இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் (PA) அறிக்கையின்படி,
இந்தத் தடையால் அந்நிய செலாவணியில் மில்லியன் கணக்கான டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ய, நாடு தற்போது ஆண்டுதோறும் சுமார் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்ய செலவிடுகிறது. ஐந்து ஆண்டுகளில் இந்த இழப்பு 175 மில்லியன் அமெரிக்க டொலரை கடக்கும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாம் எண்ணெய் , பிராந்திய தோட்டத் துறையில் மிகவும் இலாபகரமான பயிராக இருந்தது. இது சராசரியாக 49 சதவீதம் நிகர இலாபத்தை ஈட்டியது. இந்த திடீர் தடை சுமார் 23 பில்லியன் ரூபா முதலீடுகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், 550 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாற்றுக்கள் எவ்வித இழப்பீடும் இன்றி அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தத் தடை உணவு உற்பத்தித் துறைகளையும், குறிப்பாக பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்புத் துறையையும் பாதித்துள்ளது. இதனால் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பாம் எண்ணெய்க்கு மாற்றாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது, இலங்கையின் ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாக உள்ள தேங்காய் எண்ணெயின் ஏற்றுமதி வருவாயைக் குறைக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் தடை சுமார் 5,000 நேரடி வேலைவாய்ப்புகளையும் பாதித்துள்ளது, ஏனெனில் பாம் எண்ணெய் தொழிலாளர்கள் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக ஊதியம் பெற்று வந்தனர். முழுமையான தடைக்கு பதிலாக, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகள் பின்பற்றுவது போல, உலகளாவிய நிலைத்தன்மை தரநிலைகளை ஏற்று, பாம் எண்ணெய் துறையை மீண்டும் வளர்க்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.