மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை (17) இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை  முன்னெடுத்திருந்தன.

அதேவேலை இலங்கை மின்சாரசபைக்கு முன்பாக ஒன்றுகூடிய மின்சாரசபை ஊழியர்கள் தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்மாதம் 4 ஆம் திகதி முதல் மின்சார சபை ஊழியர்கள் மேலதிக சேவைகளில் இருந்து விலகி சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக தற்போது நேற்றும் இன்றும் இருநாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை அனைத்து தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள மின்சாரசபை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 800 ஊழியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட மின்சாரசபை ஊழியர்கள் புதன்கிழமை (17) காலை 11.30 மணியளவில் இலங்கை மின்சாரசபைக்கு முன்பாக ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது மின்சாரசபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை   உறுதிப்படுத்துவதோடு,  ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த சலுகை மற்றும் கொடுப்பனவை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.

மின்சாரசபை  ஊழியர்களின்  சலுகைகளையும் உரிமைகளையும் இரத்து செய்யாதே,  மின்சார சபை ஊழியர்களின் முன்மொழிவு  ஆவனத்தில் கைச்சாத்திடு, அனுர மின்சார  சபையை தனியார் நிறுவனங்களுக்கு விற்றார், அரசாங்கத்தினர் தேர்தலுக்கு முன்னர் பொய்யான வாக்குறுதிகளை மாத்திரமே எமக்கு  வழங்கினர் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் கோசமிட்டும் ஆர்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் நூற்றுக்கனக்கான போராட்டக்கார்கள் மின்சாரசபைக்கு முன்பாக  கூடியிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்கார்கள் முன்னோக்கிச் செல்வதை தடுப்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும்  பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும்  அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது இலங்கை மின்சாரசபை சுதந்திர ஊழியர்  சங்க செயலாளர் பிரபாத் பிரியந்த குறிப்பிடுகையில்,

கடந்த 4 ஆம் திகதி 24 முன்மொழிவுகளுடன் மின்சாரசபை தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கடிதத்துக்கு  அரச தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதில்களும் வழங்கப்பட வில்லை.  அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆட்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் அது உண்மையல்ல அவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால்  72 இலட்ச  மின் பாவனையாளர்களும்,  21 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்சார ஊழியர்களும்  நெருக்கடிக்கு ஆளாக்ககூடும்.

உழைக்கும் வர்க்கத்தின் அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் வகையில் செயற்படுகின்றனர். அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் செயலை ஒருபோதும் எம்மால் ஏற்கமுடியாது. நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து மின்சாரசபை ஊழியர்களின் வரப்பிரசாதங்களை இரத்து செய்துள்ளனர். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர்  அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு பதிலளிக்காதுவிடின்  எமது தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட  தயாராக உள்ளோம் என்றார்.

Share.
Leave A Reply