உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று (21) உக்கிர நிலையை அடைந்தது. நேற்றிரவு ரஷ்யா 574 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை அனுப்பி உக்ரைனில் பெரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் லிவிவ், முகாசெவோ, டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு கட்டடங்கள், தொழிற்சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை நடத்தப்பட்ட உக்ரைன் – ரஷ்யா  தாக்குதல்களில் இதுவே பாரிய தாக்குதல் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உலகில் இயங்கிவரும் இராணுவக் கூட்டமைப்புகளில், மிகவும் பலம் பொருந்தியதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டமைப்பான “நேட்டோ”வில் இணைவதற்காக உக்ரைன் முயற்சித்து வருகிறது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதன் விளைவாக, 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் இந்த யுத்தம் தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் – ரஷ்யா இடையே நிலவி வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடனும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய தினம், ஒரே இரவில் 574 டிரோன்கள், 40 ஏவுகணைகளை உக்ரைனுக்கு ரஷ்யா அனுப்பி, மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கும், அதனால் விளைந்த அழிவுகளுக்கும் உக்ரைன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply