வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் கணவனாலும், அவனது குடும்பத்தாராலும் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள நொய்டாவின் சிர்ஸா பகுதியைச் சேர்ந்தவர் விபின் பாட்டி. இவருக்கும் நிக்கி என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 9 ஆண்டுகளான பின்னரும் கூட நிக்கியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.

Delhi Dowry Murder: தாய் தீப்பற்றி எரிவதை பார்த்த மகன்

வரதட்சணை கொடுமை முற்றியதில் அந்த பெண்ணை தீ வைத்து கணவன் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த பெண்ணின் மீது தீப்பற்றி எரியும் நிலையில், பெண் படிக்கட்டுகளில் ஓடி வரும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தீக்காயம் அடைந்த பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) உயிரிழந்தார்.

அந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனது தாய் தீப்பற்றி எரிவதை அவரது இளைய மகள் நேரில் பார்த்ததாக தெரிவித்ததுதான் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம், தனது தந்தையும், பாட்டியும் சேர்ந்துதான் தனது தாயாரை கொடுமைப்படுத்தி அவரை தீவைத்து எரித்ததாக மகன் தெரிவித்துள்ளார்.

Delhi Dowry Murder: சிறுவன் கூறியது என்ன?

அந்த சிறுவன் கண்ணீர் மல்க ஊடகத்திடம் பேசுகையில், “முதலில் அம்மாவின் மீது எதையோ ஊற்றினார்கள்.

அதன்பின் அவர்கள் அவரை அறைந்தார்கள். அதற்கு பின் லைட்டரை வைத்து அவருக்கு தீவைத்தனர்” என்றான். மேலும், அங்கிருந்த சிலர், ‘உனது அப்பா தான் தாயை கொன்றாரா?’ என்ற கேள்விக்கு அந்த சிறுவன் ஆம் என தலையாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 9 ஆண்டுகள் கழித்தும் பெண்ணை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்திருப்பதை பலரையும அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும், நிக்கி திருமணம் செய்த அதே குடும்பத்தில், நிக்கியின் மூத்த சகோதரியான காஞ்சனும் ஒருவரை திருமணம் செய்துள்ளார். வரதட்சணைக்காகவே நிக்கியின் கணவனும், அவனின் குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக காஞ்சன் கூறியிருந்தார்.

Delhi Dowry Murder: நேரில் பார்த்த மூத்த சகோதரி

மேலும், காஞ்சன் இதுகுறித்து, “நாங்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டோம். எங்கள் மாமியார் திருமணத்திற்கு இது கொடுக்கவில்லை, அது கொடுக்கவில்லை என்று எங்களிடம் கூறுவார். எங்கள் வீட்டில் இருந்து 36 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுத் தர சொன்னார்கள்.

வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நானும் அவர்களால் தாக்கப்பட்டேன். அவர்கள் என்னிடம், ‘ஒருவருக்கு வரதட்சணை வாங்கினோம், மற்றவருக்கு என்ன? நீ இறந்தால் நல்லது. நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வோம்’ என்று சொன்னார்கள்” மிக மன வருத்தத்துடன் கூறினார்.

ஆனால், முடிந்தவரை நிக்கியை காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை என கூறிய அவர் காஞ்சன் தனது தங்கை அனுபவித்த கொடுமையை அவர்களும் அனுபவிக்கும்படி செய்வேன் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

Delhi Dowry Murder: வெளியான வீடியோக்கள்

நிக்கி உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பல்வேறு வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஒரு வீடியோவில், நிக்கியின் கணவனும், மாமியாரும் நிக்கியின் தலைமுடியை பிடித்து இழுத்து அவரை தாக்குவதை பார்க்க முடிந்தது. மற்றொரு வீடியோவால் நிக்கி தனது உடலில் கடுமையான தீக்காயங்களுடன் படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது.

Delhi Dowry Murder: கணவன் கைது… மற்றவர்களுக்கு வலைவீச்சு

பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியுடன் நிக்கி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்து டெல்லி சாஃப்தர்ஜூங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், அவர் அங்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, கான்சா காவல் நிலையத்தில் நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சன் புகார் அளித்துள்ளார். அதில் நிக்கியின் கணவன் விபின் பாட்டி, மைத்துனர் ரோஹித் பாட்டி, மாமியார் தயா, மாமனார் சாத்வீர் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
Delhi Dowry Murder: நிக்கிக்காக நீதி கேட்கும் மக்கள்

தற்போது நிக்கியின் கணவரை போலீசார் கைது செய்த நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் கான்சா காவல் நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று நிக்கிக்கு நீதி கிடைக்க போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் ‘Justice For Nikki’ என்ற பதாகையுடன் போராடி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply