ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் பற்றிய விமர்சனங்கள் உண்டு.

உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி விட்டுக் கலைந்து செல்லும் நிகழ்வே தவிர, அதனால் ஆகப் போவது ஒன்றும் இல்லை என்பது தலையாய விமர்சனம்.

ஆனால், இம்முறை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டமும், அதனையொட்டிய நிகழ்ச்சிகளும் வெறும் வார்த்தை ஜாலங்களாக இருக்கவில்லை. அவை இராஜதந்திர புரட்சியின் ஆரம்பமாக திகழ்ந்தன.

காஸா யுத்தம் ஆரம்பமாகி இரண்டு வருடங்கள் கழிந்த தருணம். போரின் பேரழிவுகள் உலகின் மனசாட்சியை உலுக்கியிருந்தன பின்புலத்தில், பலம் வாய்ந்த உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் பிரத்தியேகக் கூட்டமொன்றை நடத்தினார்கள்.

இந்தக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. வெறுமனே சமாதானம் பற்றிப் பேசுவதுடன் நின்று விடாமல், எவ்வாறு சமானத்தைக் கட்டியெழுப்புவது என்பதை ஆராய்வதற்கான ஒன்றுகூடலாக அது அமைந்திருந்தது.

இஸ்ரேலின் அராஜகத்தில், இனி இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களாக அல்லலுறும் பலஸ்தீன மக்கள், பொதுச் சபை கூடும் போதெல்லாம் பலஸ்தீன இராஜ்ஜியம் பற்றி கனவு காண்பது வழக்கம். அந்தக் கனவு நிறைவேற மாட்டாதா என்றும் ஏங்குவார்கள்.

இந்தக் கனவின் ஆயுள் நீண்டதாக இருந்தது. கறைபடிந்த அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டணியின் தீவிர எதிர்ப்பின் விளைவாக, இந்தக் கனவு நிறைவேற்றப்பட முடியாததாக இருந்தது.

ஆனால், திங்களன்று நடந்த கூட்டத்தில் விளைந்த மாற்றம், சர்வதேச சமூகத்தின் முயற்சியால் அந்தக் கனவை அரசியல் யதார்த்தமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது.

இதுவரை காலமும் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணியை ஆதரித்த, அந்தக் கூட்டணிக்காக பரிந்து பேசிய சில முக்கியமான ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம், உலகம் எதிர்பாராதது.

குறிப்பாக, பலஸ்தீன இராஜ்ஜியத்தை பிரான்ஸும் அங்கீகரிப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் மேற்கொண்ட அறிவித்தலை சுட்டிக்காட்டலாம்.

பிரெஞ்சு ஜனாதிபதி மாத்திரமல்லாமல், பிரிட்டன், கனடா, அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் தலைவர்களும் கடந்த காலத்தில் தாம் பயணித்த பாதையில் இருந்து விலகி, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்.

இதனை வெறுமனே தனித்தனி நாடுகளின் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றமாக கருத முடியாது. இஸ்ரேலின் பழம்பெரும் கூட்டாளிகள், ஒரு கூட்டத்தில் இருந்து விலகி, புதியதொரு கூட்டமாக உருவாகிய முக்கியமான தருணமாக கருத வேண்டும.

புதிதாக உருவான கூட்டத்தின் மூலாபாயத்தை மெக்ரோன் தெளிவாகவே விபரித்தார். இனிமேலும் பலஸ்தீனர்கள் மீதான அத்துமீறலை அனுமதிக்காமல், இரு தேசங்கள் என்ற தீர்வுத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை சாத்தியப்படுத்தக்கூடிய ராஜதந்திர பின்புலத்தை உருவாக்குவது அவசியம் என மெக்ரோன் குறிப்பிட்டார்.

இஸ்ரேலும், பலஸ்தீனமும் அருகருகில் இரு தேசங்களாக இருக்கக் கூடிய தீர்வு என்பது, இதுவரை காலமும் அதீத கொடுமைகளை அனுபவித்த பலஸ்தீன மக்களுக்குக் கிடைக்கக் கூடிய குறைந்த பட்ச ஆறுதலாகவேனும் இருக்கலாம். இந்தத் தீர்வுத் திட்டத்தை அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டணி நீண்டகாலமாக கிடப்பில் போட்டு வைத்திருந்தபோது, அதற்கு பிரான்ஸும் உடந்தையாக இருந்ததை மறந்து விட முடியாது.

பலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேலின் பழைய கூட்டாளிகள் அனுசரித்த கொள்கைகள் காரணமாகவும், உலக நாடுகளின் கையாலாக தனம் காரணமாகவும் சமாதானம் என்பது கானல் நீராகி விடுமோ என்று மெக்ரோன் அஞ்சியிருக்கக்கூடும்.

எல்லை மீறிச் செல்லும் இஸ்ரேல், காஸாவில் பேரழிவை ஏற்படுத்தி விட்டு, மேற்குக் கரையில் பலஸ்தீனக் குடியிருப்புக்களை விழுங்கி ஏப்பம் விடும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டிருந்தது. இதனை இப்படியே விட்டு விடும் பட்சத்தில் மேற்குக் கரையும் சுடுகாடாகி விடும் என்ற அசசம் மெக்ரோனுக்கும், அவருடன் புதிதாக கூட்டு சேர்ந்த நாடுகளின் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

பலஸ்தீன இராஜ்ஜியத்தை முறையாக அங்கீரிக்கக்கூடிய தீர்வு நடைமுறையின் முதற்படியாக பிரான்ஸ் தூதரகத்தை ஆரம்பிக்கப் போவதாக மெக்ரோன் கூறியதன் தாற்பர்யம், இந்த அச்சம் தான்.

மெக்ரோனின் அறிவித்தல், பலஸ்தீனர்களுக்காக அறிவிக்கப்பட்ட வெறும் சலுகை அல்ல. அது பலஸ்தீன மக்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக சர்வதேச சமூகத்தைத் தூண்டும் காத்திரமான முயற்சி.

சவூதி அரேபியாவுடன் சேர்ந்து மெக்ரோன் ஏற்பாடு செய்த மாநாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிராகரித்திருந்தன. இந்த நிராகரிப்பு தெளிவான செய்தியை எடுத்துச் சொல்லியது.

முன்னர், அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டணி பலமாக இருந்தது. இன்று அந்தக் கூட்டணியில் இருந்து பெருமளவு நாடுகள் விலகி வந்திருப்பதால், அமெரிக்காவும், இஸ்ரேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் உலகப் பொது அரங்கில் இருந்து அவை தான் இன்று நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது.

பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக அவருக்கு விசா தர மறுத்ததன் மூலம், பலஸ்தீனத்தைத் தனிமைப்படுத்தலாம் என அமெரிக்கா நினைத்திருக்கலாம்.

ஆனால், அப்பாஸ் வீடியோ தொடர்பை ஏற்படுத்தி பலஸ்தீனர்களின் விமோனத்திற்காக பேசியதை பெரும்பாலான உலக நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால், அமெரிக்காவின் நோக்கம் தான் தனிமைப்படுத்தப்பட்டது.

உண்மையில், எந்தவொரு தலைவரது கருத்திற்கு இடமளிக்கக் கூடாது என்று அமெரிக்கா நினைத்ததோ, அந்தத் தலைவரின் கருத்து உலகில் வலுவாக பிரதிபலித்தது எனலாம்.

இன்று ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. இவற்றுள் பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்டுள்ள பிரான்ஸும், பிரிட்டனும் கூட அடங்கும்.

இன்று உலகின் பொதுக் கருத்து பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இதனை அறியாமல், இஸ்ரேலியப் படைகள் அராஜகங்களைத் தொடரும் பட்சத்தில், ஒட்டுமொத்த உலக நாடுகளும் வலுவான குரலில் கண்டிக்க நேரலாம்.

அப்போது, பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் யுத்தம், காஸா மண்ணில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை போன்ற இராஜதந்திர தளங்களுக்கு மாறக்கூடும்.

கடந்த வாரம் நடந்து முடிந்த ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது அமர்வு என்பது மாற்றத்திற்குரிய புள்ளியாகும். இப்போதுள்ள கேள்வியின் முக்கியத்துவம், ஒட்டுமொத்த உலகமும் பலஸ்தீனத்தை அங்கீகரிக்குமா என்பதில் அல்லாமல், எவ்வளவு விரைவாக அங்கீகரிக்க வேண்டும் என்பதில் தங்கியிருக்கிறது.

இன்றளவில் பலஸ்தீன் இராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கு இராஜதந்திர ரீதியில் ஒவ்வொரு செங்கல்லாக கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள புதிய கூட்டணி, பலஸதீனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சக்திகளின் அனுமதியுடனோ, அனுமதி இல்லாமலோ, பலஸ்தீன மக்களுக்கான புதிய அத்தியாயத்தை எழுதக்கூடும்.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

Share.
Leave A Reply