தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான், அந்தக் கனவை நிறைவேற்றத் நான் உறுதியாக இருப்பேன் என இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே கூறியுள்ளார்.

தனது தந்தையின் திடீர் மரணத்தினால், ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நாடு திரும்பிய வெல்லாலகே, இன்று சனிக்கிழமை (20) காலை நாட்டை (இலங்கையை) விட்டு வெளியேறி தேசிய அணியில் மீண்டும் இணையும் முன் இந்த பதிவை வெளியிட்டார்.

தனது தந்தையின் ஆதரவைப் பற்றிப் பேசுகையில், வெல்லாலகே கூறியதாவது:

“சிறுவயதிலிருந்தே எனது தந்தையிடமிருந்து எனக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது. நான் ஒரு நல்ல வீரராகி இலங்கைக்காக விளையாட வேண்டும் என்பதே அவரது ஒரே விருப்பம். அந்த விருப்பத்தை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்னும் பல போட்டிகள் உள்ளன, மேலும் எனது அணிக்கு 100 சதவீதம் பங்களிப்பேன் என்று நம்புகிறேன்.”

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூர்ய, தலைவர்; சரித் அசலங்க உள்ளிட்ட அவரது அணி வீரர்கள் மற்றும் இலங்கையில் உள்ள அனைவரிடமிருந்தும் தனக்கு பெரும் ஆதரவு கிடைத்ததாகவும், இந்த ஊக்கம் அந்த கடினமான நேரத்தில் தனக்கு மகத்தான பலத்தை அளித்ததாகவும், அதற்காக அவர் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“நான் சிறுவயதில் இருந்தே, கிரிக்கெட்டுக்காக என் தந்தை காலை முதல் இரவு வரை எனக்குப் பின்னால் நின்றார். அவரது தியாகங்களால்தான் இன்று நான் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிகிறது. அவரது விருப்பங்கள் என்னவென்று எனக்குத் தெரியும், அவற்றை நிறைவேற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரங்க வெல்லாலகே, செப்டம்பர் 18ஆம் திகதியன்று தனது 54 வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார்.

அபுதாபியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண குரூப் பி போட்டியில் அவரது மகன் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதே நாளில் அவரது மரணம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply