ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை யின் 60 ஆவது கூட்­டத்­தொ­டரில் பிரே­ர­ணை­களை முன்­வைப்­ப­தற்­கான காலை­எல்லை கடந்த 25 திகதி பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் நிறை­வ­டைந்­தது.

ஆனால், இந்த கால­எல்­லைக்கு முன்­ன­தா­கவே இலங்­கையில் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல், நீதி மற்றும் மனி­த­உ­ரி­மை­களை மேம்­ப­டுத்­துதல் சம்­பந்­த­மான பிரே­ரணை, ஜெனிவா பேரவை செய­ல­கத்தில் அனு­ச­ரணை நாடு­களால் கைய­ளிக்­கப்­பட்டு விட்­டது.

இந்த பிரே­ர­ணையின் முதல் வரைவு, கடந்த 9ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

அதை அடுத்து, 15 ஆம் திகதி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நடந்த ஒரு முறை­சாரா கலந்­து­ரை­யா­டலில், இந்த வரைவு தொடர்­பாக கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

அதில் சில விட­யங்­களை இலங்கை அர­சாங்கம் கடு­மை­யாக எதிர்த்­தது. சில திருத்த முன்­மொ­ழி­வு­களும் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

இவற்றின் அடிப்­ப­டையில் கடந்த 23ஆம் திகதி அனு­ச­ரணை நாடுகள் திருத்­தப்­பட்ட தீர்­மான வரவை சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றன.

இதில் மேலும் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு வரும் முதலாம் திகதி மதியம் வரை கால­அ­வ­காசம் உள்­ளது.

ஆனால், இனிமேல் புதிய பிரே­ர­ணை­களை வைக்க முடி­யாது.

இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையின் இரண்­டா­வது வரைவு பல மாற்­றங்­க­ளுக்கு உட்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த மாற்­றங்கள் முதல் வரைவை விட பல­வீ­ன­மான ஒன்­றாக – நீர்த்­துப்­போக செய்­யப்­பட்ட ஒன்­றாக- காணப்­ப­டு­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கடந்த 2012 ஆம் ஆண்­டி­லி­ருந்து, இலங்கை தொடர்­பான தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்டு வரு­கின்­றன.

ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் முத­லா­வ­தாக முன் வைக்­கப்­பட்ட வரைவை விட, இரண்­டா­வ­தாக முன்­வைக்­கப்­படும் வரைவு கனதி குறை­வா­ன­தாக -நீர்த்துப் போன­தாக இருப்­பது வழமை.

பல சந்­தர்ப்­பங்­களில் தீர்­மான வரை­வுகள், பல உள்­ளக கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு பிறகு பல­முறை மாற்­றங்கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­போல இம்­மு­றையும் முத­லா­வது வரைவை விட இரண்­டா­வது வரைவில், பல விட­யங்கள் நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

“இரா­ணு­வ­ம­ய­மாக்கம், ஊழல் மோச­டிகள், ஆட்சி நிர்­வா­கத்தில் பொறுப்­புக்­கூ­ற­லின்மை மற்றும் கடந்­த­கால மீறல்கள் விட­யத்தில் தொடரும் தண்­ட­னை­களில் இருந்து விடு­படும் போக்கு என்­பன உள்­ள­டங்­க­லாக, பொரு­ளா­தார நெருக்­கடி தோற்றம் பெறு­வ­தற்கு வழி­கோ­லிய கார­ணிகள் தொடர்­பாக, கவனம் செலுத்தித் தீர்வு காணப்­பட வேண்­டி­யது அவ­சியம்” என முதல் வரைவில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

புதிய வரைவில், ‘இரா­ணு­வ­ம­ய­மாக்கம்’ என்ற விடயம் நீக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையில் இரா­ணு­வ­ம­ய­மாக்கம் பல்­வேறு பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது. பொரு­ளா­தார நெருக்­கடி தோற்றம் பெறு­வ­தற்கும் அதுவும் ஒரு காரணம்.

வீங்கிப் பருத்த படை­ப­லமும் அதற்­கான செல­வி­னங்­களும், பொரு­ளா­தார ரீதி­யாக இலங்கை நெருக்­க­டியை எதிர்­கொள்­வ­தற்கு பிர­தான காரணம்.

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக பொரு­ளியல் பேரா­சி­ரியர் வசந்த அத்­து­கோ­ரள, அண்­மையில் ஒரு நேர்­கா­ணலில் இலங்­கையின் ஆயு­தப்­ப­டை­களின் வீக்கம் எத்­த­கை­யது எனக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

“இலங்­கையின் வேலைப்­ப­டையில் ஆயு­தப்­ப­டை­யினர் 3.74 வீத­மாக இருக்­கின்­றனர். அமெ­ரிக்­காவில் இது வெறு­மனே 0.84 வீதம் மட்டும் தான். சீனாவில் 0.33, இந்­தி­யாவில் 0.58, இந்­தோ­னே­சி­யாவில் 0.48, அவுஸ்­ரே­லி­யாவில் 0.44 வீத­மாக உள்­ளது. தெற்­கா­சி­யாவில் பாகிஸ்­தானில் மட்டும் 1.25 வீத­மாக இது காணப்­ப­டு­கி­றது“ என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இலங்கை எந்­த­ள­வுக்கு வீங்கிப் பருத்த படை­ய­மைப்பை கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தற்கு இந்த உதா­ரணம் போதும்.

அண்­மையில் முன்­வைக்­கப்­பட்ட 2026 ஆம் ஆண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டுச் சட்­ட­மூ­லத்தின் படி, அடுத்த ஆண்டு 455 பில்­லியன் ரூபாய் பாது­காப்பு அமைச்­சுக்குத் தேவை என மதிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

இது இந்த ஆண்டு ஒதுக்­கப்­பட்ட, 423 பில்­லியன் ரூபாவை விட அதிகம்.

இரா­ணு­வ­ம­ய­மாக்கல் கார­ண­மா­கவே போர் இல்­லாத சூழ­லிலும் இலங்கை பெரு­ம­ளவில் நிதியை பாது­காப்­புக்­காக ஒதுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஏற்­கெ­னவே பாது­காப்பு சீர்­தி­ருத்­தங்­க­ளின்­படி படைக்­கு­றைப்­புக்­கான கால­எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தாலும், அவை சரி­யான முறையில் பின்­பற்­றப்­ப­டு­கி­றதா என்ற சந்­தே­கங்கள் உள்­ளன.

இவ்­வா­றான நிலையில் இரா­ணு­வ­ம­ய­மாக்­கத்தை பொரு­ளா­தார நெருக்­க­டிக்­கான ஒரு கார­ணி­யாக முன்­வைத்­ததில் தவ­றில்லை.

ஆனால், அது நீக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணத்­திற்குப் பின்னால், இலங்கை அர­சாங்கம் இருந்­தி­ருக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

ஆட்­சியில் உள்ள அர­சாங்கம், இரா­ணு­வ­ம­ய­மாக்­கலை பொரு­ளா­தார நெருக்­க­டிக்­கான ஒரு கார­ணி­யாக ஏற்றுக் கொள்ள மறுப்­பது, இரா­ணு­வ­ம­ய­மாக்க கொள்கை மீது தற்­போ­தைய அர­சாங்கம் தீவி­ர­மாக இருக்­கி­றது என்­ப­தையே எடுத்துக் காட்­டு­கி­றது.

அதே­போல, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு கூறும் முதல் வரைவின் பரிந்­து­ரையும் இரண்­டா­வது வரைவில் நீக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதற்குப் பதி­லாக, “ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் பரிந்­து­ரைகள் மற்றும் சிறப்பு அறிக்­கை­யா­ளர்­களின் பரிந்­து­ரைகள் மீது விசேட கவனம் செலுத்­து­மாறு” திருத்­தப்­பட்­டுள்­ளது.

இது ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் முன்­வைக்கும் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இல்லை என, இலங்கை அர­சுக்கு ஊக்­க­ம­ளிக்கக் கூடிய விட­ய­மாக இருக்­கி­றது. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற பரிந்­து­ரைகள் கவ­னத்தில் எடுக்­கப்­பட்டால் போதும் என்­ற­ளவில் இந்த வரைவு நீர்த்துப் போன­தாக காணப்­ப­டு­கி­றது.

அதே­போல, “இனப்­பி­ரச்­சினை“ என்ற சொற்­பதம் நீக்­கப்­பட்டு வெறு­மனே “மோதல்“ என சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. இதுவும் மிக கன­தி­யான ஒரு விடயம் அகற்­றப்­பட்­டி­ருப்­பதை தெளி­வாக காட்­டு­கி­றது.

“கடந்த தசாப்­தங்­களில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்­டத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக, சுயா­தீன சிறப்பு சட்­ட­வா­ளரின் பங்­கேற்­பு­ட­னான பிரத்­தி­யேக நீதிப் பொறி­முறை ஒன்றை நிறு­வு­வது குறித்து, கவனம் செலுத்­து­மாறு” முன்­னைய வரைவில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்த போதும், புதிய வரைவில் அது முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூல­மாக விசேட நீதிப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வது தொடர்­பான அழுத்தம் தவிர்க்­கப்­பட்­டுள்­ளது.

சுயா­தீ­ன­மான சட்­ட­வா­ளரின் பங்­கேற்­பு­ட­னான பிரத்­தி­யேக நீதிப் பொறி­முறை பற்­றிய விட­யத்தில் எந்­த­வொரு வெளி­நாட்டுத் தலை­யீடு பற்­றியும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஆனாலும், அது நீக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக விசா­ரணை செய்­வது பற்­றிய அழுத்­தங்­களை குறைக்கும் வகையில் அமைந்­தி­ருக்­கி­றது.

இலங்கை அர­சாங்கம், குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுப்­ப­தற்கு உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­குழு ஒன்றை அமைப்­பது பற்றி வாக்­கு­றுதி கொடுத்­தி­ருந்­தாலும், அது விசேட நீதிப் பொறி­மு­றை­யாக -பிரத்­தி­யேக அதி­கா­ரங்­களைக் கொண்ட – ஒரு சுயா­தீன அமைப்­பாக இருக்­காது.

அந்த ஆணைக்­குழு உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஒன்­றாக இருக்­குமே தவிர, குற்­றங்­களை விசா­ரிக்­கின்ற, தண்­டனை வழங்­கு­கின்ற அதி­காரம் படைத்த ஒன்­றாக இருக்­காது.

இதனை அர­சாங்கம் ஏற்­கெ­னவே தெளி­வாக கூறி­யி­ருக்­கி­றது.

இருந்த சூழலில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் முன்­வைக்­கப்­படும் புதிய வரைவு அதற்கு அழுத்தம் கொடுக்­காத ஒன்­றாக இருப்­பது கரி­ச­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

முன்­ன­தாக, 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கலப்பு விசா­ரணை பொறி­முறை ஒன்றை முன்­மொ­ழிந்து தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றி­யது.

அதற்கு இணங்கி விட்டு மைத்­திரி- ரணில் அர­சாங்கம் ஐ.நா.வின் காலை வாரி­யது.

ஆனால், இம்­முறை அது பற்­றிய விட­யங்கள் எது­வுமே வரைவில் காணப்­ப­ட­வில்லை.

இந்த வரைவை நிறை­வேற்­று­வதில் பிரித்­தா­னியா தலை­மை­யி­லான நாடுகள் எதிர்­கொள்ளும் சவாலை இது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்தத் தீர்­மான வரைவை நிறை­வேற்­று­வ­தற்கு அனு­ச­ரணை நாடு­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க பல நாடுகள் தயங்­கு­வ­தாக தெரி­கி­றது.

இலங்கை அர­சாங்­கத்­துக்கு சந்­தர்ப்பம் அளிப்­ப­தற்கு பல நாடுகள் முற்­ப­டு­கின்ற சூழலில், அதனைத் தாண்டி அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் கண்­கா­ணிப்பில் நாட்டை வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­ச­ரணை நாடுகள் விரும்­பு­கின்­றன.

அந்த கண்­கா­ணிப்பு நிலை தொடர வேண்­டு­மாயின், நீர்த்துப் போன ஒரு வரை­வையே கொண்டு வந்து நிறை­வேற்ற வேண்­டிய கட்­டாயம் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த வரை­வு­களை ஒப்­பிட்டு நோக்­கு­கின்ற போது இலங்கை அர­சாங்­கத்தின் அழுத்­தங்­க­ளுக்கு அனு­ச­ரணை நாடுகள் பணிந்து போகின்ற தன்மை தெளி­வாக தென்­ப­டு­கி­றது.

அது மாத்­தி­ர­மல்ல, அடுத்த இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் வழங்கும் வகையில் இந்த பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும், முதல் வரைவில் நான்கு அறிக்­கை­களை சமர்ப்­பிக்க வேண்டும் என, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் கேட்டுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

61ஆவது அமர்­விலும் 64 ஆவது அமர்­விலும் வாய்­மொழி அறிக்­கை­க­ளையும், 63 ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்­கை­யையும், 66 ஆவது அமர்வில் விரி­வான அறிக்­கை­யுடன் விவா­தத்­தையும் நடத்­து­வ­தற்கு முதல் வரைவு முன்­மொ­ழிந்­தி­ருந்­தது.

ஆனால், தற்­போ­தைய வரைவில் வாய்­மொழி அறிக்­கைகள் – வரும், 2026 பெப்­ர­வரி மற்றும், 2027 பெப்­ர­வரி அமர்­வு­களில், சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற ஆணை நீக்கப்பட்டிருக்கிறது.

தனியே 63 ஆவது அமர்வில் (2026 செப்டெம்பர்) எழுத்துமூல அறிக்கையையும், 2027 செப்டெம்பரில், 66 வது அமர்வில், விரிவான எழுத்து மூல அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு மட்டும் கூறப்பட்டிருக்கிறது.

இது, வருடத்தில் இரண்டு முறை ஜெனிவாவில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து இலங்கையை விடுவித்து ஆண்டுக்கு ஒரு முறையாக சுருக்கியிருக்கிறது.

இன்னும் ஒரு வருடத்திற்கு இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை பற்றிய கவலை இன்றி இருக்கலாம். அதற்குப் பின்னரே இந்த விவகாரம் குறித்த கேள்விகள் அங்கு எழுப்பப்படும்.

அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து இறுதி அறிக்கை முன்வைக்கப்படும் போது பதிலளித்தால் சரி. ஆக, இலங்கை அரசாங்கத்துக்கு இந்த இரண்டாவது திருத்தப்பட்ட வரைவு, அதிகளவிலான வெளியையும் காலஅவகாசத்தையும் அளிப்பதாக இருக்கிறது.

இது பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் பெரிதும் ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்.

ஏனென்றால் ஜெனிவாவின் அழுத்தங்களில் இருந்து விடுபடுகின்ற சூழலை, இலங்கை அரசாங்கம் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்காகவோ நீதிக்காகவோ பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை அவர்களிடம் துளியும் கிடையாது.

சுபத்ரா

Share.
Leave A Reply