ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ரக்பி வீரர் தாஜுடீன் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி தனது காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி கார் முற்றாக எரிந்ததில் கருகி இறந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. இந்த விபத்து நாரஹேன்பிட்டி ஷாலிகா மைதானம் அருகே இடம்பெற்றது.அது ஒரு விபத்து சம்பவமாகவே வெளிப்படுத்தப்பட்டது.
எனினும் நாரேன்பிட்ட பொலிஸாரினால் இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டு அது ஒரு விபத்தாகவே சித்திரிக்கப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார். அவரது மகன் நாமல் மற்றும் யோசித்த ஆகியோர் ரக்பி வீரர்களாவர்.
பெண் ஒருவரின் சினேகம் தொடர்பில் ராஜபக்சவின் புதல்வர்களுக்கும் தாஜுடீனுக்குமிடையில் ஏற்பட்ட முரணே அவரது முடிவுக்கு காரணமாகி விட்டதாக அப்போது அரசல் புரசலாக கதைகள் பேசப்பட்டன.
ஆனால் மகிந்த மிகவும் அதிகாரம் கூடிய ஒருவராகவும் அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவர் சொல்லும் சகலவற்றுக்கும் தலையாட்டி பொம்மைகளாக இருந்ததால் எவருக்கும் ஒன்றும் செய்ய முடியாது போய்விட்டது. பொலிஸார் மகிந்தவின் கைபொம்மைகளாக இருந்தனர்.
விபத்தாகக் கருதப்பட்டு, நாரஹேன்பிட்டி பொலிஸார் மற்றும் பொரளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்கு, 2015 ஆம் ஆண்டில் அன்றைய கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் காமினி மாத்துரட்டவின் அறிக்கை அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டது.
அப்போது நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்ரி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மகிந்தவை பலவீனப்படுத்துவதற்கு பழைய குற்றச்சம்பவங்களை தோண்ட ஆரம்பித்திருந்தனர். அதில் தாஜுடீன் மரணம் முக்கியமானது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விரிவான விசாரணையில், ஆரம்ப பிரேத பரிசோதனை முறையாக நடத்தப்படவில்லை என்பதும், மரணத்தில் சந்தேகம் இருப்பதும் தெரியவந்தது.
பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மார்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் எலும்புகள் காணாமல் போயிருந்ததுடன், தாஜுதீனின் மரணம் விபத்தல்ல, அது ஒரு கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கொலையாகக் கருதி விசாரணையைத் தொடர்ந்த குற்றப்புலனாய்வு திணைக்களம், தாஜுதீன் கடைசியாக ஹேவலொக் டவுனில் ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகே வாகனத்தை நிறுத்தி தண்ணீர் போத்தல் வாங்கச் சென்றதையும், அங்கிருந்து புறப்பட்டபோது அவரது வாகனத்தை மற்றொரு வாகனம் பின்தொடர்வதையும் சிசிடிவி காட்சிகளில் கண்டறிந்தது.
இரண்டாவது வாகனத்திற்கு அருகில் நின்ற அடையாளம் தெரியாத ஒரு நபரின் காட்சியை குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டது, எனினும் குறித்த நபர் அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமன் உள்ளிட்ட பல தேடப்படும் குற்றவாளிகள் மூலம் இந்த வழக்கில் ஒரு புதிய துருப்பு கிடைத்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அருண சாந்த, எனப்படும் “மித்தெனிய கஜ்ஜா”வின் கொலையுடன் பெக்ககோ சமனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு கஜ்ஜாவின் மனைவியிடமிருந்து ஒரு அறிக்கை கிடைத்தது. தனது கணவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், அவர் 2023ஆம் ஆண்டு ஒரு யூடியூப் நேர்காணலில் தாஜுதீன் வழக்கு குறித்துப் பேசியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
தாஜுதீன் வழக்கில் இரண்டாவது வாகனத்திற்கு அருகில் இருந்த நபரின் சிசிடிவி படத்தை கஜ்ஜாவின் மனைவிக்குக் காண்பித்தபோது, தனது கணவரின் நாட்பட்ட இடுப்பு வலியால் அவர் கைகளை இடுப்பில் வைக்கும் தோரணையைச் சுட்டிக்காட்டி, அந்தப் படத்தில் இருப்பது மறைந்த தனது கணவர் அருண சாந்த எனப்படும் “கஜ்ஜா” தான் என்று அவர் அடையாளம் காட்டினார்.
இதே வேளை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலும் ரகர் வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் குறித்து புதிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாஜுடீனை கடத்திய டிபெண்டர் ரக வாகனம் சிரிலிய சவிய அறக்கட்டளை நிறுவனத்துக்கு சொந்தமான WP KA0642 என்ற பதிவு எண்ணைக் கொண்டது என 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20 அன்று குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.
சிரிலிய சவிய என்பது மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனமாகும்.
சமூக நலத்திட்டங்கள் மற்றும் மக்களுக்கு உதவி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தத் திட்டம் நிதி முறைகேடுகள் மற்றும் பிற குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு, விசாரணைகளுக்கு உள்ளானது.
ஆனால் அதற்குப்பிறகு அது தொடர்பான விசாரணைகள் இழுபறியாகின. திடீரென மைத்ரிபால சிறிசேன மகிந்தவை பிரதமராக்கியமை, அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், கோட்டாபய ஜனாதிபதியானமை போன்றவற்றால் தாஜுடீன் கொலை வழக்கு விசாரணைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.
ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இந்த திட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டபோது, உதவி பெற்ற சிலர் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஷிரந்தி ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்தின் வாகனங்கள் கூட குற்றச் செயல்களுடன் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
சுருக்கமாக, சிரிலிய சவிய என்பது சமூக சேவையைக் குறிக்கும் ஒரு திட்டம் என்றாலும், அது பின்னர் பல சர்ச்சைகளுக்கும் விசாரணைகளுக்கும் உள்ளானது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பல குற்றச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டமை தெரிய வந்த சந்தர்ப்பத்திலேயே தாஜுடீன் கடத்தப்பட்ட டிபெண்டர் ரக வாகனமும் இந்த அறக்கட்டளை நிறுவனத்துக்கு சொந்தமானது என்ற தகவல் அம்பலமானது.
அந்நேரம் இதன் தலைவராக ஷிரந்தியே இருந்தார். அவருக்குத் தெரியாமல் அவரது வாகனம் மேற்படி சம்பவத்துக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று தற்போது கூறப்படுகின்றது.