மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளரான உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பரிசோதகர் கிஹான் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழுவினர், மூன்று நாட்கள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு பேர் நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கு முன்பதாக இந்தோனேசியாவில் வைத்து பாதாள உலகக்குழுவினர் ஐவரின் கைது நடவடிக்கையையும் மேற்படி குழுவினரே முன்னெடுத்திருந்தனர். இலங்கை பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று பாதாள உலக கோஷ்டியினரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவது இதுவே முதல் தடவையாக உள்ளது.

இது பொலிஸ் துறைக்கு கெளரவத்தையும் அவர்களின் மீதான மக்களின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்த ஒரு சம்பவமாகப் பார்க்கப்பட்டது.

ஏனென்றால் பரபரப்பான காலை வேளையில் தலைநகரில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை மக்கள் அநுர ஆட்சியில் எதிர்ப்பார்க்கவில்லை.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் துப்பாக்கிதாரியான மஹரகமவைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவருக்கு சட்டப் புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து கொடுத்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் தலைமறைவாகியிருந்தார். இவர் வத்தளை ஜாஎல பகுதியைச் சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்ட சமிந்து தில்ஷான் தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்தியிருந்தார். அஸ்மான் செரிஃப்டீன் என்ற போலி அடையாள அட்டையொன்றை அவர் தயாரித்து வைத்திருந்தமையை பின்னர் பொலிஸார் விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்டனர். இந்த செயற்பாடானது இனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்த அவர் செய்த சதியென பொலிஸார் அறிந்து கொண்டனர்.

ஆனால் அவருக்கு உதவிய இஷாரா செவ்வந்தியின் தலைமறைவு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பெரும் சவாலாக மாறியது.

ஊடகச் சந்திப்புகளில் எதிர்கட்சியினர்,“செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாத பலவீனமான அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி உள்ளதாக கதைகளை பரப்பினர். கேலி செய்தனர். ஆனால் எட்டு மாதங்களில் இலங்கையில் தலை மறைவாக இருந்து பின்னர் நேபாளத்துக்கு தப்பிச் சென்ற செவ்வந்தியை வெற்றிகரமாக கைது செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர் பொலிஸார்.

இதற்குக் காரணம் பாதாள உலகத்தினருக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கி நாட்டில் குற்றச்சம்பவங்கள் பெருக காரணமான ஊழல் மோசடி வாய்ந்த பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு தகுதியும் திறமையும் கொண்ட பொலிஸார் நியமிக்கப்பட்டமை தான்.

செவ்வந்தி தலைமறைவாகியபோது, பாதாள கும்பல்களின் அட்டகாசம் தலைவிரித்தாடிய போதிலும், படிப்படியாக அதுக்கு முடிவுகட்டப்பட்டது.

குற்றக்கும்பலுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரிகள், இராணுவ சிப்பாய்கள் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வரை கைது செய்யப்பட்டனர். உடனடியாக பொலிஸ் உயர்அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதுபோல, திறமையான அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

மாத்திரமின்றி அமைச்சுக்களிலும் பாதுகாப்புத் துறை உயர் பொறுப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன, புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 556 பேரை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நாட்டில் ஏதேனும் பகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் துரிதரகமாக செயற்படுவதற்கு சகல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரை ஒன்றிணைந்து வட்சப் செயலி ஊடாக விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் சோதனை சாவடிகள் போடப்பட்டு வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டது. இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் கெஹெல் பத்தர பத்மே, பெக்கோ சமன் உள்ளிட்ட போதைப்பொருள் கள்ளவியாபாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ச்சியான விசாரணைகளின் அடிப்படையில், கெஹெல் பத்தர பத்மேவுக்கு சொந்தமான நுவரெலியாவில் உள்ள ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை பற்றிய விடயமும் வெளிகொணரப்பட்டது.

அத்துடன், மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கண்டெனர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பத் மனம்பேரி

இதனை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட மொட்டுக் கட்சியின் உறுப்பினர் சம்பத் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் பியல் மனம்பேரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சம்பத் மனம்பேரி கெஹெல் பத்தர பத்மே, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோருடன் வட்சப் இல் தொடர்புகளை பேணிவந்த விடயம் விசாரணைகளில் வெளிவந்தது. சம்பத் மனம்பேரியின் மைத்துனர் பெக்கோ சமனின் எல்லா நிதி விவகாரங்களையும் நிர்வகித்துள்ளமையும் விசாரணைகளில் வெளிவந்தது.

‘கெஹெல்பத்தர பத்மே’ யிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த இடம் உறுதி செய்யப்பட்ட பின்னரே, ரோஹான் ஒலுகலவின் தலைமையில் சுற்றிவளைப்புத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைக் பொலிஸ் அதிகாரிகள் காத்மாண்டு நகருக்குச் சென்று நேபாள காவல்துறையைச் சந்தித்த பின்னர், இஷாரா செவ்வந்தி மறைந்திருந்த வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டிலேயே தங்கி விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கையைத் தொடங்கிய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஒலுகல குழுவினர், முதலில் இஷாரா செவ்வந்தியின் உதவியாளரான ‘ஜே.கே. பாய்’ என்று அழைக்கப்படும் கென்னடி பெஸ்தியன் பிள்ளை என்பவரைக் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாரா செவ்வந்தி இருந்த இடம் உறுதியான பின், நேபாள காவல்துறையின் உதவியுடன் அந்த வீட்டைச் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர்.

தம்மைக் கைது செய்ய வந்த ரொஹான் ஒலுகலவைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போன இஷாரா, “ஒலுகல சேர்!” என்று கூற, அதற்கு அவர் “ஆ… பிள்ளையே, எப்படி இருக்கிறாய்?” என்று பதிலளித்துள்ளார்.

என்றாவது ஒரு நாள் ஒலுகலவினால் தாம் கைது செய்யப்படுவோம் என்று நினைத்திருந்ததாகவும், ஏழு மாதங்களாக நேபாளத்தில் சிக்கித் தவிப்பதை விட, இலங்கைக்குச் செல்வது சுகம் என்றும், ஆனால் காவல்துறையில் சிக்குவோம் என்ற பயத்தினால் அங்கேயே தங்கியிருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

‘கெஹெல்பத்தர பத்மே’

இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘கெஹெல்பத்தர பத்மே‘ குழுவுடன் தொடர்புடைய மேலும் இரண்டு குற்றக்குழு உறுப்பினர்களும் பெண் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகின. அதன்படி, காத்மண்டு நகரில் வேறொரு இடத்தில் மறைந்திருந்த அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அங்கு வைத்து ‘பத்மே’ குழுவின் முக்கிய உறுப்பினரான ‘கம்பஹா பபா’ என்பவர், தம்மை விடுவிப்பதற்காக ரொஹான் ஒலுகலவுக்கு 50 இலட்சம் ரூபா கையூட்டல் கொடுக்க முயன்ற போதும், அந்த யோசனையை நிராகரித்த ஒலுகல, மூவரையும் கைது செய்துள்ளார்.

சாவகச்சேரி பெண்

கைது செய்யப்பட்ட மற்றைய பெண், சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என்றும், அவர் இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் தகவல்களையும் படங்களையும் பயன்படுத்தி, இஷாரா செவ்வந்திக்கு போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கவும், அதன் மூலம் அவரை ஐரோப்பாவிற்குத் தப்ப வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதால் அந்தத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

சி.சி.என்

Share.
Leave A Reply