தவறிழைத்தவர்கள் வருந்தலாம். தவறுக்காக பரிகாரம் தேடலாம்.

அந்த வருத்தத்திலும், பரிகாரம் தேடும் முயற்சியிலும் நேர்மை காட்டுவது முக்கியம்.

இழைத்த தவறை சூசகமாக மறைத்து, பரிகாரம் தேடும் முயற்சியில் இரட்டை வேடம் காட்டுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

பலஸ்தீனர்கள் விடயத்தில் தவறிழைத்த தேசமாக, சர்வதேச அரங்கில் பிரிட்டன் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், பலஸ்தீனர்களின் இருப்பையே கேள்விக் குறியாக மாற்றும் அராஜக எதேச்சாதிகாரத்தை மாற்றுவதற்கு பிரிட்டன் என்ன செய்கிறது என்ற கேள்வியே இந்தக் கட்டுரையின் அடிநாதம்.

Foreign Secretary David Lammy’ UK

கடந்த வாரம் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லெமி ஐக்கிய நாடுகள் சபையில் பேசியபோது, பலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில் தமது நாட்டிற்கு பொறுப்புடன் கூடியதொரு சுமை இருக்கிறதெனக் குறிப்பிட்டார்.

பொறுப்பு என்பது பிரிட்டனின் வெளிவிவகாரக் கொள்கையாக இருக்கலாம். ஆனால், சுமை என்றால் வெறும் வார்த்தையல்ல. அது 107 வருடகால தவறு தரும் மனசாட்சியின் பிரதிபலிப்பு.

ஒரு காலனித்துவ ஆட்சியாளராக, 1917ஆம் ஆண்டு பிரிட்டன் செய்த கைங்கர்யத்தை டேவிட் லெமியின் வார்த்தைகள் சூசகமாக வெளிப்படுத்தி நின்றன.

பிரிட்டன் அரசாங்கத்தின் பெல்ஃபர் பிரகடனம். காலனித்துவ ஆட்சியாளராக தமக்கு சொந்தமில்லாத மண்ணை, அந்த மண்ணில் குடியிருக்காத மக்களுக்கு எழுதிக் கொடுத்து, அந்த மண் யாருக்கு சொந்தமானதோ அவர்களை அந்நியப்படுத்த வழிவகுத்த ஆவணம்.

வெறுமனே 67 சொற்கள். பலஸ்தீன மண்ணில் இஸ்ரேலுக்காக தேசமொன்றை ஏற்படுத்தி, பலஸ்தீனர்கள் இறையாண்மையை இழந்து அகதிகளாக இடம்பெற வழிவகுத்த ஆவணம்.

இன்று பலஸ்தீன மக்கள் எதிர்கொண்டு நிற்கும் பேரவலங்களுக்கெல்லாம் பிள்ளையார் சுழி இட்ட ஆவணம் பெல்ஃபர் பிரகடனம் (Balfour Declaration) எனில், பிரிட்டனின் காலனித்துவ மனசாட்சி குறுகுறுக்கத்தானே செய்யும்?

பலஸ்தீனர்களுக்கு பிரிட்டன் இழைத்த அநியாயம் அது மாத்திரமல்ல. தனது ஆணைக்குள் பலஸ்தீன மண் இருந்த சமயத்தில், ஸியோனிஸ கிளர்ச்சியாளர்களுக்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்கியது. பலஸ்தீனர்களின் புரட்சிப் போராட்டங்களை ஒடுக்கியது.

1948ஆம் ஆண்டு பலஸ்தீனத்தைப் பிரித்தது. பின்னர், பலஸ்தீனர்களை நாடற்றவர்களாக மாற்றியது.

இன்று இஸ்ரேல் மேற்குக் கரையை இணைத்து, காஸாவை நிர்மூலமாக்கி, மக்களை பட்டினி போட்டுக் கொல்லும்போது, தமது நாடு விட்ட தவறை பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக் கொள்வதொன்றும் ஆச்சர்யமில்லை அல்லவா?

ஆனால், இது மனசாட்சியின் நேர்மையான வெளிப்பாடா என்ற கேள்வி எழுகிறது.

தவறை ஏற்றுக் கொள்வதில் நேர்மை இருந்தால், பரிகாரத்தில் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்.

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூடும்போது, பலஸ்தீனத்தை ஒரு இராஜ்ஜியமாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் பிரதமர் பேசுகிறார்.

இஸ்ரேலியப் படைகளுக்கு ஆயுதங்களை விற்று, ஒட்டுமொத்த பலஸ்தீனர்களையும் வேரோடு களைந்து விடும் முயற்சிகளுக்கு உதவி செய்து, பலஸ்தீன இராஜ்ஜியத்தை அங்கீகரிக்கிறாம் என்பது எந்தவிதமான நேர்மை?

ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் (Arthur Balfour)

மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியிருப்புக்களை அமைப்பது, நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை என பிரிட்டனின் அரசியல் தலைவர்கள் கூறுவார்கள்.

ஆனால், அந்தக் குடியிருப்புப் பிரதேசங்களில் இயங்கும் அமைப்புக்களில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு செய்து இலாபமீட்ட இடமளிப்பார்கள்.

பிறகு, பலஸ்தீன இராஜ்ஜியத்தை அங்கீகரிப்பது பற்றி பேசுவார்கள்.

ஸியோனிஸத்திற்கு ஆயுதம் வழங்கி, இப்போது இராஜ்ஜியம் பற்றி பசப்பு வார்த்தை கூறி பாவமன்னிப்பு தேடுதல் பிரிடடனின் சூட்சுமம் என்பார், இஸ்ரேலின் வரலாற்று ஆசிரியர் இலன் பாப்பே.

பாவமன்னிப்புக்காக பலஸ்தீன இராஜ்ஜியம் பற்றி பேசுவது ஏன்?

இன்று காஸாவில் நிகழும் அட்டூழியங்களின் முன்னிலையில், பூகோள தெற்கு நாடுகளில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வலுவான அலையொன்று உருவாகி வருகிறது.

இந்த அலை மேலைத்தேய நாடுகளிலும் பரவி, இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அந்நாட்டு அரசுகளுக்கு கொடுத்து வருகி;ன்றது.

அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்து பிரான்ஸ், ஜப்பான், கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் சில நிபந்தனைகளுடன் பலஸ்தீன இராஜ்ஜியத்தை அங்கீகரிக்க முன்வந்துள்ளன.

இந்த வரிசையில் இணைந்து கொண்டு பிரிட்டனும் பலஸ்தீன இராஜ்ஜியத்தை அங்கீகரிப்பதன் மூலம் பாவத்திற்கு பரிகாரம் தேட முனைவதாக கருத முடியும்.

ஐக்கிய நாடுகளின் 193 நாடுகளை எடுத்துக் கொண்டால், 147 நாடுகள் பலஸ்தீன இராஜ்ஜியத்தை அங்கீகரிக்கின்றன. பிரான்ஸூடன் சேர்ந்து பிரிட்டனும் அங்கீகரிக்கும் பட்சத்தில், ஐநா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரம் கொண்ட நாடுகளில் அமெரிக்கா மாத்திரமே பலஸ்தீனத்தை அங்கீகரிக்காத நாடாக இருக்கும்.

ஐநா பாதுகாப்புச் சபையில் பலஸ்தீனத்தை இராஜ்ஜியமாக அங்கீகரிப்பது, பலஸ்தீன மக்களின் அவலங்களுக்கு தீர்வு காணும் முயற்சியின் ஆரம்பப் புள்ளியாக இருக்குமே தவிர அதுவே தீர்வாக மாட்டாது.

இன்று பலஸ்தீன மக்கள் இஸ்ரேல் என்று வரையறுக்கப்பட்ட தேசத்தில் சிதறி வாழ்கிறார்கள். எல்லைகள் கிடையாது. தலைநகரம் இல்லை. தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இராணுவம் கூட கிடையாது.

மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியிருப்புக்கள் மத்தியிலேயே பலஸ்தீனர்கள் வாழ்கிறார்கள். சுயாட்சி உரிமைகள் இல்லை. இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயந்தே வாழ வேண்டி இருக்கிறது.

காஸாவின் நிலைமையை விபரிக்கவே தேவையில்லை. வேலிபோட்டு அடைக்கப்பட்ட திறந்தவெளி சிறைச்சாலையாக இருந்து, இஸ்ரேலியப் படைகளின் கொலைக்களமாக மாறி, இன்று பட்டினிச் சாவில் உயிர்துறந்து அடையாளம் இன்றி புதைக்கப்படும் மயானபூமியாக காஸா மாறியுள்ளது.

இந்த இரு நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கி பலஸ்தீன இராஜ்ஜியத்தை அங்கீகரித்து விட்டால் மாத்திரம், பலஸ்தீனர்களின் அவலங்கள் தீரப் போவதில்லை.

சில சமயங்களில், இரத்தவெறி பிடித்த இஸ்ரேலிய தீவிர வலதுசாரித் தலைவர்களிடம் இருந்து பலஸ்தீனர்களைப் பாதுகாக்கக்கூடிய ஏற்பாடுகள் எதுவும் இன்றி பலஸ்தீன இராஜ்ஜியத்தை அங்கீகரித்;தால், இந்தத் தலைவர்கள் பலஸ்தீனர்களை மென்மேலும் சித்திரவதை செய்து இல்லாதொழிக்க முனையலாம்.

பலஸ்தீனர்கள் தொடர்பில் பிரிட்டன் அடங்கலாக ஒட்டுமொத்த உலகம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் காண வேண்டுமாயின், சில விடயங்களை புரிந்து கொள்வது நல்லது.

அங்கீகரித்தல் என்பது புண்ணிய காரியம் அல்ல. பலஸ்தீனர்களின் அடையாளமும், அவர்களின் மண்ணும், அவர்களின் எதிர்காலமும் முக்கியமானவை.

இந்த மக்களுக்கு நீதியை நிலைநாட்டாமல் வெறுமனே தேசத்தை மாத்திரம் அங்கீகரித்தல் என்பது, ஒரு வெற்றுக் கடவுச் சீட்டை வழங்குவதற்கு சமமானது.

பிரிட்டன் அரசாங்கம் பாவத்திற்கு பரிகாரம் காண வேண்டுமாயின், முதலில் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும். மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியிருப்புக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

தமக்கு சௌகர்யமான நேரத்தில் அன்றி, எதுவித நிபந்தனையும் இன்றி, இப்போதே பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும்.

பெல்ஃபர் உடன்படிக்கையின் மூலம் பலஸ்தீன மண் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாயின், அந்த மண்ணை மீண்டும் பலஸ்தீனர்களுக்கு வழங்க பிரிட்டன் நேர்மையான நடவடிக்கை எடுப்பது முக்கியமானது.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

Share.
Leave A Reply