பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (11) அவருக்கு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து, இராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு நீதிபதிகள் போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்.

சட்ட ஆட்சியை ஒழித்தல், ஆயுதமேந்திய குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

இந்தத் தீர்ப்பு, பிரேசிலின் அரசியல் பிரிவுகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. போல்சனாரோ ஆதரவாளர்கள் இதனை “அரசியல் பழிவாங்கல்” என்று கண்டித்து வருகின்றனர்.

அதேசமயம், தற்போதைய ஜனாதிபதி லூலா டா சில்வா, போல்சனாரோ பிரேசிலின் ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை மேற்கொண்டதற்கான “நூற்றுக்கணக்கான ஆதாரங்கள்” இருப்பதாகவும், இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

போல்சனாரோ, ஏற்கனவே மற்றொரு வழக்கில் 2030 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அது வெற்றிகரமாக அமைய வாய்ப்பு குறைவு என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

போல்சனாரோவுக்கு நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தத் தீர்ப்பு “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இது ஒரு “சூனிய வேட்டை” (witch hunt) என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply