நாட்டில் உள்ள அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு தமது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி ஊழியர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு கோரியும் அரச வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அரச வங்கி கூட்டு தொழிற்சங்க கூட்டணி இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்ததுடன், நேற்று காலை லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆராட்டக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் அரச வங்கி ஊழியர் சங்கத் தலைவர் சன்ன திஸாநாயக்க குறிப்பிடுகையில்,
நாட்டில் உள்ள சுமார் 6 அரச வங்கிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் வங்கிகளின் தலையீட்டினால் அரச வங்கி கட்ட டைப்பில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. அரச வங்கிகளின் நிர்வாகம் அரசாங்கத்தை சார்ந்துள்ளது. வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு நிதி அமைச்சிடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ள போதும் அவற்றை உரிய அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை.
இது தொடர்பில் நிதியமைச்சிடம் கலந்துரையாட நாம் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. கடந்த அரசாங்கத்தை போலவே, தற்போது அரச வங்கிகளை தனியார் மயமாக்க அரசாங்கத்தினர் முயற்சிக்கின்றனர். அண்மையில் இதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருந்தது. இதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு அரச வங்கிகளின் பங்குகளை தனியார் வங்களிடம் ஒப்படைப்பாளர்களாயின் எமது தொழிற்சங்க நடவடிக்கையையும் தீவிரப்படுத்த தயாராக உள்ளோம் என்றார்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து முன்னேறிச் செல்வதை தடுப்பதற்காக நீர்தாரை பீச்சு வாகனங்கள் தார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு நிலைமையை கருத்தில் கொண்டு பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன், கலகத் தடுப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். சேர். சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தையிலிருந்து லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பயணித்த ஆர்ப்பாட்டக்கார்கள், ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் ஒன்றையும் கையளித்திருந்தனர்.