எண்ணெய் வளம் நிறைந்த வளை­குடா நாடான கட்டார், 2025 செப்­டம்பர் 15 ஆம் திகதி தனது தலை­ந­க­ரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்­லா­மிய உச்­சி­மா­நாட்டை நடத்­தி­யது.

ஒரு வாரத்­துக்கு முன், அமெ­ரிக்க ஆத­ர­வுடன் முன்வைக்­கப்­பட்ட போர்­நி­றுத்த பேச்­சு­வார்த்­தை­களைப் பற்றி விவா­திக்க டோஹாவில் கூடி­யி­ருந்த ஹமாஸ் தலை­வர்­களைக் கொல்­வதை நோக்­க­மாகக் கொண்ட பாசி­ச­வாத சட்ட விரோத குடி­யேற்ற நாடான இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தல்கள் பற்றி ஆராய இந்த மாநாட்­டுக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

உச்­சி­மா­நாட்­டுக்கு அரபு மற்றும் இஸ்­லா­மிய உச்சிமாநாடு என்று பெய­ரிட்­டனர். இருந்­தாலும், அரபு ஆட்­சி­யா­ளர்கள் மத்­திய கிழக்கு முழு­வதும் தங்­களால் அடக்கி ஒடுக்­கப்­பட்­டி­ருக்கும் இஸ்­லாத்­துடன் தொடர்பு கொள்ள தாங்கள் விரும்­ப­வில்லை என்­பதை உல­கிற்குக் எடுத்துக் காட்­டினர்.

உண்­மையில், தங்­க­ளது அமெ­ரிக்­க-­ – இஸ்­ரே­லிய எஜ­மா­னர்­களை மகிழ்­விக்க அவர்கள் தத்­த­மது நாடு­களில் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்கம் உட்­பட மற்றும் அனைத்து இஸ்­லா­மிய மத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தடை விதித்­துள்­ளனர்.

உச்­சி­மா­நாட்டின் முடிவில் அரபு தலை­வர்கள் கடி­ன­மான உரை­களை முன்­வைத்­தனர். ஆனால், இஸ்ரேல் மீது கடி­ன­மான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­மொ­ழிய தவ­றி­விட்­டனர். பலஸ்­தீ­னர்கள் தொடர்ந்து படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தையும் காஸா நக­ரத்தின் அழி­வையும் உச்­சி­மா­நாடு புறக்­க­ணித்து விட்­டது.

1980 களின் ஈரான்-­-ஈராக் போருக்குப் பின்னர், வொஷிங்டன், வளை­குடா பிராந்­தி­யத்­திற்­கான தனது இரா­ணுவ உறு­திப்­பாட்டை வளை­குடா ஆட்­சி­யா­ளர்கள் மீதான நிபந்­த­னை­க­ளுடன் நிறுவி உள்­ளது.

அமெ­ரிக்­கா­வுக்கு வளை­குடா பிர­தே­சங்கள் மீதான அள­வுக்கு அதிகமான அணு­கலை இந்த ஏற்­பாடு வழங்­கி­யுள்­ளது. அது பிராந்­தி­யத்தின் இறை­யாண்­மையை மீதான சம­ரசம் மற்றும் விட்டுக் கொடுப்பு என்­ப­ன­வற்­றையும் உள்­ள­டக்­கி­யது.

இந்த சம­ர­சத்­துக்குப் பதி­லாக வளை­குடா நாடுகள், வெளிப்­புற அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்கப் பாது­காப்பை எதிர்­பார்த்­தன. ஆட்­சி­யா­ளர்கள் அமெ­ரிக்க இரா­ணுவத் தளங்­களைக் கட்­டி­யெ­ழுப்ப பில்­லி­யன்­களைக் கொட்­டினர். பெரும்­பாலும் தங்கள் சொந்த செலவில் இவற்றை நிறுவி வெளி­நாட்டு துருப்­புக்­களை தங்கள் நிலங்­க­ளுக்கு அழைப்­பதில் உள்ள அர­சியல் அபா­யங்­க­ளையும் சகித்துக் கொண்­டனர்.

வெளி­யு­றவுக் கொள்­கையின் மூலம் தனது சிம்­மா­ச­னத்தை பாது­காப்­பதே சவூதி அரசின் தீர்­வாக இருந்­தது. பெரிய இரா­ணுவத் தளங்­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதன் மூலமும் அமெ­ரிக்க துருப்­புக்­களை வர­வேற்று அவை புடை சூழ வீற்­றி­ருப்­பதே தனக்­கான பாது­காப்பு என்றும் அவர்கள் நம்­பினர்.

பல தசாப்­தங்­க­ளாக, அமெ­ரிக்­காவின் பாது­காப்பு உத்­த­ர­வா­தங்கள், அனைத்து அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்தும் தங்­களைக் காப்­பாற்றும் என்று வளை­குடா ஆட்­சி­யா­ளர்கள் நம்­பினர். ஆனால், கட்டார் மீதான இஸ்­ரேலின் தாக்­குதல் அந்த அனு­மா­னத்தை குறைந்­த­பட்சம் இப்­போ­தைக்கு சிதைத்­துள்­ளது.

ஹமா­ஸு­ட­னான அதன் நிதி மற்றும் அர­சியல் உற­வுகள் அமெ­ரிக்க மற்றும் இஸ்­ரேலின் உத்­த­ரவின் பேரில் நடத்­தப்­பட்­ட­தா­கவும் அதன் சொந்த மத்­தி­யஸ்தம் கூட அமெ­ரிக்க மற்றும் இஸ்ரேல் அர­சாங்­கங்­களின் வற்­பு­றுத்­தலின் பேரில் இருந்­த­தா­கவும் கட்டார் ஒப்புக் கொண்­டுள்­ளது.

அமெ­ரிக்க உத்­த­ர­வா­தங்கள் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்­டவை என்­பதை இந்தத் தாக்­குதல் வெளிப்­ப­டுத்தி உள்­ளது.

எந்­த­வொரு வெளிப்­புற அச்­சு­றுத்­த­லி­லி­ருந்தும் தாங்கள் பாது­காக்­கப்­ப­டுவோம் என வளை­குடா ஆட்­சிகள் நம்பி வந்­துள்­ளன. இன்­னமும் நம்­பு­கின்­றன.

ஆனால், வொஷிங்டன், இஸ்­ரேலைக் கட்­டுப்­ப­டுத்­தாது. இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு, அமெ­ரிக்க கூட்­டா­ளிகள் என்று கூறப்­ப­டு­ப­வர்­களை சீர்­கு­லைத்­தாலும் வாஷிங்டன் இஸ்­ரேலை கட்­டுப்­ப­டுத்­தாது. உண்­மையில் இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் ஈராக, சிரியா, லெபனான், பலஸ்­தீனம், துனி­சியா, ஈரான், யேமன் மற்றும் இப்­போது கட்டார் ஆகிய எட்டு நாடு­களை இஸ்ரேல் தாக்­கி­யுள்­ளது.

கட்­டாரை பொறுத்­த­வரை அதன் தாக்­கங்கள் மோச­மாக உள்­ளன. இஸ்­ரே­லு­ட­னான நடை­முறை உற­வுகள் மற்றும் அமெ­ரிக்க துருப்­புக்­களை நம்­பி­யி­ருப்­பது ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான வித்­தி­யா­சத்தை அரபு தேசி­ய­வாத சொல்­லாட்­சியின் மூலம் சம­நி­லைப்­ப­டுத்த முடியும் என்று கட்டார் கரு­தி­யது.

ஆனால், அதே­நேரம் தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­படும் விடு­பாட்டு உரி­மை­யுடன் அமெ­ரிக்­காவின் மிகவும் செல்­வந்த வாடிக்­கை­யாளர் ஒருவர் மீது தனக்கு மிகவும் சௌக­ரி­ய­மாக கைவைக்க முடியும் என்­பதை இஸ்ரேல் மிகவும் இலா­வ­க­மாக நிரூ­பித்­துள்­ளது.

ஆனால், இந்த அரபு அர­சாங்­கங்கள் ஏன் தாமா­கவே முன்­வந்து இஸ்­ரேலை தண்­டிக்­க­வில்லை? அவர்­களைத் தடுப்­பது எது? வொஷிங்­ட­னுக்குப் பயந்து அரே­பி­யர்கள் செயல்­பட மறுக்கும் போது “சர்­வ­தேச சமூ­கத்தை” (நேட்­டோ­வுக்­கான சிறு­கு­றிப்பு) மட்டும் செயல்­பட முன் வரு­மாறு ஏன் அவர்கள் அழைக்க வேண்டும்?

வேறு வார்த்­தை­களில் கூறு­வ­தானால் அரபு அர­சாங்­கங்கள் எதுவும் உருப்­ப­டி­யான எந்த உறு­தி­க­ளையும் வழங்­க­வில்லை. இஸ்­ரே­லிய இனப்­ப­டு­கொலை அல்­லது இறை­யாண்மை மீறல்கள் ஆகி­ய­வற்றைப் பொருட்­ப­டுத்­தாமல் டெல் அவிவில் உள்ள அரபு மற்றும் இஸ்­லா­மிய தூத­ர­கங்கள் இன்­னமும் திறந்து தான் உள்­ளன.

இஸ்ரேல் இயல்­பாக்­கத்தை ஒரு­வழித் தெரு­வாக பார்க்­கின்­றது. அரபு ஆட்­சிகள் பரஸ்­பர பரி­மாற்­றத்தை எதிர்­பார்க்­காமல் நிபந்­த­னைகள் எது­வு­மின்றி இஸ்­ரேலை சமா­தா­னப்­ப­டுத்த வேண்டும். இதுதான் இன்­றைய நிலை­மையின் சுருக்கம். சவூதி அரே­பி­யா­வுடன் இயல்­பாக்கம் செய்­வது குறித்து இஸ்ரேல் தெளி­வாக இருக்­கின்­றது. இஸ்ரேல் அதற்கு ஈடாக தனக்கு தேவை­யான விருப்­ப­மான சமா­தா­னத்தை நாடி நிற்­கின்­றது.

அர­பு­லக பொது­மக்­களைப் பொறுத்­த­வரை கட்டார் மீதான தாக்­குதல் அவர்கள் மத்­தியில் நீண்­ட­கா­ல­மாக நிலவி வந்த சந்­தே­கங்­களை மிகவும் தெளி­வாக்கி உள்­ளது. இயல்­பாக்கம் என்­பது இஸ்­ரே­லிய வன்­மு­றைக்கு எதி­ரான ஒரு கவசம் அல்ல. மாறாக அதற்கு வழி­ய­மைக்கும் ஒரு செயற்­பாடு.

இந்த தாக்­குதல் அரபு உச்­சி­மா­நா­டு­களின் வெற்று வாய்ச்­ச­வ­டால்­க­ளையும் அம்­ப­லப்­ப­டுத்தி உள்­ளது. ஓர் இரா­ணுவ அல்­லது அர்த்­த­முள்ள இரா­ஜ­தந்­திர பதிலை பற்றி கூட சிந்­திக்க இவர்­க­ளுக்கு துணி­வில்லை. இந்த நிலையில் இஸ்­ரேலை தண்­டிக்­கு­மாறு “சர்­வ­தேச சமூ­கத்தை” இந்த ஆட்­சி­யா­ளர்கள் எவ்­வாறு அழைக்க முடியும்?

கட்டார், அதன் வளை­குடா அண்டை நாடு­களைப் போலவே, அமெ­ரிக்க நம்­ப­கத்­தன்மை மற்றும் இஸ்­ரே­லியக் கட்­டுப்­பாட்டை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஒரு பாது­காப்பு அமைப்பில் முத­லீடு செய்­தது.

இரண்டு தூண்­களும் இப்­போது இடிந்து விழுந்­துள்­ளன. அமெ­ரிக்கா, இஸ்­ரேலை பகைத்துக் கொண்டு அர­பி­களைப் பாது­காக்­காது. மேலும், இஸ்ரேல் வசதி கிடைக்­கும்­போ­தெல்லாம் அர­பி­களை தாக்­கவும் தயங்­காது.

டோஹா மற்றும் வளை­குடா ஆட்­சி­க­ளுக்கு முன் உள்ள உண்­மை­யான கேள்வி என்­ன­வென்றால், அவர்கள் தொடர்ந்து தங்கள் இறை­யாண்­மையை வொஷிங்டன் மற்றும் டெல் அவிவ் ஆகிய நாடு­க­ளுக்கு ஒரு வெளி­வாரி வள­மாக விட்­டுக்­கொ­டுப்­பா­ளர்­களா அல்­லது அவர்கள் பல தசாப்­தங்­க­ளாக சார்ந்­தி­ருப்­ப­தற்­காக ஏற்­பட்ட செல­வு­களை எதிர்­கொள்­வார்­களா என்­ப­துதான்.

அவர்­களின் மக்கள் நீண்ட கால­மாக உண்­மையை புரிந்து கொண்­டுள்­ளனர். அமெ­ரிக்க பாது­காப்பு என்­பது ஒரு வகை­யான மிரட்டல். மேலும் இஸ்­ரே­லிய சக்தி மற்றும் ஆக்­கி­ர­மிப்பு என்­பன வொஷிங்­டனின் நேரடி உரிமம் பெற்­றவை என்­பதே மக்கள் புரிந்து வைத்­துள்ள யதார்த்தம்.

வளை­குடா ஆட்­சி­யா­ளர்கள் அமெ­ரிக்க உத்­த­ர­வா­தங்கள் மற்றும் இஸ்­ரே­லிய பங்­கு­டைமை என்­பன பற்­றிய மாயை­களை கைவிடும் வரை, அவர்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் பாதிக்­கப்­படக் கூடி­ய­வர்­க­ளு­மா­கவே இருப்­பார்கள். அவர்கள் அஞ்ச வேண்­டி­யது ஈரான் அல்­லது யேம­னுக்கு அல்ல. ஆனால், அவர்கள் இயல்பு நிலை­மை­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்ள அர­சுக்கு தான் அவர்கள் அஞ்ச வேண்டும்.

இதற்­கி­டையில், அரபு மக்கள் முன்­னொரு போதும் இல்­லாத அள­வுக்கு தாங்கள் மோச­மான மற்றும் இருண்ட யுகங்­களில் வாழ்ந்து வரு­வ­தா­கவும், முன்­னெப்­போதும் இல்­லாத அள­விற்கு அவ­மா­னத்­தையும் வெட்­கத்­தையும் அனு­ப­வித்து வரு­வ­தா­கவும் பல கட்­டு­ரை­யா­ளர்கள் சுட்­டிக்­காட்டி உள்­ளனர்.

அர­பிகள் ஒரு­போதும் தங்கள் எதி­ரி­க­ளிடம் மன்­னிப்பு கேட்டு வாழ்ந்­த­வர்கள் அல்லர். தங்­களை ஒடுக்­கு­ப­வர்­க­ளுக்கு விசு­வா­ச­மாக அவர்கள் வாழ்ந்து காட்­டி­யதும் இல்லை. தங்­களின் இரத்­தங்­களை ஓட­விட்ட கொலை­யா­ளி­க­ளுடன் உற­வு­களை இயல்­பாக்க முயற்­சித்த சமூ­கத்­த­வர்­களும் அல்லர் அர­பிகள். அதற்­காக அவர்கள் ஒரு­போதும் முயற்­சித்­த­வர்­களும் அல்ல.

எனவே இங்கு எழும் பிர­தான கேள்வி மனித குலத்­திற்­காக உரு­வாக்­கப்­பட்ட சிறந்த ஒரு சமூ­கத்தின் வாரி­சு­க­ளுக்கு இன்று என்ன நடந்­துள்­ளது?

என்ன நடந்­தது என்றால் அந்த வழித் தோன்­றல்­களை சேராத ஆட்­சி­யா­ளர்கள் அமெ­ரிக்­க -­ஐரோப்­பிய கால­னித்­து­வ-­ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களால் அவர்­களின் முக­வர்­க­ளாக செயல்­பட இந்தப் பகு­தி­களில் நிய­மிக்­கப்­பட்­டனர்.

பின்னர் அவர்கள் தங்கள் சொந்த மக்­க­ளுக்கும் சமூ­கத்­திற்கும் பதி­லாக ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளுக்கு விசு­வா­ச­மாக இருக்கத் தொடங்­கினர். அவர்கள் தங்கள் சொந்த மக்­களை சித்­தி­ர­வதை செய்து அவ­மா­னப்­ப­டுத்தி, அடக்கி ஒடுக்கி, பாசிசவாதத்தை அவர்கள் மீது திணித்­தனர்.

இன்­னமும் திணித்து வரு­கின்­றனர். வெளி­நாட்டுச் சக்­தி­களை மகிழ்­விக்க தமது சொந்த மக்­களை மிரு­கத்­த­ன­மாக நடத்­து­கின்­றனர்.

இதனால் அந்த மக்கள் பல­வீ­ன­ம­டைந்து அச்­சத்­துக்கும் கீழ்ப்­ப­டி­வுக்கும் அடி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அவர்­களால் தங்கள் சுதந்­தி­ரத்­தையும் விடு­த­லை­யையும் கோர முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

எனவே இந்த முக­வர்கள் தான் இன்று அர­பு­லகின் ஜனா­தி­ப­திகள் அல்­லது மன்­னர்கள் என்று முத்­திரை குத்­தப்­பட்­ட­வர்கள். மக்கள் ஒடுக்­கப்­ப­டு­வதைப் போலவே ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக அவர்கள் புறப்­ப­டு­வதை தடுக்க மக்­க­ளுக்கு பொருள் செல்­வத்தை வழங்­கு­வதும் இந்த திட்­டத்தில் அடங்கும்.

கால­னித்­து­வ­வா­தி­க­ளுக்கு அவர்­களின் சொத்­துக்­களைப் பற்றி மீள் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. அவர்கள் தங்கள் சொந்த விருப்­பப்­படி விட்டுச் சென்ற சொத்­துக்­களை பாது­காப்­பான கரங்­களில் ஒப்­ப­டைத்­தனர்.

அவை தங்கள் மார்க்­கத்­தையும் மக்­க­ளையும் காட்­டிக்­கொ­டுக்கும் கரங்கள். இப்­போது தங்கள் நாட்டில் அதி­கா­ரத்­திற்­காக ஏங்கும் பொறுப்பில் எஞ்­சி­யி­ருப்­ப­வர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்­டிய நுழை­வாயில் பலஸ்­தீ­னத்தில் வெளிப்­ப­டை­யாக அமை­யப்­பெற்ற கால­னித்­துவ ஆக்­கி­ர­மிப்பு நாடான இஸ்ரேல் தான் என்­ப­தையும் நன்கு அறி­வார்கள்.

இப்­ப­கு­தியில் உள்ள இஸ்­ரேலின் முக­வர்­க­ளான அரபு தலை­வர்கள் தங்கள் சொந்த மக்­க­ளுக்கு எதி­ரான குடி­யேற்­ற­வாத அரசின் பாது­காப்பைப் பெறவும் அதனோடு உறவுகளை இயல்பாக்கவும் போட்டிபோட்டு விரைகின்றனர்.

அரபு நாடுகளில் இருந்து இயல்பாக்குதலை விரும்பும் இஸ்ரேல், இப்போது தெரிவுகளை கெட்டுப்போக வைத்துவிட்டது. இருந்தாலும் இயல்பாக்கத்துக்கு இசைவானவர்கள் நல்ல நடத்தைக்கான சான்றிதழை கொண்டிருக்க வேண்டும் என்று இயல்பாக்கத்துக்கான நிபந்தனைகளையும் அதுவே முன்வைக்கின்றது. இதுவே மிகவும் வேடிக்கையானதாகவும் உள்ளது.

இயல்பாக்கம் என்பது இனிமேலும் ஆட்சியாளர்கள் தங்கள் சிம்மாசனங்களில் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காக இரகசியமாக பேணப்படும் ஓர் அவமானம் அல்ல.

அது இப்போது உலகிற்கு முன் திறவலாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை உலகிற்கு முன்னால் காட்டிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார்கள்.

இதனால் அவர்களுக்கு எதிரியால் வெகுமதியும் அளிக்கப்படுகின்றது. இது இயல்பாக்கத்துக்கு ஆதரவான அரபு ஆட்சியாளர்களை சீர்திருத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் உரிய இஸ்ரேலின் தண்டனையின் ஒரு வழிமுறையாகவும் மாறியுள்ளது.

இயல்பாக்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு இது ஒரு வெகுமதியாக அமைந்துள்ளது. மற்றும் டெல் அவிவ், அவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ள பாதைக்கு திரும்பும் வரை ஏனையவர்களுக்கு இது அச்சுறுத்தலாகவும் மாறி உள்ளது.

லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply