உ லக அரசியல்- பொருளாதார- இராணுவ மீள் ஒழுங்குமுறைக்கான காலப்பகுதியாக இக்காலப் பகுதி காணப்படுகிறது. அதற்கான பிரகடனம், அண்மையில் நடந்து முடிந்த ஷங்காய் ஒத்துழைப்பு மகாநாடு, அதனையடுத்து இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானை தோற்கடித்தமை, மற்றும் உலகளாவிய பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தின் எண்பதாவது வெற்றி விழா என்பனவற்றை சீனா கொண்டாடிய போது வெளிப்படுத்தப்பட்டது.

சீனாவின் இரு நிகழ்வுக்காகவும் உலகில் கீழைத்தேச நாடுகள் ஒன்றிணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய பிரகடனத்தின் வெளிப்பாடாக அமைந்ததுடன் அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்துக்கு பதிலீடாக சீனா தலைமையிலான உலகத்தை கட்டமைப்பதில் பீக்கிங் தெளிவான பிரிநிலையை காட்டியிருந்தது.

இக் கட்டுரையும் ஷங்காய் ஒத்துழைப்பு மற்றும் 80 ஆவது ஆண்டு நிறைவுக்கான சீன இராணுவ அணிவகுப்பையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

2001 ஆம் ஆண்டு ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஐந்து நாடுகளுடன் உருவாக்கப்பட்டு ஏறக்குறைய 24 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இவ்வமைப்பு தற்போது 26 நாடுகளைக் கொண்டதாக விரிவடைந்துள்ளது.

26 நாடுகளும் மேற்கு அல்லாத நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 20 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் பல நாடுகள் பார்வையாள நாடுகளாகவும் உரையாடலுக்கான நாடுகளாகவும் விளங்குகின்றன.

ஷங்காய் ஒத்துழைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் பொருளாதார அடிப்படையிலும் வர்த்தக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் முக்கியமானதாகவே காணப்படுகிறன.

அவ்வாறே இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்கள் இராணுவமும் பொதுமக்களும் இணைந்து அதனை எதிர்கொண்டதும் அதனை முறியடிப்பதற்கான நினைவையும் கொண்ட வெற்றிவிழாவை சீனா கொண்டாடியது.

இத்தகைய பிரமாண்டமான இராணுவ அணி வகுப்பை சீனா மேற்கொண்டதற்கு பாரிய நோக்கம் உள்ளதாகவே தெரிகிறது. அது உலகத்துக்கு அதிமுக்கிய செய்தியை தந்திருந்தது. அதனை ஆழமாக தேடுவது அவசியமானது.

முதலாவது ஷங்காய் ஒத்துழைப்பு மகாநாடு சீனாவில் தஞ்சான் நகரில் ஆகஸ்ட் 31 முதல் செப்ெடம்பர் 01 ஆம் திகதிவரை நடைபெற்றது.

இந்த மகாநாடு புதிய பூகோள பாதுகாப்பையும் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதற்கான சந்திப்பாக மாநாட்டில் தலைமை தாங்கிய சீன ஜனாதிபதி சி.ஜின்.பிங் தனது உரையில் குறிப்பிட்டார்.

இம்மகாநாடு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கு எதிரானதென்று மதிப்பீடு செய்யப்படுகிறது. காரணம் அமெரிக்காவின் வரி அணுகுமுறையினால் அதிர்ச்சி அடைந்த இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் இம்மாநாட்டில் சீனாவோடு கைகோர்த்திருந்தன.

இது மிக முக்கியமான அம்சமாக தெரிகிறது. உலகம் ஒரு புதிய மாற்றத்துக்கான பொது நிலைக்கான கட்டத்திற்குள் நுழைகிறது என்பதை ஜின்பிங் தனது உரையில் முதன்மைப்படுத்தியிருந்தார்.

அதே நேரம் நியாயமான சமநிலையான சர்வதேச நீதிக்கான கட்டமைப்பை உருவாக்க முன்வைக்கப்பட்ட கூட்டு முயற்சி என்றும் உலகளாவிய ஒழுங்கமைப்புக்கான நகர்வு என்றும் சீன ஜனாதிபதி மகாநாட்டின் கருப்பொருளை கட்டமைத்திருந்தார். அதன் பிரகாரம் புதிய பூகோள பாதுகாப்பும், பொருளாதார ஒத்துழைப்பும் என்பதாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது, இம் மகாநாடு இந்திய- சீன உறவுக்கான புதிய பாதைகளை முதன்மைப்படுத்தியிருந்தது. குறிப்பாக இரு நாட்டுக்குமான எல்லை முரண்பாடுகளை முக்கியத்துவப்படுத்துவதை விடுத்து வர்த்தகம் பொருளாதார ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் இரு தலைவர்களும் சந்தித்து உரையாடிக் கொண்ட விடயம் முதன்மையானதாக உள்ளது.

அவ்வாறே ரஷ்யா- சீனா- இந்தியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு பலமடைந்ததோடு பலமான ஒரு ஷங்காய் கட்டமைப்பு நிறுவப்பட்டது.

அதனை கடந்து பிரதானமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை மையப்படுத்தி வழிவரைபடம் ஒன்றுக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

அதனை நோக்கி 2026 மே மாதகாலப் பகுதியில் ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் புலமையாளர்களைக் கொண்ட உரையாடல் ஒன்றை பிஜிங்கில் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அது மட்டுமின்றி உலகளாவிய ரீதியில் A. I தொழில்நுட்பத்தின் நவீன வடிவங்களையும் அவற்றின் பிரயோகங்களையும் மக்களது பிரயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டதோடு அதற்கான உறுதிப்படுத்தல்களையும் மாநாட்டின் உறுப்பினர்கள் மேற்கொண்டு அங்கீகரித்தனர்.

இதனை கடந்து ஷங்காய் ஒத்துழைப்புக்கான புதிய வங்கி கட்டமைப்பை விருத்தி செய்வதென்றும் அது ஷங்காய் ஒத்துழைப்பு அபிவிருத்தி வங்கி என்றும் இனங்காணப்பட்டது.

உறுப்பு நாடுகளுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்தும் விதத்தில் நிதி உதவிகளை வங்கி வழங்கும் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டது.

இது அமெ.டொலர் மீதான நம்பிக்கையை குறைக்கும் என்றும் மாற்று நாணய பரிவர்த்தனை செயல்முறையை நிறுவுவதற்கான இலக்கைகொண்டதென்றும் உரையாடப்பட்டடுகிறது.

ஷங்காய் அமைப்பு மற்றும் பிரிக்ஸ் போன்ற அமைப்பின் நீண்ட கால இலக்கு என்பதையும் குறிப்பிட முயலுகின்றனர்.

இது மாற்றத்தை நோக்கி உலகத்தை நகர்த்துவது என்ற அடிப்படையில் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றினுடைய நடவடிக்கைகளை நேரடியாக இவ் வங்கியினால் சவாலுக்கு உட்படுத்தப்பட வாய்ப்பு இருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஏற்கனவே ஆசிய உட்கட்டமைப்பு வங்கியின் பங்குதாரரான சீனா 2025இல் 02பில்லியன் யுவான் நாணயத்தை இந்த நாடுகளுக்கு கடன் உதவியாக வழங்கி இருப்பது என்றும் அதனை 2026 இல் 10 மில்லியன் யுவானாக அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்திருந்தது. ஷங்காய் ஒத்துழைப்பு, புதிய பூகோளப் பாதை ஒன்றை திறப்பதற்கான சந்திப்பாக நிறைவடைந்தது.

மூன்றாவது ஷங்காய் ஒத்துழைப்பு மாகாநாடு ஏறக்குறைய மேற்குலகத்துக்கு எதிரான தெளிவான அணி திரட்டலையும் வெளிப்பாடுகளையும் தந்திருந்தது.

உலக சனத்தொகையில் வலுவான இரண்டு அரசுகளின் ஒத்துழைப்பு என்பது சந்தைக் கட்டமைப்பையும், வர்த்தக செய்முறையையும் பலப்படுத்துவதாக அமைவதோடு, புதிய நாணயம் பற்றிய உரையாடல் அல்லது நாணயப் பரிமாற்றம் பற்றிய உரையாடல் டொலருக்கு எதிரான அணுகுமுறையாகவே காணப்பட்டது. நிதி மூலதனத்தை மையப்படுத்திய உலக ஒழுங்கில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கமே காணப்பட்டது.

ஆனால் இது தற்போது கீழைத்தேச நாடுகளின் நிதி மூலத்தினால் நகர்த்தப்படுகின்றது என்ற தகவல் இம்மாநாட்டு வெளிப்பாடாக உள்ளது.

அமெரிக்காவின் வரி அணுகுமுறை மீளவும் பல்துருவ பனிப்போர் பொருளாதாரத்துக்கான கட்டமைப்பை ஸ்தாபித்திருப்பதாகவே தெரிகிறது.

முன்னைய பனிப்போர் உலகம் இரு நாடுகளுக்கு இடையில் நிகழ்ந்தது போல் அல்லாது, இது அணிகளுக்கு இடையிலான பனிப்போர் முனை போன்றதொன்றை ஷங்காய் ஒத்துழைப்பு தந்திருக்கின்றது.

நான்காவது சீனாவின் தலைநகரில் நிகழ்ந்து முடிந்த இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழாவில் முக்கியத்துவம் அவதானிக்கப்படுகிறது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆக்கிரமிப்பினால் எவ்வாறு 35 மில்லியன் சீன இராணுவமும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்ற செய்தியோடு உலக பாசிசத்துக்கு எதிரான போருக்கான நினைவுகளை வெற்றி விழாவுக்கு தலைமை தாங்கிய ஜின்பிங் முதன்மைப்படுத்தியிருந்தார்.

சீன மக்கள் இராணுவத்தின் தீரமான போராட்டத்தை நினைவுபடுத்துவதோடு, சீன உலக வரலாற்றில் தோற்றவர்களைப் போற்றவும், அமைதி மற்றும் நீதிக்கான அவாவை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஒரு புதிய நாளாக அன்றைய நாள் கொள்ளப்படுகிறது என ஜின் பிங் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய உரையாடல் அதன் அணிவகுப்பின் ஊடாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை தந்திருக்கிறது.

நான்காவது உலக ஒழுங்கை தனது திசைக்குள் ஏற்பதற்கு சீனா பலமான ஓர் இராணுவ அணி வகுப்பை முன்னிலைப்படுத்தியுள்ளதாகவே தெரிகின்றது.

பொருளாதார ரீதியாக ஷங்காய் மாநாட்டையும் இராணுவ ரீதியாக அணிவகுப்புகளையும் கையில் எடுத்துள்ள சீன ஆட்சியாளர்கள் அதன் மூலம் பாரிய மாற்றத்தை உலகத்துக்கு காட்சிப்படுத்தியுள்ளனர். மேற்குலகத்தின் இராணுவம் மற்றும் பொருளாதார பலத்துக்கு நிகராக சீனாவின் நிலை உள்ளது என்பதை மேற்குறித்த இரண்டு விடயங்களும் உறுதிப்படுத்துகின்றன.

அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட படை நகர்வுகள் மட்டுமின்றி ஆயுத தளபாடங்கள் தொழில்நுட்ப பயன்பாடுகளைக் கொண்ட ஆயுதங்களின் குவிப்புகள் போன்றன, சீனாவின் எதிர்கால உலகத்தை அடையாளப்படுத்துவதற்கான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியது.

பல கோட்பாட்டாளர்கள் குறிப்பிடுவது போல் சீனா ஓர் இராணுவ வலிமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் தலைமை தாங்கக் கூடிய திறனை கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. எதிர்கால உலகத்தில் சீனாவின் பங்கை வெற்றி விழா பிரகடனப்படுத்தியுள்ளது.

வன் அதிகாரத்தை கையில் எடுத்துள்ள சக்திகள் போரினால் பிரகடனங்களைச் செய்வது போல் சீனா மென் அதிகாரத்தை முதன்மைப்படுத்தி அணிவகுப்பு ஊடாக உலகத்துக்கு ஒரு செய்தியை பிரகடனப்படுத்தி இருக்கிறாது.

எதிர்கால சீனாவின் இலக்கு உலக ஒழுங்கை மேலாதிக்கம் செய்வதாகும்.

ஐந்தாவது சீனாவின் நட்பு சக்திகளும் சீனாவும் கீழைத்தேசங்களின் ஒத்துழைப்பை அடையாளப்படுத்தியதோடு, மேற்குலகத்துக்கு சவாலான அணுகுமுறை ஒன்றை அடையாளப்படுத்தியுள்ளது.

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் உரையாடலில் இருந்த முக்கியத்துவம் போன்று இராணுவ அணிவகுப்பில் வடகொரிய ஜனாதிபதியின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா- சீனா- வடகொரியா- ஈரான் போன்ற நாடுகளின் பங்களிப்பையும் தொலைதூர இராணுவ வலிமையையும் அடையாளப்படுத்தக் கூடியதாக அமைந்தது.

அனைத்து நாடுகளும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்தின் சவால் சக்திகள் என்பதை நிராகரித்து விட முடியாது. அத்தகைய அணிக்கு சீனா தலைமை தாங்குவதற்கு தயாராகியது என்பதை இவ்வெற்றி விழா உறுதிப்படுத்தியது.

எனவே உலக ஒழுங்கு ஒரு மீள் உருவாக்கத்துக்கான நியதிகளுக்குள் நுழைந்திருக்கின்றது. அதனுடைய மீள் உருவாக்கம் கீழைத்தேச சக்திகளின் ஒன்றிணைப்பினால் ஏற்பட்டுள்ளது.

கீழைத் தேச சக்திகளின் ஒத்துழைப்பு பலமான அரசியல், பொருளாதார, இராணுவ இருப்பை ஏற்படுத்தியிருப்பதோடு மேற்குலகத்துக்கு எதிரான,

அல்லது சவாலான வகிபாகத்தையும் கட்டமைத்ததோடு, புதிய பனிப்போரின் அடையாளத்தையும் தந்திருக்கின்றது. அத்தகைய பனிப்போர், அணிகளுக்கு இடையிலான பனிப்போராக, மேற்கு, கிழக்கு அல்லது மேற்குலகம் கீழைத்தேசம் என்ற உலக மாற்றத்திற்கான பிரிப்பை கோடிட்டுக் காட்டியுள்ளது.

Share.
Leave A Reply