இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.

இலங்கையும் இந்தியாவும் ஒரே எண்ணிக்கையை பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் இலங்கை 2 விக்கெட்களையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அர்ஷ்தீப் சிங் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

பதிலுக்கு சப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஒரே பந்தில் 3 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் கன்னி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 58 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 107 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இப் போட்டியில் சதம் குவித்ததன் மூலம் மூன்று வகை சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்த நான்காவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் முழு கிரிக்கெட் உலகிலும் மூவகை கிரிக்கெட்டிலும் சதம் குவித்த 28ஆவது வீரரானார்.

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 3ஆவது விக்கெட்டில் 127 ஓட்டங்களை பகிர்ந்தார்.

அவர்கள் இருவரை விட தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால் மற்றைய வீரர்கள் மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறினர்.

இந்த வருட ஆசிய கிண்ணத்தில் இந்தப் போட்டிpல் விளையாடிய ஜனித் பெரேரா ஆட்டம் இழக்காமல் 2 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓர் அணி 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அபிஷேக் ஷர்மா மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆசிய கிண்ணத்தில் தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைக் குவித்தார்.

31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட திலக் வர்மா 49 ஓட்டங்களையும் சஞ்சு செம்சன் 39 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, சரித் அசலன்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

Share.
Leave A Reply