உலக அரசியல் வரலாறு ஆதிக்க சக்திகளின் கைகளிலே இருந்து வருகிறது. இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் அதனை நிர்ணயிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் முதன்மை வகித்தன.
ஆனால் பனிப் போருக்கு பின்னரான உலக அரசியலை ஆதிக்க சக்திகள் சிறிய அரசுகள் மீது செலுத்தும் செல்வாக்கினால் ஆளுகை செய்துவருகின்றன.
நிலப்பரப்பால் சிறியதானாலும் உலகத்தை ஆளுகின்ற விஞ்ஞானிகளையும் பொருளாதார பலத்தையும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவையும், அதீதமான அச்சுறுத்தலையும் உலகம் முழுவதும் முன்னிறுத்திக் கொண்டு யூதர்கள், உலக ஆதிக்கத்தின் பங்காளர்களாகக் காணப்படுகின்றனர்.
அவர்களுக்கு காவலாக அல்லது பாதுகாப்பான நாடாகவும், ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடாகவும் விளங்கும் ஐக்கிய அமெரிக்காவும், அதன் அதிகாரமும், இஸ்ரேலின் அணுகுமுறைகளை அங்கீகரிக்கின்ற போக்கினை மையப்படுத்தியே யூதர்களின் இருப்பு உலக வரலாற்றில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய யூதநாட்டின் பிரதமர் நெதன்யாகு ஐ.நா.வின் பொதுச் சபையில் உரையாற்ற முற்பட்டபோது அனைத்து தலைவர்களும் பணியாளர்களும் வெளிநடப்பு செய்கின்ற காட்சியை உலகம் பார்த்து வியந்துள்ளது.
இக்கட்டுரையும் அத்தகைய அவமதிப்பைக் கடந்து அதிகாரத்தின் வெளிப்பாடு கட்டமைக்கப்படும் விதத்தை தேடுவதாக உள்ளது.
26.09.2025 அன்று பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைக்கப்பட்ட போது, பொதுச்சபை வெறுமையாகின்றது.
இது ஒரு அரசியல் தலைவரை அவமதிக்கும் செயலாகவே உலக நாடுகளின் தலைவார்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
காசாவில் கொல்லப்படும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மற்றும் சாதாரண பலஸ்தீனர்களுக்காகவும் உலகத் தலைவர்கள் இஸ்ரேல் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் போரை நிறுத்த, உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் உட்பட தீர்மானம் முன்வைத்த போதும் ஹமாஸ் அமைப்பை அழிப்பதே தன்னுடைய நோக்கம் எனக்கூறிக் கொண்டு பலஸ்தீனர்களை அழித்தொழித்து அந்த நிலத்தில் யூதர்களை குடியேற்றுவது என்ற நோக்கோடு இஸ்ரேலிய அரசாங்கம் செயற்படுகிறது.
இதனைக் கண்டிப்பதும், கைவிட வைப்பதும், பொதுச்சபை உறுப்பு நாடுகளின் இலக்காக அமைந்திருக்கின்றது. இதற்காகவே, நெதன்யாகு அவமதிக்கப்பட்டுள்ளார்.
மிக மோசமான மனித உரிமை மீறலாளர் ஒருவர் பொதுச் சபையில் உரைநிகழ்த்த முடியாது என்பதை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது யூதர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உலக நாடுகளின் உணர்வுகளையும் தந்துள்ளது.
ஆனாலும் 142 நாடுகள் இஸ்ரேலை எதிர்த்த போதும்; போரை நிறுத்த முடியாத, அழிவுகளை தடுத்து நிறுத்த முடியாத சூழலை உலக அதிகாரம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையான அம்சங்களை விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது.
முதலாவது, உலக வரலாறு பலக் கோட்பாட்டின் (Theory of Realism) அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.
எல்லா அரசுகளும், இராணுவ பலத்தினால் ஆளப்படுகின்ற ஒரு சூழலுக்குள் பலவீனமான அரசுகள் பலமான அரசுகளோடு ஒட்டி உறவாடுவதன் மூலம் பிழைத்துக்கொள்ளுகின்றன. அதுவே பனிப்போர் உலக ஒழுங்காக காணப்பட்டது.
அது உடைகின்ற போது, அதன் எச்சசொச்சங்கள் அனைத்தும் ஆதிக்கம் பெற்ற அரசுகளை மையப்படுத்தி, புதிய உலக ஒழுங்கு ஒன்று கட்டப்பட்டது.
அதன் விளைவு, பல துருவ அரசியல் ஒழுங்கை உருவாக்கியிருந்தது. அதுவும் கூட பனிப்போரின் அனுபவங்களையும் உத்திகளையும் தொடர்வதாக மாறியது.
இதன் அடிப்படைக்குள்ளே, உலக வரலாறு பலமான அரசியல் சக்திகளால் வரையப்பட்டுவருகிறது.
அமெரிக்கா உலகத்தில் முதல் தரமான அரசு என்பதை அதன் இராணுவம், பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உத்தரவாதப்படுத்துகிறது.
அதன் நிழலில் ஒட்டிப்பிழைக்கும் அரசாக இஸ்ரேல் காணப்படுகிறது. அது மட்டுமல்லாது அமெரிக்காவில் வாழும் அமெரிக்க யூதர்கள் 6.3 மில்லியன், மற்றும் உலகம் முழுவதும் பரந்து இருக்கும் யூதர்கள் 2.2 மில்லியன் தமது தாய் நிலத்தை, வாக்களிக்கப்பட்ட நிலத்தை, கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலத்தை, தமக்குரித்துடையதாக வைத்துக் கொள்வதற்கு மனித அழிப்புகளில் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளனர்.
(யூதர்களின் மக்கள் தொகை ஏறக்குறைய 15.8 மில்லியன் மட்டுமே) அதற்கு முண்டு கொடுக்கும் சக்தியாக அமெரிக்கா வழங்கும் உதவிகளே அடிப்படையானது.
அதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு இஸ்ரேலிய அரசை ஆதரித்துவருகின்றனர்.
ஆனால் சமகாலத்தில் அவர்கள் அந்த அணுகுமுறைகளில் மாற்றத்தைச் செய்துள்ளனர். இருந்தபோதும் அமெரிக்காவின் துணையுடன் இஸ்ரேல், மேற்காசியாவையும் அராபிய உலகத்தையும் அழித்து அரசாக நிலைப்படுத்தி வருகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அமெரிக்காவின் ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிற போது முன்வைத்த விடயங்கள் ஐ.நா. சபையை அவமதிப்பதாக இருந்தது.
பனிப்போருக்கு பின்னான (Post Cold War) உலகத்தில் ஐக்கிய நாடு சபை அதிலும் குறிப்பாக பாதுகாப்பு சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என கோபி அனான் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்த போது ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அதனை பாதுகாப்பு சபை நாடுகள் முதன்மைப்படுத்தவில்லை. அதனால் பழைய உலக ஒழுங்குக்குள் புதிய நூற்றாண்டை உலகம் எதிர் கொண்டது. அதனையே இன்றும் உலகம் அறுவடை செய்கிறது.
இரண்டாவது, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு எத்தகைய அவமதிப்புக்கும் சளைத்தவர் அல்ல என்பதை அவரது ஆட்சியும், அதிகாரமும், ஊழலும், வெளிப்படுத்துவதோடு, அராபியர்களை கொல்வதன் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தி வருபவர் அவர்.
ஆராபியர்களையும், பலஸ்தீனர்களையும் கொன்றால் அவர் எதனையும் மேற்கொள்ள முடியும். அது குற்றமாக கருதப்படாது என்பதே அடிப்படையானதாகும்.
அவர் மீதான அவமானம் என்பது யூதர்களுக்கான அவமானமாகவும் அமெரிக்கர்களுக்கான அவமானமாகவும் மாற்றப்படுகிற போதே காசா மீதான படுகொலையையும் இன அழிப்பையும் தடுத்து நிறுத்த முடியும்.
அராபியர்களும் உலகத்தில் உள்ள ஏனைய நாடுகளும் காசாவை மையப்படுத்தி அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் அனைத்து விதமான வர்த்தகங்களையும் கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்துவார்களாயின் உறவு முறையினை முற்றாக நிராகரிப்பவர்களாயின் காசா போர் நிறுத்தப்பட முடியும்.
அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக, அமெரிக்கர்களுடைய எதிர்ப்புவாதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது.
அதனை முழுமையானதாக மாற்ற வேண்டும் நெதன்யாகு போன்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவமதிக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நிகழ்த்தப்பட வேண்டும். வெறுமனே இஸ்ரேலியப் பிரதமர் மட்டும் காசா படுகொலைக்கு காரணமானவர் அல்லர்.
அவரோடு இணைந்து அமெரிக்கர்களும் அமெரிக்கா ஆட்சியாளர்களும் மிகப் பிரதான பங்குதாரர்கள். அவர்கள் மீதான அணுகுமுறையில் மாற்ற வேண்டும். அமெரிக்காவின் பெயரில் இதனை காசாவிலும் மேற்காசியப் பரப்பிலும் அராபிய நாடுகள் மீதும் இஸ்ரேல் நிகழ்த்துகிறது.
உங்களுக்கான போரை நாம் நிகழ்த்துகிறோம் என்றும் எங்கள் எதிரியே உங்களது எதிரி என்றும் நெதன்யாகு அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
அதன் பின்புலத்தில் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் உலகத்தின் பலஸ்தீனம் மீதான அங்கீகாரத்தை சாத்தியப்படுத்த முடியாமல் உள்ளது.
ஆனால் எந்த அடிப்படையிலும் அந்த நாட்டுக்கான அதிகார கட்டமைப்புகளும் இராணுவ கட்டமைப்புகளும், நிலத்தின் இறைமை மீதான பலமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அங்கீகரிப்பது என்பது அதன் இறைமையை அங்கீகரிப்பதற்கானது. ஆனால் அதனை ஐ.நா.சபையோ உலக நாடுகளோ முன் வைப்பதற்குத் தயாராக இல்லாத நிலை ஒன்றை கண்டு கொள்ள முடிகிறது.
மூன்றாவது இஸ்ரேலுக்கு பின்னால் உலக அதிகாரத்தை ஆதிக்கம் செய்யும் அரசுகளின் எண்ணமும், அவற்றின் அதிகார வெறியும் பிரதான காரணமாக உள்ளது.
பலஸ்தீன நாடு மீதான அங்கீகாரம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அனைத்து அரசுகளும், அமெரிக்காவின் இராணுவ பலத்துக்கும் அதன் வீட்டோ அதிகாரத்துக்காகவும் அச்சமடைவதாக தெரிகிறது. அமெரிக்காவுடனான உறவை பாதித்துவிடும் என்பதற்காக பலஸ்தீனரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறுகின்றன.
காசா மீதான படுகொலை, உலக வரலாற்றில் பல தேசிய இனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலையின் தொடர்ச்சியே. அல்பேனியர் முதல் பலஸ்தீனர்கள் வரை இனப்படுகொலைகளை உலகம் சந்தித்திருக்கிறது.
அவை ஒவ்வொன்றுக்குமான தீர்வுகளை தமது நலனுக்கு உட்படுத்தியே நிறைவேற்றியுள்ளனர். தகவல் யுகத்தின் வளர்ச்சியும் பல்துருவ அரசியல் ஒழுங்கும் காசா படுகொலையை அதிக உலக நாடுகளை உணர வைத்துள்ளது.
ஆனால் உலகம் தேசிய இனங்களுக்கும் அவற்றின் விடுதலைக்கும் வழங்குகின்ற வெகுமதியாக இனப்படுகொலையே அமைந்திருகிறது.
அதனைக் கண்டு கொண்ட அனைத்து அரசுகளும் அதிகாரத்தை முன்னிறுத்தி மௌனமாகிப் போகின்றன. இத்தகைய சந்தர்ப்பமே ஐ.நா.சபையின் மறுசீரமைப்புக்கான சந்தர்ப்பமாக தெரிகிறது.
ஐ.நா.வின் பாதுகாப்பு சபை மறுசீரமைக்கப்பட வேண்டிய காலத்தில், உலகம் அதனைக் கடந்து செல்ல முயற்சிக்கிறது. பலஸ்தீனர்களை போன்று ஆயிரக்கணக்கான தேசிய இனங்கள் அழிவுகளின் விளிம்பில் இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை ஐ.நா.சபையும் அதன் அதிகார கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
அது தவறுகின்ற பட்சத்தில் 142= 2 அரசு என்ற வரலாறு உலகத்தில் நிர்ணயிக்கும் நிலை மேலும் நீடிப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் உலகம் புதிய நியதிகளுக்குள் உட்படுத்தப்பட வேண்டும். அவமதிப்பினால் மட்டும் அதனை சாதித்துவிட முடியாது.
எனவே தலைவர்கள் அவமதிக்கப்படுவது என்பது தேசங்கள் நிராகரிக்கப்படுவதாக மாற வேண்டும்.
நாடுகள் தலைவர்களை முன் வைத்துக்கொண்டு தப்பிப் பிழைக்க முடியாது. தலைவர்களை தண்டிப்பதே உலகத்தின் வரலாறாக இருக்கின்றது. ஆனால் அதற்கு தலைமைகளுக்கு பின்னால் இருக்கும் வலுவான சக்திகளும், அந்த நாடுகளின் அதிகார அமைப்பு முறைகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்கான வாய்ப்புகளும் வழிமுறைகளும் உலக வரலாற்றில் உண்டு. உலக வரலாற்றை மாற்ற வேண்டுமானால் அமெரிக்காவும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நெதன்யாகு போன்று டொனால்ட் ட்ரம்ப் அவமதிக்கப்பட வேண்டும்.
உலகத் தலைவர்களால் அமெரிக்கா நிராகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அந்த சூழல் ஏற்படுகிற போது உலகம் ஒரு புதிய மாறுதலுக்குள் நுழைய முடியும். ஜனநாயகம், தராண்மைவாதம் நவ- தாரண்மைவாதம் உரையாடப்படுகின்ற உலகம் அதற்குரிய உண்மையான அர்த்தங்களை காவிச் செல்வதற்கான நிறுவனமாக ஐ.நா.சபை மாற்றப்பட வேண்டும்.
கே.ரீ. கணேசலிங்கம்