தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி, 2015ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சுமார் 22 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவரென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சந்தேகநபர் சம்பத் மனம்பேரி, அரிசி லொறி கொள்ளைகளில் ஈடுபட்டமை தொடர்பில் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னதாக 106 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சுமார் 10 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ரூ. 50,000 அபராதம் செலுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்திய அவரது கெப் வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
எனினும், 2024ஆம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேகநபர் அபராதம் செலுத்தியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் உதவியுடன் சம்பத் மனம்பேரி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.