ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்போது கிரிக்கெட்டில் மாத்திரம் கவனம் செலுத்துவதாகவும் வில்லங்கம் இல்லாமல் விளையாடுவதாகவும் இரண்டு அணிகளினதும் தலைவிகளான ஹாமன்ப்ரீத் கோரும் பாத்திமா சானாவும் தெரிவித்தனர்.
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது அத்தியாயத்திற்கான அணிகளின் தலைவிகள் தினமும் ஊடக சந்திப்பும் பெங்களூரிலும் கொழும்பு ஐரிசி ரத்னதீப்ப ஹோட்டலிலும் இன்று பகல் நடைபெற்றபோது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகள் போன்ற வில்லங்கங்களை மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின்போது தவிர்ப்பீர்களா என இரண்டு அணிகளின் தலைவிகளிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹாமன்ப்ரீத் கோர், ‘நாங்கள் கிரிக்கெட் விளையாட்டின்மீது மாத்திரமே கவனம் செலுத்தி மிகவும் நேர்த்தியாக விளையாடுவோம். தேவையற்ற விடயங்களில் தலையிடமாட்டோம். எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் தலையிடாமல் நற்பண்புடன் விளையாடுவோம்’ என்றார்.
அதேவேளை, ‘நாங்கள் கிரிக்கெட் விளையாடவே இங்கு (இலங்கை) வருகை தந்துள்ளோம். எங்களிடம் வேறு எந்த சிந்தனையும் இல்லை. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் இலங்கை மண் எங்களுக்கு சொந்த மண் போன்றது. மேலும் இலங்கையும் பாகிஸ்தானும் ஒத்த நிலைமைகளைக் கொண்டிருப்பதால் எங்களுக்கு சாதகமாக அமையும்’ என பாத்திமா சானா தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அரசியல் முறுகல்நிலை தொடர்வதால் பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் அக்டோபர் 5ஆம் திகதி பகல் இரவு போட்டியாக நடைபெறும்.