இலங்கை மக்கள் மாத்திரம் அல்லாது சர்வதேச நாடுகள் பலவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது அவதானம் செலுத்தியிருந்தது.
இதனால் கடந்த வாரம் முழுவதும் நாட்டில் ஒரு பரபரப்பான நிலைமையே காணப்பட்டது. எனெனில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுகிறார்.
மறுபுறம் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய என அழைக்கப்பட்டவர் திடீரென கைதாகின்றார். இந்த கைது குறித்து சமூக ஊடக செயல்பாட்டளர் ஒருவர் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு பல சர்ச்சைக்குறிய சம்பவங்களின் பின்னணியில் ஆளும் கட்சியின் கரம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. ஆனால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு செல்வதற்கு முன்னல் ரணில் விக்கிரமசிங்க தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதன போது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்தமை குறித்து சட்டத்தரணிகள் சந்தேகங்களை ஆரம்பத்தில் தெரியப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும் அழைக்கப்பட்ட திகதியை மாற்றக் கூடாது என்றும் வருவது எதுவாக இருந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சட்டத்தரணிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தார்.
‘வெள்ளிக்கிழமை அழைப்பது அரசியல் காரணிகளின் அடிப்படையில் இரு நாட்களாவது சிறையில் அடைப்பதற்காக தான்’ என சட்டத்தரணிகள் தெளிவாக கூறியப்போதிலும், ரணில் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு
லண்டன் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அழைப்பிதழையும் எடுத்துக்கொண்டு குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு ரணில் விக்கிரமசிங்க சென்றார்.
இருப்பினும் நீண்ட விசாரணையை தொடர்ந்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீண்ட நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் நான்கு நாட்கள் சிறைவைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக போராடின.
இதேவேளை அரசாங்கம் திட்டமிட்டு அரசியல் பழிவாங்கலை முன்னெடுக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவில் ஆரம்பித்து, தனக்கு அரசியல் ரீதியில் சவாலான அனைத்து தரப்புகளையும் ஒடுக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
எனவே இனியும் பொறுமைக்காப்பது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஒன்றிணைந்து எதிர்ப்பதன் ஊடாக அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை தோல்வியடைய செய்ய முடியும் என்ற ஒரு நிலைப்பாட்டிற்கு வந்த பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கின.
தொனிப்பொருளை உருவாக்கிய விமல்
இவ்வாறு எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுகையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு தொனிபொருளின் கீழ் முன்னெடுக்கும் வகையில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ‘ அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்’ என்ற தொனிப்பொருளினை முன்வைத்தார்.
இதனை அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். விமல் வீரவன்சவின் தொனிப்பொருளின் கீழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
பொது எதிரணி உருவாக்கம்
மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்கவை சிறையிலிருந்து மீட்கும் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
ரணில் விக்கிரமசிங்க சிறையிலிருந்த போதும், தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், பல முறை அவரை பார்ப்பதற்கு சஜித் பிரேமதாச சென்றிருந்தார்.
ஒரே நாளின் இருமுறை சென்றிருந்த சந்தர்ப்பமும் இருந்தது. அதே பேன்று ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ரணிலை பார்ப்பதற்காக சென்றிருந்தனர்.
ஏதிர்க்கட்சி தலைவர் அலுவலகமும், கொழும்பு 7 அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகமும் அரசியல் தலைவர்களின் சந்திப்புகளினால் பரபரப்பாகவே காணப்பட்டது. இதன் போது தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொது எதிரணியை உருவாக்கும் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் வியூகம்
திங்கட்கிழமை வைத்தியசாலைக்கு சென்ற சட்டத்தரணிகள் குழு ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி இருந்தது.
முன்னாள் சட்டமாதிபர் திலக் மாரப்பனவின் தலைமையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கினை எதிர்கொள்ள இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
இதன் போது தேவையான ஆலோசனைகளை ரணில் விக்கிரமசிங்க வழங்கினார். இதேவேளை, பிணை வழங்கப்பட்ட முன்னெடுக்க வேண்டிய பிரசார நடவடிக்கைகள் மற்றும் பிணை மறுக்கப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் ஷானுக கருணாரட்ன ஆகியோருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
அதே போன்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல ஆகியோர் கண்டிக்கு சென்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து நிலைமையை தெளிவுப்படுத்தி இருந்தனர்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தலதா அத்துகோரல மற்றும் அலி சப்ரி ஆகியோர் கொழும்பில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் குறித்தும் தெளிவுப்படுத்தினர்.
சஜித் – ரணில் இணைவு
ரணில் விக்கிரமசிங்கவின் கைதினை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலுவாக ஒன்றிணைந்து செயல்படுவதை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஆளும் தரப்பு உட்பட ஏனைய தரப்புகளும் அவதானம் செலுத்தியிருந்தன.
கட்சிக்குள் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து இரு தரப்புதே தனித்து பயணித்திருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் கைதினை தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இதன் வெளிப்பாடகவே ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடிய ரணிலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
ரணிலின் வழக்கு இடம்பெற்ற செவ்வாய்க்கிழமை அன்று ஆதரவாளர்கள் கொழும்பில் ஒன்றுக்கூட உள்ளமையை அறிந்த ஆளும் கட்சி, அதனை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இருப்பினும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்க வில்லை.
சஜித்திற்கு நன்றி கூறிய ரணில்
வழக்கு விசாரணைகளின் பின்னர் பிணை வழங்கப்பட்டதும், ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைப்பேசி அழைப்பை எடுத்து நன்றி தெரிவித்தார். ‘ எனக்காக நீங்களும் ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டமைக்கு நன்றி’ என்று ரணில் விக்கிரமசிங்க இதன் போது குறிப்பிட்டார்.
‘சார். இந்த நடவடிக்கையை இத்துடன் நிறுத்தப்போவதில்லை. அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னோக்கி கொண்டுச் செல்லப்படும்’ என சஜித் பிரேமதாச ரணிலிடம் உறுதியளித்தார்.
‘இன்னும் ஓரிரு நாட்கள் எனக்கு வைத்தியசாலையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் பின்னர் வந்து அனைவரையும் சந்திக்கிறேன்’ என ரணில் பதிலளித்தார்.
துற்போது ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். ருவன் விஜேவர்தன, வஜிர அபேவர்தன, தலதா அத்துகோரல, அகில விராஜ் காரியவசம் மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் இந்த நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.
(லியோ நிரோஷ தர்ஷன்)