இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் பயணிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது குறித்து வாதப்பிரதிவாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த வாதங்கள்/ கருத்துக்கள் குறித்து மூன்று விடயங்களை அவதானிக்க முடிகிறது.
பொருளாதார மீட்பர்: 2019 முதல் 2024 வரையான காலப்பகுதியில் பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடியின் போது 2022 – 2024 க்கும் இடையில் நாட்டை தூக்கி நிமிர்த்தியவர் என்று வாதிடுகின்றனர் ஒரு சாரார்.
அவரது சர்வதேச தொடர்புகளையும் , ஆளுமையையும் பயன்படுத்தி ஐ.எம்.எப். இடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பை பெற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினார் என்று கூறுகிறார்கள்
அவர்கள். அன்றைய தலைவர்கள் எவரும் நாட்டின் தலைமையை ஏற்க முன்வராத நிலையில், சாக்குப்போக்குகளை சொல்லி தட்டிக் கழித்த நிலையில் துணிச்சலுடன் நாட்டின் தலைமையை பொறுப்பெடுத்தவர் என்பது இவர்களது வாதத்தின் உச்சமாகும்.
அரச நிதி துஷ்பிரயோகம்: மறுதரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை தற்போது விசாரணையில் உள்ள ‘பொதுச்சொத்து கையாடல்’ தொடர்பாக குற்றம் சாட்டுகின்றனர்.
2023 இல் அவர் மேற்கொண்ட ஹவானா – நியூயோர்க் – லண்டன் பயணத்தின் போது 600 மில்லியன் ரூபா அரச நிதியை லண்டனுக்கான தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்தியதாக ரணில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது விடயமாகவே சந்தேக நபராக ரணில் கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் கைதை நியாயப்படுத்தும் இவர்கள் குற்றம் குற்றமே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் …….: இப்படி ஒரு தரப்பினர் வெளிக்கிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தரப்பினர் மேற்கூறிய வாதப்பிரதிவாதங்களுக்கு மாறாக இரண்டும் கெட்டான் நிலையில் தங்கள் அரசியல் சார்புத்தன்மைக்கேற்ப, கடந்த அரை நூற்றாண்டு கால பழைய அரசியல் நிகழ்வுகளுடன் ரணிலின் கைதை நியாயப்படுத்துகின்ற அரசியலை செய்கின்றனர். இதனால் இவர்களது கருத்துக்கள் விவகாரம் சம்பந்தப்படாத மிகவும் பலவீனமானதாக அமைகிறது.
உதாரணமாக ராஜபக்சாக்களை காப்பாற்றியவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தியவர்,
இனவாதி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் மருமகன் என்றெல்லாம் சமூக ஊடகப்பதிவுகளை பார்க்க முடிகின்றது. ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜயவீரவின் கொலைக்கு காரணமானவர் என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை பறிக்கும் தீர்மானத்திற்கு கை உயர்த்தியவர் என்றும் எழுதுகிறார்கள்.
இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியலில் விடயத்திற்கு வெளியே தேடித்தேடி, சுற்றி சுற்றி வளைப்பது ஒன்றும் புதிதல்ல. இது ஒருவகையில் சமூகத்தின் அரசியல் அறிவு மட்ட வறுமையை வெளிக்காட்டுகிறது.
அது சரி, யாழ்ப்பாணத்தில் ஊடகச் சந்திப்பு நடாத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்காவுக்குமா? அரசியல் வறுமை.
அவர் கறுப்பு யூலை, யாழ்ப்பாண நூலக எரிப்புக்கும் ரணில் பொறுப்பு என்று கூறியுள்ளார். அவர் அரசாங்க தரப்பு வாதத்தை முன்வைத்திருக்கவேண்டும் அல்லது இது நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் அது பற்றி பேசவில்லை என்று சொல்லியிருந்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும்.
இப்படி ரணில் விக்கிரமசிங்கவின் கைதை விடயத்திற்கு வெளியே சுற்றி வளைத்து பேசி ஜே.வி.பி. மூத்த அமைச்சர் ஒருவர் அரசியல் செய்யும் போது சாமானிய சமூக ஊடகப்பதிவாளர்கள் அவர்களின் கொள்ளவுக்கு ஏற்ப சரியோ, தவறோ தங்கள் கருத்தை பதிவிடுவது ஒருவகையில் விளங்கிக் கொள்ளக் கூடியதுதான்.
அப்படி என்றால் கறுப்பு யூலைக்கு ஜே.வி.பி. பொறுப்பு என்று கூறுவதையும், இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி.யின் இரண்டாவது ஆயுத அராஜகத்திற்கும், சுனாமி நிர்வாக கட்டமைப்பு நிராகரிப்புக்கும், ராஜீவ்காந்தியை தாக்கிய ஜே.வி.பி. கடற்படை சிப்பாயின் செயற்பாடுகளுக்கும், மலையக மக்களை இந்திய ஆக்கிரமிப்பாளர்களாக அறிவித்ததற்கும் பிமல் ரத்நாயக்காவும், ஜே.வி.பி.யும் பொறுப்பேற்பார்களா?
தமிழரசுக்கட்சியின் எம். ஏ. சுமந்திரன் தனது ‘X ‘ தளத்தில் பதிவிட்ட கருத்துக்கே பிமல் இப்படி மொட்டையாக முடிச்சுப் போடுகிறார். சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட முறை தவறு என்று கூறினால்,
அது தவறு அல்ல என்று நிருபிக்க வேண்டிய அமைச்சர் அதை தவிர்த்து அல்லது தட்டிக்கழித்து கறுப்பு ஜூலை, நூலக எரிப்பு பற்றி பேசுகிறார். சாதாரண சமூக ஊடகப்பதிவுகளுக்கும், பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரின் பதிவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இருந்தா அல்லது ரணிலின் வீட்டில் இருந்தா இதைச் சொல்கிறார் என்றும் அமைச்சர் பிமல் கேட்கிறார்.
இந்த கேள்வி மூலம் அமைச்சர் மக்களுக்கு சொல்ல வரும் செய்தி என்ன? சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஒன்றும், கொழும்பில் ஒன்றும் பேசும் தமிழ்த்தேசிய அரசியல்வாதி என்பதையா? அப்படியானால் பிமல் யாழ்ப்பாணத்தில் இருந்து சொன்னதால் தான் யாழ்.நூலக எரிப்பு, கறுப்பு யூலை பற்றி பேசி அரசியல் செய்கிறாரா?
ரணிலின் கைது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அச்சத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை, கைவைத்து விட்டோம் இனி வரப்போகும் விளைவுகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற பதட்டமும் அரசாங்கத்திற்கு இருக்கிறது.
ரணில் தான் புலிகள் இயக்கத்தை உடைத்தார் என்பவர்கள் யாழ்ப்பாண மேலாதிக்கத்தை மூடி மறைக்கின்றனர்.
ரணில் புலிகளை பிளவுபடுத்தும் அளவுக்கு பிராபாகரனும், கருணா அம்மானும் முட்டாள்கள் அல்ல.
சந்திரிகா ரணிலுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை பறித்ததற்கான நன்றிக்கடனா? என்று கேலி செய்கிறார்கள்.
ரணிலின் கைதை சந்திரிகா தவறானது என்று கூறுவதை ஒரு தரப்பால் ஜீரணிக்க முடியவில்லை. வாந்தி எடுக்கிறார்கள்.
இவர்கள் ஜே.வி.பி. சந்திரிகாவின் கணவர் விஜய குமாரணதுங்கவை கொலை செய்ததை மறந்து விடுகிறார்கள்.
ஆக, சந்திரிகா நன்றி செலுத்தவேண்டியது ஜே.வி.பி.க்கா? ரணிலுக்கா? ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜயவர்த்தன போட்ட பிச்சையே ஜே.வி.பி. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்க காரணம் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.
யாழ்.நூலக எரிப்புக்கு ரணில் பொறுப்பு என்றால் ஏன் ஜே.வி.பி.க்கான மன்னிப்புக்கு பொறுப்பாக முடியாது.
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 159 பேருடன் மிகப் பெரும்பான்மையுடன் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் அந்தளவுக்கு பலமாகவும், ஒற்றுமையாகவும் இல்லை.
ஆனால் ரணிலின் கைது எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் தற்காலிகமாகவாவது ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து அரசாங்கம் தளம்புகிறது என்பதையே தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் ஜே.வி.பி. அமைச்சர்களின் வாதமும், சகோதராக்களின் வாதமும் அமைகிறது.
பொதுவாக ரணிலுக்கான விசாரணை அழைப்பு வெள்ளிக்கிழமை நாள் குறிக்கப்பட்டுள்ளது. இது விசாரணையை இழுத்தடித்து வார இறுதி நாட்களில் விளக்கமறியலில் வைத்து மீண்டும் தொடர்வதற்கான தந்திரோபாயமாக சந்தேகிக்கப்படுகிறது.
இதை சுமந்திரனும் தனது பதிவில் தொட்டுச்செல்கிறார். ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் விசாரணைக்கு சென்று வந்துள்ளார்
அவர் இரவோடிரவாக ஓடி ஒழித்து விடமுடியாது. அப்படி இருக்கையில் விளக்கமறியலில் வைக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி அரசாங்கத்திற்கும், சட்டம், நீதித்துறைக்கும் உள்ள மறைமுக தொடர்பை காட்டுவதாக கொள்ளலாமா?
மின்சார வெட்டு விசாரணையின் போது ஏற்பட்டால் அவ்வாறான சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் கிளீன் சிறிலங்காவில் இல்லையா? அப்படியான எதிர்பாராத சந்தர்ப்பங்களில் அங்கு சமூகமளித்திருப்பவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இந்த அரசாங்கத்தில் தான் கொழும்பில் நீதிமன்றத்தில் கொலை விழுந்தது.
76 வயதான முன்னாள் ஜனாதிபதி உடல் ஆரோக்கியமற்றவர், அவரது மனைவியின் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
சட்டம் எல்லோருக்கும் சமம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க குற்றவாளியா? சுற்றவாளியா? என்ற தீர்ப்பு நீதித்துறை சார்ந்தது. ஆனால் சட்டம்/ நீதித்துறை கவனத்தில் கொள்ள வேண்டிய மனிதாபிமான அம்சங்கள் எங்கும் இருக்கின்றன.
சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றால் சட்டத்தின் ஓட்டையால் எப்படி நிராபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள், குற்றவாளிகள் தப்பிக்கொள்கிறார்கள்? இது சட்டம் கடமையில் தவறலாம் என்பதையா? சமம் என்பதையா?காட்டுகிறது.
சந்தேக நபர் ஒருவரை குற்றப்புலனாய்வாளர்களும், நீதிமன்றமும் குற்றவாளி போன்று கையாளமுடியாது. ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையை கண்காணிக்கும் வைத்தியர் 10 மணித்தியாலயங்களுக்கு மேல் வெப்பச் சூழலில் நீராகாரம் இன்றி இருந்திருக்கலாம் என்றும் அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்திருப்பதாகவும் கூறுகிறார்.
பொதுவாக சட்டம், நீதி, நிர்வாகம் சுயமாக இயங்கும் மேற்கு நாடுகளில் சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஏதாவது குடிக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும்.
மேலும் விசாரணை நீடித்தால் இடைவேளை வழங்கப்பட்டு ஓய்வெடுக்கவும், இயற்கை கடமைகளை முடிக்கவும் வாய்ப்பளிக்கப்படும்.
இந்த உரிமைகள் சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கே வழங்கப்படவில்லை என்றால் சி.ஐ.டி. விசாரணைக்கு செல்லும் சாதாரண பிரஜைகளின் நிலை எப்படியிருக்கும்?
இதை சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதா? மனித உரிமை மீறல் என்பதா? அதிகாரிகளின் தான்தோன்றித்தனம் என்பதா? இந்த விடயங்களில் முறைமை மாற்றம் பற்றியே அநுர பேசுகிறார் என்று மக்கள் நினைத்தார்கள். வாக்களித்தார்கள்.
ஜே.வி.பி./ என்.பி.பி. ஆதரவாளரான யுரூப்பர் ஒருவர் 21.08.2025 இல் இருநாட்களுக்கு முன்னரே இந்த கைது பற்றி அடித்துச்சொன்ன தகவல் ஒன்றும் சாதாரணமானதல்ல.
“கிச்சின் கபினட்” கசிவு என்றே கொள்ள வேண்டி உள்ளது. இவை அனைத்தும் சட்டம் நீதித்துறையின் சுயாதிக்கம் பற்றி கேள்விகளை எழுப்புகின்றன.
இது குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அதை மறுதலித்து ஐ.நா. வில் தன்னை பாதுகாக்க ரணிலை பலிக்கடாவாக்கியுள்ளதா? அரசாங்கம்..
ரணிலின் கைது மூலம் சர்வதேசத்தில் அநுர அரசாங்கம் வீழ்த்திய மாங்காய்களில் ஒன்று என்ன தெரியுமா? ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட சட்டம், நீதித்துறையின் குறைபாடுகளையும், அதன் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையீனத்தையும் மறைத்து ‘உள்ளகப்பொறிமுறை’ போர்க்குற்ற விசாரணைக்கு தமக்கு ‘தகுதி’ இருக்கிறது என்று காட்டி இராணுவத்தை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்ற முனைவதுதான் அந்த மாங்காய்.
எது எப்படியோ ரணில் விக்கிரமசிங்கவின் கைது பிராந்தியத்திலும், சர்வதேசத்திலும் அநுர அரசுக்கு எதிரான ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது என்பதையே இந்திய ஊடகவியலாளர்
ஒருவரின் ரணில் பொதுநிதியை துஷ்பிரயோகம் செய்தார் என்று கொள்ள முடியாது என்ற வாதமும், நோர்வேயில் இருந்து எரிக்சொல் கைம் ரணிலுலுக்காக ஆசியப்பிராந்திய தலைவர்களுடனும், சர்வதேசத் தலைவர்களுடனும் இணைந்து கொள்கிறேன் என்று விடுத்துள்ள அறிக்கையும் வெளிச்சம் போடுவதாக உள்ளது.
குற்றவாளிகள் ரணில் அல்ல கடவுளாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது நீதிமன்றத்தின் வேலை.
ஆனால் சந்தேக நபர் ஒருவரை ‘குற்றவாளியாக’ புனைவதும், பொதுச்சொத்து துஷ்பிரயோகத்துடன் சம்பந்தம் இல்லாத குப்பைகளை கிளறுவதும் சுற்றவாளி ஒருவரை குற்றவாளியாக்கி விடாது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாட்டின் முன்னாள் தலைவருக்கு சந்தேகநபர் என்ற அந்தஸ்தில் வைத்து அதற்குரிய கௌரவமும், மனிதாபிமானமும் காட்டப்படவில்லை என்பதாகும். ஒரு வகையில் இது சந்தேக நபர் ஒருவருக்குரிய மனித உரிமைகளை சட்டம், நீதித்துறை மீறுவதாகும்.
— அழகு குணசீலன் —