மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தைச் சேர்தவர் சுரேகா யாதவ். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், 1989ம் ஆண்டு இந்திய ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார்.
இதன் மூலம், இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.
இதைத் தொடர்ந்து, படிப்படியாக முன்னேறி 1996ம் ஆண்டு சரக்கு ரயில் ஓட்டுநராக பணியாற்றினார். 2000ம் ஆண்டு முதல், பயணிகள் ரயில் ஓட்டுநராக பணியாற்றினார்.
பத்தாண்டுகளில், மும்பை – புனே நகரங்களுக்கு இடையே இயக்கப்படும், பல சிறப்புகளைக் கொண்ட ‘டெக்கான் குயின்’ எனும் இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயிலை இயக்கினார்.
2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, சோலாப்பூர் – மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்திற்கு இடையே, ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்கியதன் மூலம், அதிவேக ரயில் ஓட்டுநரான பெண் என்ற சாதனையை பெற்றார்.
இந்நிலையில், ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகள் ஓட்டுநராக பணியாற்றிய சுரேகா யாதவ், வரும் 30ம் தேதியுடன் (30-09-2025) பணி ஓய்வு பெறுகிறார்.
அவருடைய பணியின் இறுதியாக, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து, தலைநகர் டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கினார்.
அப்போது அவருக்கு, மத்திய ரயில்வே அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், பயணிகள், நண்பர்கள், உறவினர்கள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியில் சேர்ந்த பின்னர், இந்திய ரயில்வேயில் 1,500 பெண்கள் ஓட்டுநர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுரேகாவின் பணி, மற்ற பெண்களும் ரயில்வேயில் ஓட்டுநராக சேர உந்து சக்தியாக திகழ்ந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் சுரேகாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.