அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீதான விசா கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், பார்வையாளர் விசாக்களுக்கான அனுமதிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடைநீக்கம், மருத்துவ சிகிச்சை, பல்கலைக்கழக படிப்பு, வணிகப் பயணம் மற்றும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைப் பார்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த விசா கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் காசாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த புதிய திட்டம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இம்மாத ஆரம்பத்தில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பாலஸ்தீன ஆணையகத்தின் உறுப்பினர்களின் விசாக்களையும் இரத்து செய்துள்ளார்.
இதனால் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பாலஸ்தீன ஆணையகத்தின் உறுப்பினர்கள் நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் கலந்து கொள்ள தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாலஸ்தீனத் தலைவர்கள் பயங்கரவாதத்தை கைவிடத் தவறிவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளனர்.