ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.

திருட வந்ததாக கருதி பிரதேச மக்களினால் தாக்குதல் நடத்தப்பட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்தநிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி – புசல்லாவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸ் ஊடகப் பிரிவு பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றது.

எனினும், இந்த இளைஞரின் உயிரிழப்புக்கு தாக்குதல் சம்பவமா அல்லது சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டமை காரணமா என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது.

நடந்தது என்ன?

ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு கடந்த 6ம் தேதி இரவு கொழும்புவிலிருந்து வெலிமடை நோக்கி பயணிக்கும் பேருந்தில் வருகைத் தந்துள்ளதாக அவரது நண்பரான ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

”இவ்வாறு வருகைத் தந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், பேருந்தில் அசந்து தூங்கியுள்ளார்.”
தற்கொலை

”தனது சொந்த ஊரான புசல்லாவை தாண்டி, ரம்பொடை எனும் இடத்தில் வைத்தே ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் எழுந்துள்ளதுடன், தான் இறங்கும் இடத்தை தாண்டி பயணித்துள்ளமையை உணர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ரம்பொடை பகுதியில் இறங்கிய அவர், தனது உறவினர் வீடொன்றை நோக்கி சென்றுள்ளார்.” என்கிறார் ஸ்ரீகுமார்

மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது உறவினர் வீட்டை நோக்கி சென்ற ரவிச்சந்திரன் புவனேஸ்வரனுக்கு, உறவினர் வீட்டை தேடிக்கொள்ள முடியாத நிலையில், அவர் வேறொரு வீட்டை தட்டியுள்ளார் என்கிறார் ஸ்ரீகுமார்.

”அந்த வீட்டிலுள்ளவர்களிடம் தனது உறவினர்கள் குறித்து வினவிய நிலையில், அவர்கள் உறவினர்கள் என கூறப்படும் நபர்களை அழைத்து வினவியுள்ளனர்.

எனினும், உறவினர்கள் என கூறப்படுவோர், ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தெரியாது என கூறிய நிலையில், பிரதேச மக்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை திருடன் என கூறி அவரை கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.” என்கிறார் ஸ்ரீகுமார்.

இவ்வாறு பிரதேச மக்கள் தாக்கிய நிலையில், அங்குள்ள இளைஞர்கள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை தாக்கும் காட்சிகளை தமது தொலைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்து, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கொத்மலை போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், போலீஸார் ரவிச்சந்திரன் புவனேஸ்வரனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் புவனேஸ்வரனிடம் விசாரணைகளை நடத்திய நிலையில், அவரின் புசல்லாவையிலுள்ள உறவினர்களுக்கு விடயம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்திற்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்ததாகவும் அப்போது இந்த தகவலை அவர் பகிர்ந்ததாகவும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்தே, அடுத்த நாள் ரவிச்சந்திரன் புவனேஸ்வரன் தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”போலீஸிலிருந்து கூட்டிக் கொண்டு வரும் போதே அவர் எங்களிடம் ,’மாமா வீடு இருக்குனு சொல்லி தான் இரவில் போயிட்டேன். இவ்வளவு காலத்துக்கு நான் இப்படி அடி வாங்கியது இல்லை. அவமானமாக்கிட்டேன்.’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.” என ஸ்ரீகுமார், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் புவனேஸ்வரன், இரவு உணவு கூட உட்கொள்ளாத நிலையிலேயே இவ்வாறு தவறான முடிவை எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

தாக்குதல் நடத்தியமை மற்றும் தாக்குதல் நடத்திய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தமையே இந்த மரணத்திற்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.

போலீஸார் கூறுவது என்ன?

ரவிச்சந்திரன் புவனேஸ்வரனின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியது.

தாக்குதல் நடத்தி, வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டமை, இந்த மரணத்திற்கான காரணம் என்பது இதுவரை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என கூறிய போலீஸார், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் புசல்லாவை போலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

முக்கிய குறிப்பு

தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை உருவாகுமேயானால், உடனடியாக தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ளன.

707 308 308, 1333, 1926 போன்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக, தமது மனநிலையை சரி செய்துகொள்ள முடியும்.

இந்த இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக தற்கொலைகளை தடுக்க முயற்சி செய்ய முடியும்.
இந்தியாவில் உதவியை நாடுபவர்கள்

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

 

Share.
Leave A Reply