இந்த தாக்குதல்களை அடுத்து, தோஹாவின் சில பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது

கத்தார் தலைநகர் தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக “துல்லியமான தாக்குதல்கள்” நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால், எந்த இடத்தில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன என்பதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறவில்லை.

ஆனால், ஏ.எஃப்.பி செய்தி முகமையின்படி, தோஹாவில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும் அதனால் புகை மேலெழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பேச்சுவார்த்தைக்கான தனது குழு தோஹாவில் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களை கண்டித்துள்ள கத்தார் வெளியுறவு அமைச்சகம், சர்வதேச சட்டங்களை இத்தாக்குதல்கள் கடுமையாக மீறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அன்சாரி கூறுகையில், ஹமாஸின் அரசியல் பிரிவை சேந்த பல தலைவர்கள் வசிக்கும், தோஹாவில் உள்ள குடியிருப்பு வளாகம் இத்தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இத்தாக்குதல்கள் கத்தாருக்கு எதிரான தீவிரமான அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார்.

“இத்தாக்குதல்களை கத்தார் வன்மையாக கண்டிக்கிறது, இஸ்ரேலின் பொறுப்பற்ற நடத்தையையும் பிராந்திய பாதுகாப்பில் தொடர்ந்து தலையிடுவதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என மீண்டும் கூறுகிறோம்.” என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply