காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில் காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் “காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு.
நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் முன் எப்போதும் இல்லாத பேரழிவுக்கும் நிரந்தர போருக்கும் வழி வகுக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது இஸ்ரேலிய பணயக்கைதிகளும் காசா மக்களும்தான்.
காசாவை பாதுகாப்பதற்கான திட்டத்தை ஐநா முன்னெடுக்க வேண்டும். இதற்கான அமைப்பை காசாவில் நிறுவ வேண்டும்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது குழுக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஐ.நா.வால் முன்மொழியப்படும் இந்த அமைப்பு காசாவை பாதுகாப்பது அப்பாவி மக்களை பாதுகாப்பது பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக பணியாற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் கடந்த மாதம் அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தனக்கு உள்ள உறுதியை இம்மானுவேல் மேக்ரான் வெளிப்படுத்தி உள்ளார்.