குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசா மோசடியால் இலங்கை கடுமையான ஆபத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை வலியுறுத்தி குடிவரவு அதிகாரிகள் சிலர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
கடந்த வாரம் சிக்கலான விசாக்கள் உள்ள குழுவொன்றை நாட்டிற்குள் நுழைய அதிகாரிகள் குழு எவ்வாறு அழுத்தம் கொடுத்தமை மற்றும் திணைக்களத்தின் விசா பிரிவில் பணிபுரியும் கணினி விண்ணப்ப உதவியாளர்கள் உள்ளிட்ட குழுக்கள் எவ்வாறு மோசடியை ஆதரிக்கின்றன என்பதற்கான ஆதாரங்களும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுக நகர திட்டத்தில் உள்ள BPO (Business Process Outsourcing) நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள், தொலைபேசி உதவியாளர்கள் மற்றும் விற்பனை அதிகாரிகளாக பணிபுரிவது என்ற போர்வையில் போலி விசாக்கள் கொண்ட குழுக்களின் வருகை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கணினி நிதி மோசடி நிறுவனங்களை முன்னர் நடத்தி அந்த நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள் வணிக விசாக்கள், நுழைவு விசாக்கள் மற்றும் குடியிருப்பு விசாக்களில் நாட்டிற்கு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் இந்த நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்வதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாகவும் தொடர்புடைய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.