கனடா கல்லூரி மாணவி ஒருவர் டெஸ்லா கார் விபத்தின்போது, காரின் கதவுகளை திறக்க முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததற்கு, கார் வடிவமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ அருகே நடந்த இந்த விபத்தில், 19 வயதான மாணவி கிரிஸ்டா சுகஹாரா என்பவர் சைபர்ட்ரக் காரின் பின் இருக்கையில் பயணித்துள்ளார்.

அவர்கள் பயணித்த காரின் ஓட்டுநர் மது அருந்திய நிலையில் காரை மரத்தில் மோதியதில், காரில் இருந்த நான்கு பேரில் மூவர் உயிரிழந்தனர்.

டெஸ்லா கார்களில், காரை இயக்கும் பேட்டரி தீ விபத்தில் சேதமடையும்போது, கதவுகளை திறக்க பயன்படுத்தப்படும் மின்சாரப் பூட்டுகள் செயல்படுவதில்லை.

மின்சாரம் துண்டிக்கப்பட்டால், கையால் கதவுகளை திறக்கும் வசதி இருந்தும், அதை உடனடியாக கண்டுபிடிப்பது கடினம்.

இந்த வடிவமைப்புக் குறைபாடே, கிரிஸ்டா புகை மற்றும் தீயில் சிக்கி மூச்சுத் திணறி இறக்கக் காரணம் என்று அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குறைபாடு குறித்து டெஸ்லா நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக தெரியும் என்றும், அவர்கள் உடனடியாக சரிசெய்ய தவறிவிட்டார்கள் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த குற்றச்சாட்டு குறித்தும், இந்த வழக்கு குறித்தும் டெஸ்லா நிறுவனம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply