ஊழல்வாதிகளை கைது செய்யும் போது அச்சமடைந்துள்ள எதிர்க்கட்சியினர் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். இவர்களின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பதில் அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது.இந்த ஒருவருட காலத்தில் பிரதான ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும் போது எதிர்க்கட்சியினர் அனைவரும் அச்சமடைந்து தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள்.தேர்தல் காலத்தில் ஒருவரை ஒருவர் திருடர் என்று விமர்சித்துக் கொண்டோம் என்று குறிப்பிடுகிறார்கள்.இவர்களின் உண்மை முகத்தை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான ஆவணங்களை நாங்கள் தான் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை தொடர்பான ஆணைக்குழுவுக்கு சமர்;ப்பித்தோம்.இதில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் -ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்பட்டது.ஆனால் இந்த சட்டத்துக்கு உரிய அதிகாரங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.சட்டத்தை இயற்றி அதனை பெட்டகத்தில் போட்டு வைத்தார்கள்.

ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு எமது அரசாங்கம் தான் உயிர்கொடுத்தது. சட்டத்துக்கு உரிய ஒழுங்குவிதிகளை உருவாக்கினோம்.இந்த சட்டத்தின் பிரகாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தற்போது செயற்படுகிறது.இதனால் தான் ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Share.
Leave A Reply