வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகளும் ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

ஈக்வடேர் மாகாணத்தில், சுமார் 150 கிலோமீற்றர் தூரத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

மாகாணத்தின் லுகோலெலா பிரதேசத்திலுள்ள கொங்கோ ஆற்றின் குறுக்கே வியாழக்கிழமை மாலை, சுமார் 500 பயணிகளுடன் பயணித்த ஒரு படகு தீப்பிடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் உயிரிழந்ததாக கொங்கோவின் மனிதாபிமான விவகார அமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதன்கிழமை மாகாணத்தின் பசன்குசு பிரதேசத்தில படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 86 பேர் உயிரிழந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல்போனோர் குறித்த முழுமையான புள்ளிவிபர அறிக்கைகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் வெள்ளிக்கிழமை மாலை மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றனவா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

அதிக எடை மற்றும் இரவு நேர பயணம் என்பனவே புதன்கிழமை நடந்த படகு விபத்துக்கு காரணம்  என மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply