பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, இன்று (24) 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆன்லைன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி பல மணிநேரம் அந்த விளையாட்டிலேயே கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவதாக, ஸயின் அலியின் தாயார் அவரை அவ்வப்போது திட்டியுள்ளார்.

இத்துடன், விளையாட்டில் தோல்வியடைந்தால் குறித்த சிறுவன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார் என அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சம்பவத்தன்று பல மணிநேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு தோல்வியடைந்ததில் ஆக்ரோஷமாக மாறிய ஸயின் அலியை, அவரது தாயாரும் திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரது தாயாரின் துப்பாக்கியை எடுத்த சிறுவன், பப்ஜி விளையாட்டைபோல் அறையில் உறங்கிய அவரது தாயார் , மூத்த சகோதரர் தைமூர், இரு சகோதரிகள்  ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளார்.

பின்னர், அந்தச் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். இதையடுத்து, சிறுவனுக்கு இன்று லாகூர் நீதிமன்றம், ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் என 100 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12.6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share.
Leave A Reply