எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடான கட்டார், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி தனது தலைநகரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்லாமிய உச்சிமாநாட்டை நடத்தியது.
ஒரு வாரத்துக்கு முன், அமெரிக்க ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி விவாதிக்க டோஹாவில் கூடியிருந்த ஹமாஸ் தலைவர்களைக் கொல்வதை நோக்கமாகக் கொண்ட பாசிசவாத சட்ட விரோத குடியேற்ற நாடான இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் பற்றி ஆராய இந்த மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
உச்சிமாநாட்டுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய உச்சிமாநாடு என்று பெயரிட்டனர். இருந்தாலும், அரபு ஆட்சியாளர்கள் மத்திய கிழக்கு முழுவதும் தங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் இஸ்லாத்துடன் தொடர்பு கொள்ள தாங்கள் விரும்பவில்லை என்பதை உலகிற்குக் எடுத்துக் காட்டினர்.
உண்மையில், தங்களது அமெரிக்க- – இஸ்ரேலிய எஜமானர்களை மகிழ்விக்க அவர்கள் தத்தமது நாடுகளில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் உட்பட மற்றும் அனைத்து இஸ்லாமிய மத நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளனர்.
உச்சிமாநாட்டின் முடிவில் அரபு தலைவர்கள் கடினமான உரைகளை முன்வைத்தனர். ஆனால், இஸ்ரேல் மீது கடினமான எந்த நடவடிக்கைகளையும் முன்மொழிய தவறிவிட்டனர். பலஸ்தீனர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதையும் காஸா நகரத்தின் அழிவையும் உச்சிமாநாடு புறக்கணித்து விட்டது.
1980 களின் ஈரான்--ஈராக் போருக்குப் பின்னர், வொஷிங்டன், வளைகுடா பிராந்தியத்திற்கான தனது இராணுவ உறுதிப்பாட்டை வளைகுடா ஆட்சியாளர்கள் மீதான நிபந்தனைகளுடன் நிறுவி உள்ளது.
அமெரிக்காவுக்கு வளைகுடா பிரதேசங்கள் மீதான அளவுக்கு அதிகமான அணுகலை இந்த ஏற்பாடு வழங்கியுள்ளது. அது பிராந்தியத்தின் இறையாண்மையை மீதான சமரசம் மற்றும் விட்டுக் கொடுப்பு என்பனவற்றையும் உள்ளடக்கியது.
இந்த சமரசத்துக்குப் பதிலாக வளைகுடா நாடுகள், வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்கப் பாதுகாப்பை எதிர்பார்த்தன. ஆட்சியாளர்கள் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கட்டியெழுப்ப பில்லியன்களைக் கொட்டினர். பெரும்பாலும் தங்கள் சொந்த செலவில் இவற்றை நிறுவி வெளிநாட்டு துருப்புக்களை தங்கள் நிலங்களுக்கு அழைப்பதில் உள்ள அரசியல் அபாயங்களையும் சகித்துக் கொண்டனர்.
வெளியுறவுக் கொள்கையின் மூலம் தனது சிம்மாசனத்தை பாதுகாப்பதே சவூதி அரசின் தீர்வாக இருந்தது. பெரிய இராணுவத் தளங்களுக்கு நிதியளிப்பதன் மூலமும் அமெரிக்க துருப்புக்களை வரவேற்று அவை புடை சூழ வீற்றிருப்பதே தனக்கான பாதுகாப்பு என்றும் அவர்கள் நம்பினர்.
பல தசாப்தங்களாக, அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள், அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் தங்களைக் காப்பாற்றும் என்று வளைகுடா ஆட்சியாளர்கள் நம்பினர். ஆனால், கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அந்த அனுமானத்தை குறைந்தபட்சம் இப்போதைக்கு சிதைத்துள்ளது.
ஹமாஸுடனான அதன் நிதி மற்றும் அரசியல் உறவுகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகவும் அதன் சொந்த மத்தியஸ்தம் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களின் வற்புறுத்தலின் பேரில் இருந்ததாகவும் கட்டார் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க உத்தரவாதங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பதை இந்தத் தாக்குதல் வெளிப்படுத்தி உள்ளது.
எந்தவொரு வெளிப்புற அச்சுறுத்தலிலிருந்தும் தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என வளைகுடா ஆட்சிகள் நம்பி வந்துள்ளன. இன்னமும் நம்புகின்றன.
ஆனால், வொஷிங்டன், இஸ்ரேலைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, அமெரிக்க கூட்டாளிகள் என்று கூறப்படுபவர்களை சீர்குலைத்தாலும் வாஷிங்டன் இஸ்ரேலை கட்டுப்படுத்தாது. உண்மையில் இரண்டு ஆண்டுகளுக்குள் ஈராக, சிரியா, லெபனான், பலஸ்தீனம், துனிசியா, ஈரான், யேமன் மற்றும் இப்போது கட்டார் ஆகிய எட்டு நாடுகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
கட்டாரை பொறுத்தவரை அதன் தாக்கங்கள் மோசமாக உள்ளன. இஸ்ரேலுடனான நடைமுறை உறவுகள் மற்றும் அமெரிக்க துருப்புக்களை நம்பியிருப்பது ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை அரபு தேசியவாத சொல்லாட்சியின் மூலம் சமநிலைப்படுத்த முடியும் என்று கட்டார் கருதியது.
ஆனால், அதேநேரம் தண்டனையிலிருந்து விடுபடும் விடுபாட்டு உரிமையுடன் அமெரிக்காவின் மிகவும் செல்வந்த வாடிக்கையாளர் ஒருவர் மீது தனக்கு மிகவும் சௌகரியமாக கைவைக்க முடியும் என்பதை இஸ்ரேல் மிகவும் இலாவகமாக நிரூபித்துள்ளது.
ஆனால், இந்த அரபு அரசாங்கங்கள் ஏன் தாமாகவே முன்வந்து இஸ்ரேலை தண்டிக்கவில்லை? அவர்களைத் தடுப்பது எது? வொஷிங்டனுக்குப் பயந்து அரேபியர்கள் செயல்பட மறுக்கும் போது “சர்வதேச சமூகத்தை” (நேட்டோவுக்கான சிறுகுறிப்பு) மட்டும் செயல்பட முன் வருமாறு ஏன் அவர்கள் அழைக்க வேண்டும்?
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அரபு அரசாங்கங்கள் எதுவும் உருப்படியான எந்த உறுதிகளையும் வழங்கவில்லை. இஸ்ரேலிய இனப்படுகொலை அல்லது இறையாண்மை மீறல்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் டெல் அவிவில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய தூதரகங்கள் இன்னமும் திறந்து தான் உள்ளன.
இஸ்ரேல் இயல்பாக்கத்தை ஒருவழித் தெருவாக பார்க்கின்றது. அரபு ஆட்சிகள் பரஸ்பர பரிமாற்றத்தை எதிர்பார்க்காமல் நிபந்தனைகள் எதுவுமின்றி இஸ்ரேலை சமாதானப்படுத்த வேண்டும். இதுதான் இன்றைய நிலைமையின் சுருக்கம். சவூதி அரேபியாவுடன் இயல்பாக்கம் செய்வது குறித்து இஸ்ரேல் தெளிவாக இருக்கின்றது. இஸ்ரேல் அதற்கு ஈடாக தனக்கு தேவையான விருப்பமான சமாதானத்தை நாடி நிற்கின்றது.
அரபுலக பொதுமக்களைப் பொறுத்தவரை கட்டார் மீதான தாக்குதல் அவர்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வந்த சந்தேகங்களை மிகவும் தெளிவாக்கி உள்ளது. இயல்பாக்கம் என்பது இஸ்ரேலிய வன்முறைக்கு எதிரான ஒரு கவசம் அல்ல. மாறாக அதற்கு வழியமைக்கும் ஒரு செயற்பாடு.
இந்த தாக்குதல் அரபு உச்சிமாநாடுகளின் வெற்று வாய்ச்சவடால்களையும் அம்பலப்படுத்தி உள்ளது. ஓர் இராணுவ அல்லது அர்த்தமுள்ள இராஜதந்திர பதிலை பற்றி கூட சிந்திக்க இவர்களுக்கு துணிவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலை தண்டிக்குமாறு “சர்வதேச சமூகத்தை” இந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்க முடியும்?
கட்டார், அதன் வளைகுடா அண்டை நாடுகளைப் போலவே, அமெரிக்க நம்பகத்தன்மை மற்றும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பில் முதலீடு செய்தது.
இரண்டு தூண்களும் இப்போது இடிந்து விழுந்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேலை பகைத்துக் கொண்டு அரபிகளைப் பாதுகாக்காது. மேலும், இஸ்ரேல் வசதி கிடைக்கும்போதெல்லாம் அரபிகளை தாக்கவும் தயங்காது.
டோஹா மற்றும் வளைகுடா ஆட்சிகளுக்கு முன் உள்ள உண்மையான கேள்வி என்னவென்றால், அவர்கள் தொடர்ந்து தங்கள் இறையாண்மையை வொஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆகிய நாடுகளுக்கு ஒரு வெளிவாரி வளமாக விட்டுக்கொடுப்பாளர்களா அல்லது அவர்கள் பல தசாப்தங்களாக சார்ந்திருப்பதற்காக ஏற்பட்ட செலவுகளை எதிர்கொள்வார்களா என்பதுதான்.
அவர்களின் மக்கள் நீண்ட காலமாக உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு என்பது ஒரு வகையான மிரட்டல். மேலும் இஸ்ரேலிய சக்தி மற்றும் ஆக்கிரமிப்பு என்பன வொஷிங்டனின் நேரடி உரிமம் பெற்றவை என்பதே மக்கள் புரிந்து வைத்துள்ள யதார்த்தம்.
வளைகுடா ஆட்சியாளர்கள் அமெரிக்க உத்தரவாதங்கள் மற்றும் இஸ்ரேலிய பங்குடைமை என்பன பற்றிய மாயைகளை கைவிடும் வரை, அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுமாகவே இருப்பார்கள். அவர்கள் அஞ்ச வேண்டியது ஈரான் அல்லது யேமனுக்கு அல்ல. ஆனால், அவர்கள் இயல்பு நிலைமைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள அரசுக்கு தான் அவர்கள் அஞ்ச வேண்டும்.
இதற்கிடையில், அரபு மக்கள் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு தாங்கள் மோசமான மற்றும் இருண்ட யுகங்களில் வாழ்ந்து வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவமானத்தையும் வெட்கத்தையும் அனுபவித்து வருவதாகவும் பல கட்டுரையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அரபிகள் ஒருபோதும் தங்கள் எதிரிகளிடம் மன்னிப்பு கேட்டு வாழ்ந்தவர்கள் அல்லர். தங்களை ஒடுக்குபவர்களுக்கு விசுவாசமாக அவர்கள் வாழ்ந்து காட்டியதும் இல்லை. தங்களின் இரத்தங்களை ஓடவிட்ட கொலையாளிகளுடன் உறவுகளை இயல்பாக்க முயற்சித்த சமூகத்தவர்களும் அல்லர் அரபிகள். அதற்காக அவர்கள் ஒருபோதும் முயற்சித்தவர்களும் அல்ல.
எனவே இங்கு எழும் பிரதான கேள்வி மனித குலத்திற்காக உருவாக்கப்பட்ட சிறந்த ஒரு சமூகத்தின் வாரிசுகளுக்கு இன்று என்ன நடந்துள்ளது?
என்ன நடந்தது என்றால் அந்த வழித் தோன்றல்களை சேராத ஆட்சியாளர்கள் அமெரிக்க -ஐரோப்பிய காலனித்துவ-ஆக்கிரமிப்பாளர்களால் அவர்களின் முகவர்களாக செயல்பட இந்தப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கும் சமூகத்திற்கும் பதிலாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு விசுவாசமாக இருக்கத் தொடங்கினர். அவர்கள் தங்கள் சொந்த மக்களை சித்திரவதை செய்து அவமானப்படுத்தி, அடக்கி ஒடுக்கி, பாசிசவாதத்தை அவர்கள் மீது திணித்தனர்.
இன்னமும் திணித்து வருகின்றனர். வெளிநாட்டுச் சக்திகளை மகிழ்விக்க தமது சொந்த மக்களை மிருகத்தனமாக நடத்துகின்றனர்.
இதனால் அந்த மக்கள் பலவீனமடைந்து அச்சத்துக்கும் கீழ்ப்படிவுக்கும் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களால் தங்கள் சுதந்திரத்தையும் விடுதலையையும் கோர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இந்த முகவர்கள் தான் இன்று அரபுலகின் ஜனாதிபதிகள் அல்லது மன்னர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். மக்கள் ஒடுக்கப்படுவதைப் போலவே ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்கள் புறப்படுவதை தடுக்க மக்களுக்கு பொருள் செல்வத்தை வழங்குவதும் இந்த திட்டத்தில் அடங்கும்.
காலனித்துவவாதிகளுக்கு அவர்களின் சொத்துக்களைப் பற்றி மீள் உறுதியளிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி விட்டுச் சென்ற சொத்துக்களை பாதுகாப்பான கரங்களில் ஒப்படைத்தனர்.
அவை தங்கள் மார்க்கத்தையும் மக்களையும் காட்டிக்கொடுக்கும் கரங்கள். இப்போது தங்கள் நாட்டில் அதிகாரத்திற்காக ஏங்கும் பொறுப்பில் எஞ்சியிருப்பவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய நுழைவாயில் பலஸ்தீனத்தில் வெளிப்படையாக அமையப்பெற்ற காலனித்துவ ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேல் தான் என்பதையும் நன்கு அறிவார்கள்.
இப்பகுதியில் உள்ள இஸ்ரேலின் முகவர்களான அரபு தலைவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிரான குடியேற்றவாத அரசின் பாதுகாப்பைப் பெறவும் அதனோடு உறவுகளை இயல்பாக்கவும் போட்டிபோட்டு விரைகின்றனர்.
அரபு நாடுகளில் இருந்து இயல்பாக்குதலை விரும்பும் இஸ்ரேல், இப்போது தெரிவுகளை கெட்டுப்போக வைத்துவிட்டது. இருந்தாலும் இயல்பாக்கத்துக்கு இசைவானவர்கள் நல்ல நடத்தைக்கான சான்றிதழை கொண்டிருக்க வேண்டும் என்று இயல்பாக்கத்துக்கான நிபந்தனைகளையும் அதுவே முன்வைக்கின்றது. இதுவே மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளது.
இயல்பாக்கம் என்பது இனிமேலும் ஆட்சியாளர்கள் தங்கள் சிம்மாசனங்களில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காக இரகசியமாக பேணப்படும் ஓர் அவமானம் அல்ல.
அது இப்போது உலகிற்கு முன் திறவலாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை உலகிற்கு முன்னால் காட்டிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார்கள்.
இதனால் அவர்களுக்கு எதிரியால் வெகுமதியும் அளிக்கப்படுகின்றது. இது இயல்பாக்கத்துக்கு ஆதரவான அரபு ஆட்சியாளர்களை சீர்திருத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் உரிய இஸ்ரேலின் தண்டனையின் ஒரு வழிமுறையாகவும் மாறியுள்ளது.
இயல்பாக்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு இது ஒரு வெகுமதியாக அமைந்துள்ளது. மற்றும் டெல் அவிவ், அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ள பாதைக்கு திரும்பும் வரை ஏனையவர்களுக்கு இது அச்சுறுத்தலாகவும் மாறி உள்ளது.
லத்தீப் பாரூக்