ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாக்கிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், தெற்காசியாவின் மிக ஆழமான புவிசார் அரசியல் பிளவை மீண்டும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பக்திங்கா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் உள்ள பாக்கிஸ்தானிய தாலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து பாக்கிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக, தாலிபான் பாதுகாப்புப் படைகள் எல்லைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி, பாக்கிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவல் முயற்சிகளை முறியடித்ததாக அறிவித்தன.
பாக்கிஸ்தானின் இந்த நடவடிக்கை அதன் வான் எல்லையை மீறிய செயல் என்று தாலிபான் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக எச்சரித்தது.
பாக்கிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், ‘உறுதியுடன் பதிலடி’ கொடுக்கப்படும் என்று தாலிபான் பிரகடனம் செய்துள்ளது.
இந்தத் திடீர் மோதல்களில் இரு தரப்பிலும் படையினர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
இந்த சமீபத்திய தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான உறவு, எல்லை தாண்டிய தீவிரவாதம், வரலாற்றுப் பிளவுகள் மற்றும் அணு ஆயுத அண்டைய நாடான இந்தியாவின் ஈடுபாடு ஆகிய பல அடுக்கு சிக்கல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இத்தகைய மோதல்கள் ஒரு பெரிய பிராந்தியப் போராக மாறுவதற்கு முன்பாக, செல்வாக்கு மிக்க உலக நாடுகள் பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிராந்தியப் பிளவின் ஆணிவேர்
பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான தற்போதைய பதற்றத்தின் ஆணிவேர், 130 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு சர்ச்சையான எல்லைக் கோட்டில் உள்ளது.
1893 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே 2,640 கிலோமீட்டர் நீளத்திற்கு டூராண்ட் எல்லைக் கோடு வரையப்பட்டது.
இது அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு நலன்களுக்காக ஆப்கானிஸ்தானை ஒரு தாங்கல் பகுதியாக பிரிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
1947 இல் பாக்கிஸ்தான் தனி நாடாக உருவானபோது, டூராண்ட் எல்லை கோட்டை தனது அதிகாரப்பூர்வ சர்வதேச எல்லையாக அறிவித்தது.
ஆனால், காபூலை இதுவரையில் ஆண்ட எந்த ஒரு அரசாங்கமும் அதாவது முடியாட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயகமாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏன் தற்போதைய தாலிபானாக இருந்தாலும் சரி இந்த எல்லையை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. ஆகவே டூராண்ட் எல்லைக் கோடு விடயத்தில் பாக்கிஸ்தானை எதிரியாகவே ஆப்கானிஸ்தான் காண்கின்றது.
இந்த எல்லைக் கோடு வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஒரே இனத்தைச் சேர்ந்த பஷ்தூன் மக்களை செயற்கையாகப் பிரித்தது. ஆப்கானிஸ்தானின் தேசியவாதக் கொள்கை ‘பஷ்தூனிஸ்தான்’ என்ற ஒட்டுமொத்த பஷ்தூன் பகுதியையும் உரிமை கோருகிறது.
எனவே, இந்த எல்லையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் பாக்கிஸ்தானிய இராணுவ நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தானின் இறையாண்மையின் மீதான அத்துமீறலாகவே தாலிபான்கள் பார்க்கின்றனர். இந்த அடிப்படை வரலாற்றுப் பிளவே, எல்லை தாண்டிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு முயற்சிகளைத் தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
பாக்கிஸ்தானிய தாலிபானும் நெருக்கடியும்
பாக்கிஸ்தான் தனது வான்வழித் தாக்குதல்களுக்குப் பிரதான காரணமாக தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பால் தனது நாட்டிற்குள் ஏற்படும் தாக்குதல்களை சுட்டிக்காட்டுகின்றது.
ஆப்கானிஸ்தானைப் போலவே பாக்கிஸ்தானிலும் ஷரியத் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தாலிபான் ஆட்சியை நிறுவுவதே தெஹ்ரீக்-இ-தாலிபான் பாக்கிஸ்தான் அமைப்பின் பிரதான இலக்காகும்.
இதற்காக அவர்கள் பாக்கிஸ்தானிய இராணுவம், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பினருக்குப் பக்திங்கா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக பாக்கிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
பாக்கிஸ்தான் இராணுவத்தின் கூற்றுப்படி, தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்பினர் தனது நிலப்பரப்பில் இருந்து இந்தியாவின் ஆதரவுடன் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறுகிறது.
ஆனால், தாலிபான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. பாக்கிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களை அதன் உள்நாட்டு விவகாரம் என்று கூறி, பாக்கிஸ்தானே இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தெஹ்ரீக்-இ-தாலிபான்களின் தாக்குதல்களால் பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டு மக்களிடம் இருந்து கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய வான்வழித் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், அவர்கள் தங்கள் மக்களுக்குப் பதிலடி கொடுப்பதாகக் காட்டவும், அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபான்களை கட்டுப்படுத்த அழுத்தம் கொடுக்கவும் பாக்கிஸ்தான் முயற்சிக்கிறது.
இந்தியாவின் புவிசார் அரசியல் முக்கியத்துவம்
இந்த சமீபத்திய மோதல்களின் கால அவகாசம், பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாக்கிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்திய நேரம்,
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தக்கி இந்தியாவுக்கு விஜயம் செய்யத் தொடங்கிய முதல் நாள் ஆகும். இந்த இராஜதந்திரப் பயணம், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கத்தை இந்தியா அங்கீகரித்து, அவர்களுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஒரு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்பட்டது.
முத்தக்கியின் சந்திப்புகள் டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் போது காபூல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், ஆப்கானிஸ்தான் மீதான தனது செல்வாக்கை நிலைநிறுத்தவும்,
இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானுக்கு அதிகரித்து வரும் நெருக்கம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தவும் பாக்கிஸ்தான் விரும்புகிறது.
‘ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஏன் இந்தியாவுக்கு வந்தார்?’ என்ற தங்கள் அதிருப்தியை ஒரு வகையில் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த தாக்குதலை பாக்கிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இந்திய இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, பாக்கிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவுக்குக் கிடைத்த ‘பரிசு’ போன்றது.
ஏனென்றால், இந்தியாவுடன் ஏற்கனவே எல்லைப் பதற்றம் (காஷ்மீர் விவகாரம்) நிலவும் வேளையில், பாக்கிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தானுடன் முரண்பட்டு, ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் அழுத்தம் மற்றும் ஸ்திரமின்மையை எதிர்கொள்கிறது.
இது பாக்கிஸ்தானின் பாதுகாப்புத் திட்டமிடல், இராஜதந்திரம் மற்றும் பலவீனமான பொருளாதாரம் ஆகியவற்றுக்குப் பல சவால்களை ஏற்படுத்தும்.
ஆப்கானிஸ்தான் அணுசக்தி திறன் கொண்ட அண்டைய நாடுகளான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே ஒரு ‘பினாமி மோதலின்’ (Proxy Conflict) களமாக மாறும் அபாயம் குறித்து ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் ஆழமான கவலைகள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் மீதான இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் கொள்கைகள் அமைதியை நோக்கியதாக இல்லாமல், தங்கள் பினாமி சக்திகளை முன்னோக்கி நகர்த்துவதாக உள்ளது என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.
எதிர்காலப் பாதிப்புகளும் சர்வதேசக் குரலும்
பாகிஸ்தானின் தற்போதைய இராணுவ நடவடிக்கை, தற்காலிகமாக தனது நாட்டு மக்களுக்குப் பதிலடி காட்டுவதாகத் தோன்றினாலும், நீண்டகால நோக்கில் அதற்குப் பல எதிர்மறையான விளைவுகளே ஏற்பட வாய்ப்புள்ளது.
இங்கு பொதுமக்களின் வெறுப்புகள் உள்ளன. இந்த வான்வழித் தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் பொதுமக்களிடையே மட்டுமல்லாமல், தாலிபான் இராணுவப் படைகள் மத்தியிலும் பாக்கிஸ்தான் மீதான வெறுப்பையும் கோபத்தையும் அதிகரித்துள்ளது.
இது, பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு எதிராகப் போரிடும் உத்வேகத்தை ஆப்கானியர்களுக்குள் அதிகரிக்கலாம்.
பாக்கிஸ்தானின் தாக்குதல்கள், ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கும் பாக்கிஸ்தான் தாலிபானுக்கும் இடையேயான பிணைப்பை மேலும் நெருக்கமாக்கலாம்.
இது, தெஹ்ரீக்-இ-தாலிபான்களை கட்டுப்படுத்தும் பாகிஸ்தானின் இலக்கை மேலும் கடினமாக்கும். பெரிய மோதலைத் தடுக்க, சர்வதேச நிபுணர்கள், செல்வாக்கு மிக்க நாடுகள் இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்கவும், பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வரவும் பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளனர்.
சவூதி அரேபியா உட்பட பல நாடுகள், இரு தரப்பினரும் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
மொத்தத்தில், டூராண்ட் கோட்டின் வரலாற்றுப் பிளவும், தெஹ்ரீக்-இ-தாலிபான் தீவிரவாதமும் பாக்கிஸ்தான் – ஆப்கானிஸ்தான் உறவைப் பின்னிப்பிணைத்துள்ளன.
இந்தச் சிக்கலான புவிசார் அரசியல் சூழலில், இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகள், பாக்கிஸ்தானுக்குக் கூடுதல் அழுத்தத்தை வழங்கி, தெற்காசியாவின் ஸ்திரமின்மைக்குப் புதிய பரிமாணத்தை அளிக்கிறது. பாக்கிஸ்தான் இராணுவமும் தாலிபான்களும் எல்லையில் மோதிக் கொண்டிருப்பது,
பிராந்தியத்தில் அணு ஆயுதப் போருக்கான அபாயத்தை மறைமுகமாக உயர்த்துகிறது. தற்போதைய சூழ்நிலையைத் தணித்து, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதே இப்பிராந்தியத்தின் எதிர்காலத்துக்கு இன்றியமையாததாகும்.
மறுபுறம் வரலாற்று ரீதியாக, பாக்கிஸ்தான் அமெரிக்காவின் ‘நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு’ (Major Non-NATO Ally) என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தியாவுடனான நெருக்கடி மற்றும் பிராந்தியத்தில் சோவியத் யூனியன் (ரஷ்யா) செல்வாக்கு ஆகியவற்றை எதிர்கொள்ளும் காலங்களில் அமெரிக்காவின் ஆதரவு பாக்கிஸ்தானுக்குப் பிரதானமாக இருந்தது.
ஆனால், தற்போது பாக்கிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதல் மற்றும் இந்தியா உடனான அதன் உறவு குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது. பாக்கிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தாலிபானின் பதிலடி நடவடிக்கைகளுக்குப் பிறகு, அமெரிக்கா மோதல் பற்றி தெளிவாக கருத்து தெரிவித்துள்ளது:
அமெரிக்கா இரு தரப்பினரையும் அமைதி காக்குமாறு வலியுறுத்தி, கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தாலிபான்களை அமெரிக்கா வெளிப்படையாக வலியுறுத்தியது.
தெஹ்ரீக்-இ-தாலிபான் போன்ற குழுக்கள் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் ஆப்கானிஸ்தான் இனி ஒருபோதும் பாதுகாப்பான புகலிடமாக இருக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
பாக்கிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக இராணுவ ரீதியில் தலையிடவோ அல்லது அதன் தாக்குதலை வெளிப்படையாக ஆதரிக்கவோ இல்லை.
மாறாக, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி போன்ற உயர் அதிகாரிகள், ‘இந்த மோதலில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ என்று கூறி, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டை உறுதியாக நிராகரித்துள்ளனர்.
பாக்கிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதலில் இந்தியாவின் செல்வாக்கு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இந்தியாவின் செல்வாக்கு நேரடியான இராணுவத் தலையீடாக இல்லாமல், இராஜதந்திர ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
தாலிபான் ஆட்சியை நேரடியாக அங்கீகரிக்காவிட்டாலும், ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை (50,000 மெட்ரிக் டொன் கோதுமை, மருந்துகள், தடுப்பூசிகள்) இந்தியா வழங்கி வருகிறது.
பாக்கிஸ்தான் தனது எல்லையை மூட முற்பட்டபோதும், இந்தியா வேறு வழிகளில் உதவிகளை அனுப்பியது. இந்த நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் மக்களிடையே இந்தியாவுக்கு ஒரு நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது.
தாலிபான், பாக்கிஸ்தானுக்கு எதிராகப் போராட இந்தியாவை நாடவில்லை என்றாலும், இந்தியாவின் இராஜதந்திர நகர்வு பாக்கிஸ்தானின் செல்வாக்கைக் குறைக்கும் ஒரு சக்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா, தனது ஆதரவுக் கொள்கைகள் மூலம், தாலிபான் அரசாங்கத்தை பிராந்திய வீரர்களுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும், குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தாலிபானுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது.
(லியோ நிரோஷ தர்ஷன்)