-இந்தியாவின் பிரபல நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு உறுதிபடக் கூறுகின்றது
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தி.மு.கவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். ஆனால், த.வெ.க சட்டசபைத் தேர்தல் களத்தில் தி.மு.கவுக்கு உதவக்கூடும் என்கிறது இந்தியா ருடே – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்.
மிகவும் பிரபலமான இவ்விரு நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் புறக்கணிக்க முடியாதவையென்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தி.மு.கவின் வெற்றிக்கு விஜய் மறைமுகமாக உதவப் போகிறார் என்று அந்தக் கருத்துக் கணிப்புக் கூறுகின்றது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன.
தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ கூட்டணி) மறுபுறமும் தேர்தல் பணிகளில் பல்வேறு உத்திகளை வகுத்து செயற்படத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின் த.வெ.கவும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும் என இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான இந்தியா ருடே மற்றும் சி வோட்டர் இணைந்து Mood of the Nation என்ற தலைப்பில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளன.
தி.மு.க தலைமையிலான கூட்டணி இன்றும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று உறுதியாகச் சொல்கிறது அக்கருத்துக் கணிப்பு.
தமிழ்நாட்டின் 39 இடங்களில் 36 இடங்களை தி.மு.க கைப்பற்றும் என்று இந்த கருத்துக் கணிப்பு கணித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையான பிரசாரத்தை மேற்கொண்ட போதிலும், பா.ஜ.கவினால் சில இடங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை.
2025 பெப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட மூட் ஒஃப் தி நேஷன் (Mood of the Nation) கருத்துக் கணிப்பு, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி 39 மக்களவைத் தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெறும் என்று கணித்திருந்தது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் 47 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த இந்தியா கூட்டணிக்கு பெப்ரவரி மாதத்தில் 52 சதவீதமாக உயர்ந்திருந்த வாக்கு சதவீதம், தற்போது 48 சதவீதமாக குறைந்திருப்பதாக இந்தியா ருடே – சி வோட்டர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் தனித்தனியே களம் கண்டு, மொத்தமாக 41 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இந்த ஆதரவு பெப்ரவரியில் 21 சதவீதமாக குறைந்ததாகவும், மீண்டும் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி உருவான நிலையில் தற்போது 37 சதவீதமாக தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க வருகையால் யாருக்கு பாதிப்பு?
2024 இல் 12 சதவீதமாக இருந்த பிற கட்சிகளின் வாக்கு வங்கி, பெப்ரவரியில் 7 சதவீதமாக சரிந்ததாகவும், தற்போது த.வெ.க தேர்தல் களத்தில் களமிறங்கி உள்ள நிலையில், பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 15 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் இந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க கூட்டணிக்கு, முன்பை விட வாக்குகள் சற்று சரிந்திருந்தாலும், விஜய் வருகை தி.மு.கவுக்கு உதவிக்கரமாக இருக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்கள் விஜய் கட்சிக்கு வாக்களிக்கக் கூடும் என்றும் அது அ.தி.மு.க – பா.ஜ.கவுக்கு விழ வேண்டிய வாக்குகளைப் பிரிக்கும், எனவே இது தி.மு.கவுக்கே மறைமுகமாகப் பயனளிக்கும் என்றும் அக்கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் தி.மு.கவையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். ஆனால், அவரது அரசியல் வருகை தி.மு.கவுக்குத்தான் பலன் அளிக்கும் என்று இக்கருத்துக் கணிப்பு உறுதியாகக் கூறுகின்றது.
தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைத்தான் விஜய் பிரிப்பார் என்பதால், தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.கவுக்கு பெருத்த அடி விழும் என்கிறது இந்த கருத்துக்கணிப்பு.
இதுஒருபுறமிருக்க, “தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. அடுத்த இடத்திற்கு சீமானும் விஜய்யும் போட்டி போட்டுக் கொள்ளலாம்” என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளதையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
“விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் போட்டி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையேதான் உள்ளது.
விஜய் மாற்று சிந்தனையை சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், விஜய்காந்த் ஆகியோரைத்தான் சேர்த்து இருக்கிறார். புதிய சிந்தனையில் இல்லாமல் புதிய கட்சி எதற்கு?” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் மணி கருத்துத் தெரிவிக்கையில், எனக்குத் தெரிந்தவரை 15 சதவீதம் வரை விஜய் வாக்குகள் பெறுவார் என்று கருதுகிறேன். இன்னும் அவர் தீவிர அரசியலுக்குள் வரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.