கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்காவுக்கு (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் குழுவால், வழக்கத்திற்கு மாறான பிரகாசமான செம்மஞ்சள் நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல் உயிரியல் வல்லுநர்கள் இதை ஒரு அரிய வகை  கண்டுபிடிப்பாக கருதுகின்றனர்.

ஏனெனில், இந்த நிறத்தில் உள்ள சுறா இதுவரை உலகில் வேறெங்கும் கண்டறியப்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுறாவின் அசாதாரண நிறத்திற்கு காரணம், சாந்திசம் (xanthism) எனப்படும் ஒரு அரிய மரபணு நிலைதான்.

இந்நிலையில், உயிரினங்களின் தோலில் உள்ள கருமையான நிறமிகள் (pigments) குறையும்போது, மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறங்கள் மிகவும் பிரகாசமாக வெளிப்படுகின்றன.

வழக்கமாக, செவிலி சுறாக்கள் (nurse sharks) பவளப்பாறைகள் அல்லது பாறை நிறைந்த கடல் தளங்களில் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன.

ஆனால், இந்த சுறாவின் இந்த நிறம், அதன் வழக்கமான தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.

இந்த சுறாவுக்கு மேலும் தனித்துவத்தை சேர்ப்பது, அதன் வெண்மையான கண்கள். இது இந்த சுறாவுக்கு அல்பினிசம் (albinism) எனப்படும் மற்றொரு மரபணு குறைபாடும் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. அல்பினிசம் என்பது மெலனின் (melanin) என்ற நிறமியின் உற்பத்தி குறைவதாலோ அல்லது இல்லாமலோ ஏற்படுவது. இது ஒரு உயிரினத்தின் தோல், முடி மற்றும் கண்களின் நிறத்தை வெண்மையாக மாற்றும்.

இந்த சுறாவின் கண்டுபிடிப்பு, கடலில் வாழும் உயிரினங்களின் மரபணு மாறுபாடுகள் குறித்து மேலும் ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கத்திற்கு மாறான நிறங்களைக் கொண்ட உயிரினங்கள் வேட்டையாடுபவர்களால் எளிதில் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த செம்மஞ்சள் நிற சுறா முழுமையாக வளர்ந்த நிலையில் காணப்பட்டதால், அதன் அசாதாரண நிறம் அதன் உயிர்வாழ்வை பாதிக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply