அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்புகளை அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 11 சத வீத வரியை விதித்தார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இவ்வாறு சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரியை விதித்தார்.
டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகள் அவரது அதிகார மீறல் என விமர்சித்தனர். அத்துடன், அந்த அனைத்து உத்தரவுகளையும் நிரந்தரமாக இரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினர்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ஜனாதிபதி டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிப்பதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு, உலக நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.