பிரிட்டன் தலைமையிலான தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை குறித்து நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி அங்கு கருத்துரைத்த இலங்கை  பிரதிநிதி, நாட்டில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் தெரிவித்துள்ளதுடன் அதனைத் தீர்ப்பதற்கு சிறப்புப் பொறிமுறைகள் எவையும் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.

அதேவேளை இலங்கை தொடர்பில் பேரவையில் ஏற்கனவே காலநீடிப்பு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்த 57ஃ1 தீர்மானம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இம்முறை கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60ஃஎல்.1 எனும் முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) இலங்கை நேரப்படி பி.ப 1.00 மணிக்கு ஜெனிவாவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரிட்டன், வட அயர்லாந்து, கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகளின் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகளும், பேரவையில் அங்கம்வகிக்கும் இலங்கைக்கு ஆதரவான மற்றும் எதிரான சில நாடுகளின் பிரதிநிதிகளும், ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி உள்ளிட்ட அதிகாரிகளும், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட வதிவிட அலுவலகப் பிரதிநிதி, இலங்கையில் இனப்பிரச்சினை நடைபெறவில்லை எனவும், மாறாக பயங்கரவாத மோதலே நடைபெற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply