உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நீதி இன்று வரை உயிர்த்து எழாமலேயே காலம் போய்க் கொண்டிருக்கின்றுது. இந்த தாக்குதலின் பின்னால், இருக்கின்ற மறைகரங்கள், பிரதான சூத்திரதாரி யார் என்பது இன்னும் அறுதியும் உறுதியுமாக வெளிப்படுத்தப்படாத சூழலில் அந்தந்த அரசாங்கங்களின் பாணியில் விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிசாம் காரியப்பர் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து மற்றும் அதனையொட்டிய வாதப் பிரதிவாதங்கள் புதியதொரு சர்ச்சைiயை ஏற்படுத்தியுள்ளது.
உயர் பதவிகள் பற்றிய குழுவின் கூட்டம் பிரதமர் ஹரிணி தலைமையில் இடம்பெற்ற போது அதில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு எம்.பி.க்கள் பங்குபற்றியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக தான் கேள்வியொன்றைக் கேட்டதாக நிசாம் காரியப்பர் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த ரவி செனவிரத்ன, ‘இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து விட்டடோம்’ என்று கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் பிரதான சூத்திரதாரி என்ற விடயத்தோடு இணைந்ததாக இந்தியாவின் பெயரும் சில இடங்களில் உச்சரிக்கப்படுவதாக தெரிகின்றது. சமூக வலைதளங்களில் வெளியான இவ்விடயம் அரசியலரங்கில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் பல்வேறு கோணங்களிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது,
இந்நிலையில், பொலிஸ் திணைக்களம் மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்திய இருந்ததாக ரவி செனவிரத்ன எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என மேற்படி அறிக்கையில் அழுத்தமாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நிசாம் எம்.பி.யின் பிந்திய நிலைப்பாட்டை அறிவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி பயனளிக்கவில்லை.
இக்குழுவில் உண்மையில் இவ்வாறான கருத்து ஒன்றை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தாரா என்பது நமக்குத் தெரியாது. குழுவில் இருந்த பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அது தெரியும்.
அதேபோல், அவ்வாறு தெரிவித்திருந்தாலும் இவ்வாறான விடயங்களை விதிமுறைகளின் படி அல்லது தார்மீகத்தின் படி வெளியிட முடியுமா என்பது நம்மை விட சட்டம் அறிந்த காரியப்பருக்கும் அரசாங்கத்திற்கும் தெரியும்.
எனவே இவ்விடயத்தை மக்கள் ஆய்வு செய்து குழம்பத் தேவையில்லை. எது எவ்வாறிருப்பினும், இந்த அரசாங்கமாவது விரைவாக பிரதான சூத்திரதாரிகளைக் கண்டு பிடித்து, தண்டனை வழங்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தில் இந்த தகவல் ஒருவித சலசலப்பையும் கவன ஈர்ப்பையும் ஏற்டுத்தியுள்ளது எனலாம்.
இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதலாக 2019 ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் உள்ளன. இந்த தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் அதற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதைவிட அதிகமானோர் மனநிலை ரீதியாகவும் உறவுகளை இழந்தும் பாதிக்கப்பட்டனர்.
கத்தோலிக்க இறை வழிபாட்டுத் தலங்களையும் நட்சத்திர ஹோட்டலையும் இலக்கு வைத்து சஹ்ரான் கும்பலால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் உயிர்களை இழந்தது கத்தோலிக்க மக்கள் என்றாலும், சட்டத்தினாலும், இனவாதத்தினாலும் கணிசமான இழப்புக்களைச் சந்தித்தது முஸ்லிம்கள்தான் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
கத்தோலிக்கர்களையும் வெளிநாட்டவர்களையும் படுகொலை செய்து இலங்கையில் அமைதி இன்மையை ஏற்படுத்தியதுடன், அதற்கு காரணம் முஸ்லிம்கள்தான் என்ற கற்பிதம் சொல்லப்பட்டு முஸ்லிம்கக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஒரு முரண்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்ததை நாம் இன்னும் மறந்து விடவில்லை.
ஆனால், சில காலத்திற்குள்ளேயே இந்த தாக்குதலை முஸ்லிம் சமூகம் நடத்தவில்லை என்பதும், முஸ்லிம்களுக்குள் இருந்த தீவிர போக்குள்ள, பயங்கரவாத குழுவொன்றைப் பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்திற்காக அல்லது அதுபோன்ற பலமான ஒரு காரணத்திற்காக உள்நாட்டு, சர்வதேச சக்திகள் இந்த சதியை தீட்டியுள்ளன என்ற விடயம் தேநீர்க்கடைகளில் கூட பேசப்படுகின்ற தகவலாக மாறிவிட்டிருக்கின்றது.
இந்த தாக்குதல் நடந்த போது ஆட்சியில் இருந்த மைத்திரி – ரணில், இதனைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டபாய, அதன் பின்னர் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க என எந்த ஆட்சியாளரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய உண்மையை நூறு வீதம் வெளிக் கொணர்ந்து, பிரதான சூத்திரதாரிகளை தண்டிக்கவில்லை.
உயிரிழப்புக்களைச் சந்தித்த கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி, இத்தாக்குதலின் பின்னர் கைதுகள், கெடுபிடிகள் மற்றும் இனவாத நெருக்கடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கும் இன்னும் நீதி நிலைநாட்ப்படவில்லை.
இப்படியான ஒரு சூழலிலேயே, ‘குற்றவாளிகளை குறுகிய காலத்திற்குள்ளேயே கண்டுபிடிப்போம்’ என்ற வாக்குறுதியோடு என்.பி.பி. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரான விசாரணைகளில் பல திருப்பங்கள் இயல்பாகவே ஏற்பட்டன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இப்படியான ஒரு சூழ்நிலையிலேயே இப்போது நிசாம் காரியப்பர் எம்.பி.யின் கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற விவகாரங்களில் இப்படியான சர்ச்சைகளும், புதுப்புது தகவல்களும், அதனை மையப்படுத்திய விமர்சனங்களும் வருவது நமக்கு புதிதல்ல.
முன்னதாக, தாக்குதலுக்கு முன்னர் அரச உயர் மட்டத்தினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை சரியாக கணக்கெடுக்காமல் செயற்பட்ட விதம், சாரா ஜெஸ்மின் தப்பிச் சென்ற விவகாரம், அசாத் மௌலானாவின் கதைகள், பிள்ளையானைச் சுற்றி வெளிவந்த தகவல்கள் என கடந்த ஆறு வருடங்களில் எத்தனையோ சர்ச்சைகளை இலங்கை மக்களாகிய நாம் கடந்து வந்திருக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளை முன்னைய ஆட்சியாளர்களும் முன்கொண்டு செல்வதாகவே காண்பித்தனர். ஆனால், ஒரு எல்லைக்கு மேல் அது நகரவில்லை.
ஆனால், இப்போது ஆட்சியில் இருப்பது புத்தம் புதிய ஆட்சியாளர்கள். இங்கே யாரையும் காப்பாற்ற வேண்டிய தேவையோ, யாருடைய கட்டளைக்கும் அடிபணிய வேண்டிய நிர்ப்பந்தமோ என்.பி.பி. அரசாங்கத்திற்கு கிடையாது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்.பி.பி. ஆட்சியிலேயே அதிகமுள்ளது என்று மக்கள் திடமாக நம்புகின்றார்கள்.
எனவே தேவையற்ற விவகாரங்கள், தகவல்கள், கதைகள், சர்ச்சைகளால் நீதி விசாரணைகள் தாமதப்படுத்தப்படக் கூடாது. தேவையற்ற விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இன்னும் காலத்தை வீணடிக்காமல் அரசாங்கம் முன்னோக்கி நகர வேண்டும்.
காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று கூறுவார்கள். எனவே, முன்னைய அரசாங்கங்களைப் போல இந்த அரசாங்கமும் காரணங்களையும் விளக்கங்களையும் சொல்லிக் கொண்டே இருக்காமல், பிரதான சூத்திரதாரிகள் உள்ளடங்கலாக அனைத்து தரப்பினரையும் கண்டறிந்து கூடிய விரைவில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-ஏ.எல்.நிப்றாஸ்-

