போரிடும் நாடுகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரும் மற்றொரு முயற்சி தள்ளாட்டம் காண்கிறது.
ரஷ்ய, உக்ரேனிய தலைவர்களை சந்திக்க வைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்பவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
இருதரப்பு பேச்சுவார்த்தை சாத்தியப்படுகிறதோ, இல்லையோ, போர் நிற்பதாகத் தெரியவில்லை. மீண்டும் உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியிருக்கிறது.
உக்ரேனிய, ரஷ்ய யுத்தத்தை நிறுத்துவேன் என்பது டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் கால உறுதிமொழி. அதற்கு பொருத்தமான வழி, ரஷ்யத் தலைவரையும் உக்ரேனிய ஜனாதிபதியையும் நேரடியாக சந்திக்க வைப்பது தானென்பது அவருக்குத் தெரியும்.
இந்த யுத்தத்தைப் பொறுத்தவரையில், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புட்டினுக்கு நீண்டகால கோரிக்கைகள் உண்டு. உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு மாத்திரமன்றி, அவருடன் அணி சேர்ந்துள்ள ஐரோப்பிய தலைவர்களுக்கும் நிபந்தனைகள் இருக்கின்றன.
இருசாராருக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அவை லேசுப்பட்ட வேலை அல்ல.
அமெரிக்க ஜனாதிபதி, கடந்த வாரம் முதலில் விளாடிமிர் புட்டினை அலாஸ்காவில் சந்தித்தார். பிறகு, வொலோடிமிர் ஸெலென்ஸ்கியையும், முக்கியமான ஐரோப்பிய தலைவர்களையும் திங்கட்கிழமை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசினார்.
இரண்டு சந்திப்புக்களையும் தொடர்ந்து, சமூக ஊடகமொன்றில் பதிவிட்டார், ட்ரம்ப். முதலில் புட்டினும், ஸெலென்ஸ்கியும் நேரடியாக பேசும் சந்திப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறினார். தொடர்ந்து, தாமும் பங்கேற்கக்கூடிய முத்தரப்பு சந்திப்பை நடத்த முடியும் என்றார்.
இதற்குரிய ஏற்பாடுகளில் வெள்ளை மாளிகை தீவிரம் காட்டி வரும் வேளையில், பேச்சுவார்த்தை பற்றி முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
ஸெலென்ஸ்கியை சந்திக்க புட்டின் இணங்குவாரா என்பது முதற்கேள்வி.
இங்கு உக்ரேன் மற்றும் ஸெலென்ஸ்கி மீது புட்டின் கொண்டுள்ள நிலைப்பாடுளை கவனத்திற்கொள்ள வேண்டும்.
உக்ரேன், ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நிலப்பரப்பு. அது ரஷ்யாவிற்கு சொந்தமானது என்பதால், உக்ரேன் என்ற நாட்டையே அங்கீகரிக்க முடியாது என புட்டின் கருதுகிறார்.
இல்லாததென தாம் கருதும் நாடொன்றின் தலைவருடன் பேச்சுவார்த்தைக்காக அமர்வதை அவல நகைச்சுவையாகவே புட்டின் பார்க்கிறார்.
மறுபுறத்தில், ஸெலென்ஸ்க்கி ஒரு நாஸி, மேற்குலகின் நூலில் ஆடும் பொம்மையென்ற கருத்தை ரஷ்ய மக்களின் மனங்களில் வேரூன்றச் செய்தவர், புட்டின்.
போதாக்குறைக்கு, உக்ரேனில் தேர்தல்களைப் பின்போட்டு ஆட்சியில் நீடித்திருப்பவரை எப்படி சட்டபூர்வமான தலைவராகக் கருதலாம் எனவும் புட்டின் கேள்வி எழுப்புகிறார்.
இத்தகைய பின்புலத்தில், ஸெலென்ஸ்கியை சந்திக்க புட்டின் தயாராக இருக்கிறார் என ட்ரம்ப் கூறினால், அதனை எப்படி நம்புவது என்ற கேள்வி எழலாம்.
எந்தவொரு சந்திப்பும் படிப்படியாக நிகழ வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் நாட்டு மக்களிடம் கூறியதன் தாற்பர்யத்தை நோக்க வேண்டும்.
கடந்த மே மாதத்தில் ஸெலென்ஸ்கியை சந்திக்கலாமெனக் கூறிய புட்டின், கடைசியில் உக்ரேனிய ஜனாதிபதியுடன் பேச ஒரு வரலாற்று ஆசிரியர் தலைமையிலான குழுவையே அனுப்பியிருந்தார்.
உக்ரேனிய ஜனாதிபதி முன்வைக்கும் நிபந்தனைகளுள் போர்நிறுத்தமும், ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரேனிய நிலப்பரப்பை மீண்டும் ஒப்படைத்தலும் முக்கியமானவை.
இரண்டாவது நிபந்தனையில் இப்போதைக்கு ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொள்ளுமாறு ஸெலென்ஸ்க்கியிடமோ, உக்ரேன் விட்டுக் கொடுக்கும் என்று புட்டினிடமோ டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறலாம்.
இதன் காரணமாக, புட்டின் சற்று இறங்கி வந்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்தை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது.
ரஷ்யாவுடன் பேசத் தயாராகும் உக்ரேனிய ஜனாதிபதியின் நிலை என்ன என்ற கேள்வியையும் நிராகரிக்க முடியாது.
வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ரஷ்யாவுடன் போரிடத் தயாரான சந்தர்ப்பத்தில் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் மலைபோல நம்பியிருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை.
அவரது மனதில் இரு நம்பிக்கைகள் இருந்தன. உக்ரேனுக்கு நேட்டோவில் அங்கத்துவம் கிடைக்கலாம். ஆபத்தான சமயங்களில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனைக் காப்பாற்றும் என ஸெலென்ஸ்கி நம்பினார்.
ஆனால், உக்ரேனுக்கு நேட்டோ அங்கத்துவத்தை வழங்குவது அமெரிக்காவிற்கு பிரச்சினை. நேட்டோ அங்கத்துவ நாடொன்று போரில் குதிக்குமானால், அந்நாட்டுக்கு உதவி செய்ய வேண்டியது ஏனைய நாடுகளின் கடமை.
உக்ரேன் நேட்டோ அங்கத்துவ நாடாக இருக்கும் பட்சத்தில், ரஷ்யாவுடனான யுத்தத்தில் உக்ரேனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தோள்களில் சுமத்தப்படும்.
என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ரஷ்யாவை இராணுவ ரீதியாக பகைத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலையில் அமெரிக்கா கிடையாது.
இதனால் தான், உக்ரேனிய பாதுகாப்பு உத்தரவாதங்களை அளிக்க முடியுமென ட்ரம்ப் கூறினார்.
இந்த இடத்தில் ட்ரம்ப் தந்திரம் செய்தார். எந்த சந்தர்ப்பத்திலும் அமெரிக்கப் படைகள் உக்ரேனிய மண்ணில் கால்பதிக்க மாட்டாதெனக் கூறி புட்டினை திருப்திப்படுத்தினார்.
மறுபுறத்தில், தேவையென்றால் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பி வைத்து உதவி செய்யும் என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதற்காகவெல்லாம் டொனால்ட் ட்ரம்ப் கொள்கைப் பிடிப்புள்ள இராஜதந்திரி என்று கூறி விட முடியாது. அவரது நிலைப்பாடு எப்படியும் மாறலாம். எந்த சந்தர்ப்பத்திலும் மாறக்கூடும்.

ரஷ்யாவிற்கு எதிராக போர் புரிய ஸெலென்ஸ்க்கியை தூண்டி விட்ட அமெரிக்கா, இன்று புத்தினுக்கு சார்பான நிலைப்பாட்டை அனுசரிக்கிறது.
ஒரு சமயத்தில் டொனால்ட் ட்ரம்ப், புட்டினை பாராட்டிப் பேசி, ஸெலென்ஸ்கியை பகிரங்கமாக கண்டித்தார். இன்னொரு சமயத்தில் உக்ரேனுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்தினார். அப்புறம், ரஷ்ய ஜனாதிபதி சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லையெனத் திட்டினார்.
சுற்றிச் சுழன்றடிக்கும் ட்ரம்ப், கடந்த வாரம் புட்டினின் பக்கம் சாய்ந்தார். அலாஸ்க்காவில் செங்கம்பள வரவேற்பு அளித்தார். உக்ரேனை ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளக் கூடாதென்ற ரஷ்யாவின் கோரிக்கைக்கு தலைசாய்த்தார்.
ரஷ்ய, உக்ரேனிய தலைவர்களின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகளை செய்பவர் என்ற ரீதியில், டொனால்ட் ட்ரம்ப்பை நம்புவது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது.
இந்தப் பேச்சுவார்த்தை தான், இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்த ஒரே வழியென்றால், போர் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையை உறுதியாக ஏற்படுத்திக் கொள்வதும் கானல் நீரை நம்புவது போன்றதொரு விடயம் தான்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-