மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டமான “E1” விரிவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

“இந்த இடம் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கு கரையில் உள்ள மாலே அடுமிம் குடியேற்றப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய நெதன்யாகு,

“நமது வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே.

இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் மற்றும் பாதுகாப்பு பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாக்கப்படும்” என்று கூறினார்.

சர்வதேச எதிர்ப்பால் பல ஆண்டுகளாக முடங்கியிருந்த “ E1 ” திட்டம், மேற்குக் கரையில் சுமார் 3,000 புதிய இஸ்ரேலிய வீடுகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது.

இந்தத் திட்டம், மேற்கு கரையை பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேமிலிருந்து துண்டிக்கும் என்பதால், எதிர்காலத்தில் சாத்தியமான பாலஸ்தீன நாடு உருவாவதை இது முற்றிலுமாகத் தடுக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச அமைப்புகள், E1 குடியேற்றத் திட்டம் குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளன. இந்தத் திட்டம் இரண்டு – அரசு தீர்வுக்கு (Two-State Solution) ஒரு “அச்சுறுத்தல்” என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை என்று ஐ.நா. தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் வசித்து வருகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply