சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஷயங்கள் தொடர்பான விமர்சனங்கள் இப்போதும் குறைந்தபாடில்லை.

மாநாடு நடைபெற்ற தினத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் முக்தாரை தவெக தொண்டர்கள் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் முக்தார் வெளியேறு என்று முழக்கமிட்டு வெளியேற்றினர்.

இந்நிலையில் விஜய்யின் மாநாட்டு உரை தொடர்பாக நடிகர் எஸ்.வி. சேகர், பத்திரிகையாளர் முக்தாருக்கு அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பேட்டியில் இருவரும் மாறி மாறி விஜய்யை நக்கலுடன் விமர்சித்தது தொடர்பான வீடியோ துணுக்குகள் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

விஜய் தனது மாநாட்டு உரையில் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, ஸ்டாலின் அங்கிள். பதில் சொல்லுங்கள் அங்கிள். ஸ்டாலின் அங்கிள், வாட் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள் என்று விமர்சித்து பேசினார்.

அதேபோல், பிரதமர் நரேந்திரமோடியின் பெயரைக் குறிப்பிடும் போது, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களே என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சரை அங்கிள் என்று அழைத்ததற்கு பாஜகவினரே விஜய்க்கு கண்டனம் தெரிவித்ததை கடந்த நாட்களில் பார்க்க முடிந்தது.

இப்படி இருக்கும்போது, பத்திரிகையாளர் முக்தாருக்கு, நடிகர் எஸ்.வி. சேகர் அளித்த பேட்டியில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அதாவது, எஸ்.வி. சேகர் கூறும்போது, விஜய், தமிழ்நாடு முதலமைச்சரை அங்கிள் என்று அழைக்கும்போது, நான் பாசத்தில் விஜய்யை அங்கிள் என்று கூப்பிடக்கூடாதா?

50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. விஜய்யே பூமர் அங்கிள் தான். பிரதமரை மரியாதையுன் குறிப்பிடும்போது முதலமைச்சரையும் மரியாதையுடன் குறிப்பிட வேண்டும் என்று கூறினார்.

மாமானு கூப்பிடுவேன்: உடனே முக்தார், “நீங்கள் அங்கிள் என்று அழைத்தால் நானும் அங்கிள் என்று அழைப்பேன். ஆனால், நான் தமிழில் மாமா என்றுதான் அழைப்பேன்.

மாமா என்றால் பல அர்த்தங்கள் இருக்கிறதுதானே” என்றும் கூறுகிறார்.

விஜய்யால் நஷ்டம்: தொடர்ந்து பேசிய எஸ்.வி. சேகர், ” விஜய்யின் மெர்சல் படத்தை எனது நண்பர் ராமநாராயணன் தான் எடுத்தது. முரளி ராமசாமி தான் தயாரித்தது.

அந்த படத்தால் அவருக்கு ரூபாய் 100 கோடிகள் நஷ்டம். ஆனால் விஜய் அவருக்கு அடுத்த படத்திற்கான கால்ஷீட் கொடுத்து அவருக்கு உதவவில்லை.

விஜய் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால், திமுக கட்டாயம் வெற்றி பெற்றுவிடும். விஜய் எம்.ஜி.ஆரைப் பின்பற்றுகிறேன் என்று கூறுகிறார்.

எம்.ஜி.ஆர் நேரடியாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. அவர் திமுகவில் பொருளாளர் என்ற பொறுப்பில் இருந்து, திமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவை உருவாக்கி முதலமைச்சர் ஆனார்.

15 ஆண்டுகள் : விஜய் கேரவனில் இருந்து ஜார்ஜ் கோட்டைக்கு போய் விடலாம் என நினைக்கிறார்.

அது நடக்காது. வேண்டுமானால் அவரை சுமார் 15 ஆண்டுகள் மக்கள் பணி செய்யச் சொல்லுங்கள், அதன் பின்னர் வேண்டுமானால் அவருக்கு வாய்ப்பு உள்ளது.

அப்போது விஜய்க்கு 65 வயதுக்கு மேல் ஆகிவிடும். சிரஞ்சீவி அரசியலுக்கு வரும்போது 20 லட்சம் ரசிகர்கள் திரண்டார்கள்.

ஆனால் அவையெல்லாம் ஓட்டாக மாறவில்லையே. இப்போது அவர் வீட்டில் இருக்கிறார்” என்று கூறினார். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து எஸ்.வி. சேகர் கூறிய கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்தது.

Share.
Leave A Reply