்பம் வழங்காத இராஜதந்திர உத்திகளை அதிகம் கொண்ட உலகத் தலைவர்களில் ஒருவராக காணப்படுகின்றார். அதனால் அமெரிக்காவின் திட்டமிடல் பெரும் அளவுக்கு பிரிக்ஸ் கட்டமைப்பு மீதான நெருக்கடியை உள்ளாக்காது.
எனவே புட்டின் – ட்ரம்ப் சந்திப்பு உலக அரசியலில் புதிய அணிகளையும் புதிய ஒழுங்கு முறையையும் கட்டமைக்க உதவலாமே தவிர உக்ரைன் போரைப் பொறுத்து முடிவுகளை ரஷ்யாவே மேற்கொள்ள வாய்ப்பு அதிகமுள்ளது.
அதேநேரம் அமெரிக்காவின் அணுகுமுறைகள் காலம் தாழ்த்தியதோடு, தடைகளையும், நெருக்கடிகளையும், எச்சரிக்கைகளையும் வைத்துக்கொண்டு ரஷ்யாவை அடிபணிய வைக்கலாம் என்று கருதுவது பலவீனமானதே. ரஷ்யாவை மேலும் பலப்படுத்தும் நகர்வாகவே அமைய வாய்ப்புண்டு.
பிரிக்ஸ் அமைப்பையும் அதன் அணியினரையும் வலுவான நட்புறவுக்குள் அமெரிக்காவின் அணுகுமுறை எடுத்துச் செல்லும். அரசியல் வியாபாரிக்கும் ஒரு இராஜதந்திரிக்குமான சந்திப்பாகவே இரு தலைவர்களின் சந்திப்பு அமையவிருக்கின்றது.