இந்தியா – இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா அபார வெற்றி பெற்றது.

IND vs SL T20 Match Highlights: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டன.

அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன.

லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்த அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன.

இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். இதில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதேபோல் 3 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபாயில் நடக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை பவுலிங் – இந்தியா முதலில் பேட்டிங்

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறிய சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர்.

அணிக்கு சிறப்பான தொடக்க கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் கில் 4 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 12 ரன்னில் அவுட் ஆனார்.

இதன்பிறகு வந்த திலக் வர்மாவுடன் சிறப்பான ஜோடியை அமைத்தார் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா. இருவரும் சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த நிலையில், அரைசதம் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா 61 ரன்னுக்கு அவுட் ஆனார்.

அவரைத் அடுத்து வந்த சஞ்சு சாம்சனுடன் நல்ல ஜோடியை அமைத்தார் திலக் வர்மா. இதில் சஞ்சு 39 ரன்னில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா 49 ரன்களும், அக்சர் படேல் 21 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 202 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் சரித் அசலங்கா, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷனக தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

203 ரன்கள் இலக்கு

தொடர்ந்து 203 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இலங்கை அணி துரத்தியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய பாதும் நிஸ்ஸங்க – குசல் மெண்டிஸ் ஜோடியில் குசல் மெண்டிஸ் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு இணைந்த பாதும் நிஸ்ஸங்க – குசல் பெரேரா ஜோடி சிறப்பாக ஆடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி மட்டும் 100 ரன்களுக்கு மேல் எடுத்து அசத்தினர். இதில் அரைசதம் அடித்து அசத்திய குசல் பெரேரா 58 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின் வந்த வீரர்களில் கேப்டன் சரித் அசலங்கா 5 ரன்னுக்கும், கமிந்து மெண்டிஸ் 3 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர்.

இதன்பின்னர் வந்த தசுன் ஷனக உடன் தொடக்க வீரரான பாதும் நிஸ்ஸங்க ஜோடி அமைத்தார். அவர் ஏற்கனவே அரைசதம் விளாசி இருந்த நிலையில், 17-வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு 52 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.

இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 11 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதனால், இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா தனது முதல் பந்தில், சதம் விளாசி தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாதும் நிஸ்ஸங்க விக்கெட்டை கைப்பற்றி மிரட்டினார்.

58 பந்துகளை எதிர்கொண்ட பாதும் நிஸ்ஸங்க 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 107 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த 5 பந்துகளில் ஹர்ஷித் ராணா ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 5 ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி பந்தில் இலங்கை வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியது. ஸ்ட்ரைக்கில் இருந்த தசுன் ஷனக 2 ரன்களை எடுத்து ஆட்டத்தை டிரா செய்து அசத்தினார்.

சூப்பர் ஓவர்

ஆட்டம் டிரா ஆனா நிலையில், சூப்பர் ஓவர் அமல்படுத்தப்பட்டது. இந்திய தரப்பில் சூப்பர் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, இலங்கையின் தசுன் ஷனக – கமிந்து மெண்டிஸ் மட்டையைச் சுழற்றினர்.

இதில் 5-வது பந்தில் தசுன் ஷனக அவுட் ஆனார். அதனால், சூப்பர் ஓவர் முடிவில் இலங்கை அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, இந்தியாவுக்கு 3 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் – சூரியகுமார் யாதவ் ஜோடி பேட்டிங் ஆட, இலங்கையின் வனிந்து ஹசரங்க பந்து வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சூரியகுமார்,

அதே பந்தில் 3 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் சூப்பர் ஓவர் முடிவில் இந்தியா அபார வெற்றியை ருசித்தது. ஆறுதல் வெற்றி பெற நினைத்த இலங்கை அணி சோகத்துடன் விடைபெற்றது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி.

இலங்கை: பாதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசல் பெரேரா, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷனா, நுவான் துஷார.

Share.
Leave A Reply