இலங்கை பிளவுபடுவதை தடுப்பதற்கும் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமே, இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும், இந்திய இராணுவம் இலங்கையில் நிறுத்தப்பட்டதாகவும் – முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
புதுடெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை “இந்தியாவின் எதிர்காலத்திற்காக, ராஜீவ் காந்தியின் பாரம்பரியத்தை மறு மதிப்பீடு செய்தல்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தக் கருத்து முக்கியமான ஒரு வாக்குமூலம்.

மணிசங்கர் ஐயர்
மணிசங்கர் ஐயர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். துறைசார் இராஜதந்திரி.
மயிலாடுதுறை தொகுதியில் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியவர். ராஜ்யசபாவிலும் உறுப்பினராக இருந்தவர்.
இவற்றுக்கு அப்பால், ராஜீவ் காந்தியின் மிக நெருக்கமான நண்பர். அவரது குடும்ப நண்பராக இருந்தவர்.
ராஜீவ் காந்தி அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, அவருடன் நெருங்கிப் பழகியவர் என்ற வகையிலும், அவர் பிரதமராகவும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் அவருடன் நெருக்கமாக இருந்தவர் என்ற வகையிலும் மணிசங்கர் ஐயரின் இந்தக் கருத்து முக்கியமானது.
கிட்டத்தட்ட ராஜீவ் காந்தியின் வாயால் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவது போன்றது.
1987இல் இந்திய – – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ஏன் என்ற விடயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட போது, இலங்கையில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே, இந்தியா தலையீடு செய்து இந்திய – -இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இந்தியத்தரப்பு கூறியிருந்தது.
அதேவேளை, அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், அதன் உள்ளடக்கங்கள் குறித்து தமிழர் தரப்புக்கு தெரிவிக்கப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதுமலையில் இருந்து ஹெலிகொப்டரில் ஏற்றிச் செல்லப்பட்டு, புதுடெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முதல் நாள், அவரிடம் ஒப்பந்த நகல் கொடுக்கப்பட்டது.
அதில் உள்ள முரண்பாடுகள் மற்றும் ஏற்க முடியாத விடயங்களை பிரபாகரன் சுட்டிக் காட்ட முயன்ற போது, சந்தேகங்களை எழுப்ப முயன்ற போது, அவருக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
அவற்றை கேட்பதற்கும் இந்திய தரப்பு தயாராக இருக்கவில்லை.
இது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்று, இதில் திருத்தங்களை முன்வைக்க முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது.
அவர் எதிர்ப்புத் தெரிவித்து, முரண்பட்ட போது தான், விடுதலைப் புலிகளின் தலைவர் அங்கு ‘அழைத்து வரப்படவில்லை’ என்பதும், அவர் ‘அடைத்து வைக்கப்பட்டிருந்தார்’ என்பதும் தெரியவந்தது.
இந்த விடயத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன.
அசோக் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபாகரன், அச்சுறுத்தப்பட்டார், ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அதனை ஏற்றுக் கொள்ளாமல்போனால், திரும்பிச் செல்ல முடியாது என்ற அச்சுறுத்தலும் அவருக்கு கொடுக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில், அவரை மீண்டும் கொண்டு வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தான் புதுடெல்லியில் இருந்து திரும்பினால் தான் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என பிரபாகரன் உணர்ந்தார்.
அதனால் தான் அவர் அந்த ஒப்பந்தத்திற்கு தவிர்க்க முடியாதபடி இணங்குவதாக கூறி மீளவும் நாடு திரும்பினார்.
அவர் சுதுமலையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு நன்மை எதுவும் இல்லை என்றும், இந்தியா கூறுவதால் அதன் பொறுப்பிலேயே தமிழர்களின் பாதுகாப்பை ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சில மாதங்களிலேயே, விடுதலைப் புலிகள் மீது இந்திய இராணுவம் ஆரம்பித்த போரில் வெற்றி பெற முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவமே ராஜீவ் காந்தியை மரணம் வரை அவரை துரத்திச் சென்றதாகவும், – பிரபாகரன் புதுடெல்லியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கிலேயே ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், ராஜீவ் காந்தி படுகொலைக்கு பழி தீர்க்கும் வகையிலேயே இந்தியப் தரப்பு விடுதலை புலிகளை அழிப்பதில் தீவிரமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அந்தப் பழியை தீர்த்துக் கொண்டது.
இந்திய- — இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது, அது இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இலங்கை அரசாங்கமும் கூறமுனைந்தது. அப்போது ஜே.ஆர். அரசாங்கம் அந்த உண்மையை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
ஜே.வி.பி.யின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி தீவிரமடைந்து கொண்டிருந்த அந்தக் கட்டத்தில், ஒரு பக்கம் விடுதலைப் புலிகளையும் இன்னொரு பக்கம் ஜே.வி.பி.sயையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்படுவதை உணர்ந்த, ஜே.ஆர், இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொண்டார்.
அதன் மூலம், விடுதலைப் புலிகளை கையாளும் பொறுப்பை இந்தியாவிடம் கொடுத்தார். இருவரையும் மோத விடுவதற்கான சரியான சந்தர்ப்பமாக அவர் அதனைக் கருதினார்.
முன்னர், இந்தியாவே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியது.
விடுதலைப் புலிகளை ஊட்டி வளர்த்த இந்தியாவே அவர்களை அழிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க, இன்னொரு பக்கம் ஜே.வி.பியை அழிக்கும் வேலையை ஜே.ஆர். ஆரம்பித்தார்.
இந்திய – – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது, யாழ்ப்பாணத்தின் மீது பாரிய படையெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு இலங்கை இராணுவம் தயாராகி வந்தது.
ஏற்கெனவே வடமராட்சியை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.
அவர்களின் அடுத்த இலக்காக இருந்தது, யாழ்ப்பாணம்.
அதனை கைப்பற்றுவதற்குள் தங்களின் திட்டத்தை செயற்படுத்த முடியாமல் இந்தியா தடுத்து விட்டது என இலங்கை இராணுவ அதிகாரிகள் பலர் வெறுப்படைந்திருந்தார்கள்.
லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன போன்ற, அப்போதைய நட்சத்திர நிலை இராணுவ தளபதிகள் அதையிட்டு கடுமையாக கோபமடைந்தனர் என்று, ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக, இலங்கை பிளவுபடாமல் தடுப்பதற்காக, தமிழர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவே ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டார் என்றால், ஏன் இலங்கை இராணுவத்தினர் அப்பொழுது கோபமடைந்தார்கள்?
அந்த உண்மையை ஜே.ஆர் ஜயவர்தன அரசாங்கம் ஏன் தனது இராணுவ அதிகாரிகளுக்கு கூறத் தவறியது என்று தெரியவில்லை.
ஆனால், இப்பொழுது மணிசங்கர் ஐயரின் வாக்குமூலத்தின் படி, ராஜீவ் காந்தி தமிழ் மக்களின் மீது கொண்ட பற்றினாலோ -பாசத்தினாலோ – இந்திய — இலங்கை உடன்பாட்டை செய்து கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற அக்கறையினால், அவர் இந்த விடயத்தில் தலையீடு செய்யவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்திரா காந்தியின் காலத்திலேயே விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளுக்கு, ஆயுதப் பயிற்சிகள், ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பின்னர், அவ்வாறான நிலை இருக்கவில்லை.
இந்திரா காந்தியின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்தது என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
ஆனால், ராஜீவ் காந்தியின் நிலைப்பாடு தமிழர்கள் மீது அக்கறை கொண்டதாக இருந்திருக்கவில்லை.
அது முற்றுமுழுதாக இலங்கையை சிதறாமல் பார்த்துக் கொள்வதிலும், அதன் மூலம் இந்தியாவின் பூகோள ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதிலுமே, இருந்திருக்கிறது.
இலங்கை பிளவுபட்டால்- இந்தியாவும் பிளவுபடும், தமிழ்நாடு தனித்து போய்விடும் என்ற அச்சம் அவரிடத்தில் இருந்திருக்கிறது.
அதனால் தான், அவர் இலங்கையில் தலையீடு செய்து இரண்டு நாடுகளினதும் இறைமையை பாதுகாக்க முற்பட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு இரண்டு நாடுகளிலுமே முழு ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை.
தனது நாட்டு இராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் அவரது சிந்தனையை புரிந்து கொள்ளவில்லை என்றும் அவரை ஏமாற்றி விட்டன என்றும் மணிசங்கர் ஐயர் கூறியிருக்கிறார்.
இந்திய இராணுவம் தவறான மதிப்பீடுகளுடன் விடுதலைப் புலிகளை எதிர்கொண்டது.
இந்திய புலனாய்வுத்துறையும் விடுதலைப் புலிகள் பற்றிய தவறான மதிப்பீடுகளையே செய்திருந்தது.
அது, இந்தியாவின் பின்னடைவுக்கு முக்கியமான காரணம்.
ஆனால், மணிசங்கர் ஐயரோ, ராஜீவ் காந்திக்கு இந்திய இராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் துரோகம் செய்து விட்டதாக, ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
எவ்வாறாயினும், மணிசங்கர் ஐயர் கடைசியாக குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் முக்கியமானது.
மோசமான தலைமைத்துவமும், தமிழ் தலைவர்கள் பற்றிய தவறான மதிப்பீடும் ராஜீவ் காந்தியின் கொள்கையின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும், அது அவரை அரசியல் ரீதியாக பெரும் விலை கொடுக்கும் நிலைக்குத் தள்ளியது என்றும் மணிசங்கர் ஐயர் கூறியிருக்கிறார் .
தமிழ் தலைவர்கள் என்று அவர் குறிப்பிட்டது, முக்கியமாக பிரபாகரன் பற்றிய மதிப்பீடேயாகும்.
தமிழ் தலைவர்களை விலை போகக் கூடியவர்களாக ராஜீவ்காந்தி கருதி இருந்தார்.
அந்தக் கருத்து தவறானது என்பதை அவர் பின்நாளில் புரிந்து கொண்டிருப்பார்.
அந்த தவறான மதிப்பீடு தான், ராஜீவ் காந்தியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் சீர்குலைத்தது. அவரது அரசியல் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது.
ஆனால், ஒன்று ராஜீவ் காந்தி திட்டமிட்டது போல, இலங்கையின் பிளவை தடுப்பதில் எப்படியோ ஒரு வகையில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
-ஹரிகரன்-
