காணிகள் விடுவிப்பும் ஜெனிவா தீர்மானமும் நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் அரச படைகள் அவற்றை விடுவிக்க மறுக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அந்த நிலங்கள் அரச படைகளால் வணிக நோக்கத்திற்காக பொருளாதார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானத்தின், 13 ஆவது விடயமாக, “இராணுவம் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதன் முக்கியத்துவத்தையும், தொல்பொருள், மத மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிலப்பிரச்சினைகளை வெளிப்படையான, ஆலோசனை, பாரபட்சமற்ற மற்றும் பாகுபாடற்ற முறையில் தீர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது“ என கூறப்பட்டிருக்கிறது.

இது இராணுவத்தினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பை வலியுறுத்துகின்ற விடயம்.

இராணுவத்தினர் வசம் பெருமளவிலான தனியார் மற்றும் அரச காணிகள் உள்ளன.

இவை அனைத்தும் இராணுவ நோக்கங்களுக்காக மட்டும், கைப்பற்றப்பட்டவை அல்ல.

இராணுவ நோக்கங்களுக்கு அப்பால் இவை கைப்பற்றப்பட்டு, தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக 3 தசாப்தங்களுக்கு மேலாக வைக்கப்பட்டுள்ளன.

உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதன் மூலம் மக்கள் தமது காணிகளை பார்வையிட முடியாமல் தடுக்கப்பட்டனர், அவற்றை பயன்படுத்த முடியாமல் விலக்கி வைக்கப்பட்டனர்.

இதற்கான அடிப்படை காரணங்கள் பல இருந்தன.

ஒன்று, இராணுவ தளங்கள் அல்லது கேந்திர நிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிலங்களை கைப்பற்றி வைத்திருத்தல்.

ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான இராணுவ கேந்திர நோக்கத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலங்களை விட , அதற்கு அப்பாற்பட்ட நோக்கங்களுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களே அதிகம்.

இரண்டு, தமிழ் மக்களின் பாரம்பரிய தாயக கோட்பாட்டை சிதைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

மூன்று, தமிழ் மக்களின் பொருளாதார செழிப்பையும் வாழ்வியலையும், சீர்குலைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.

நான்கு, அவர்களின் இருப்பை நிச்சயமற்ற தாக்கி, நாட்டை விட்டுத் துரத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.

இப்படி பல காரணங்கள் இருந்தன.

மனிதர்களின் இருப்பை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து அகற்றுவதன் மூலம், ஒன்றுமில்லாதவர்கள் ஆக்க முடியும்.

கடந்த காலங்களில், அவ்வாறான நிலைக்கு தள்ளப்படாதவர்கள் யாரும் இல்லை என்ற அளவிற்கு வடக்கிலும் கிழக்கின் பல பகுதிகளிலும் நிலைமை காணப்பட்டது.

அண்மையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட காஸா மீதான போரில் கூட இதுபோன்ற அணுகுமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

பலஸ்தீனர்களின் நிலத்தை கைப்பற்றுவதற்காக இஸ்ரேல் திட்டமிட்டது.

பலஸ்தீனர்களின் செழிப்பையும் பொருளாதாரத்தையும் அழிப்பதற்காக இஸ்ரேல் நடவடிக்கை எடுத்தது.

அவர்களின் பாரம்பரிய தாயகத்தை கோட்பாட்டை சிதைக்கும் வகையிலும் அவர்களை அங்கிருந்து விரட்டும் வகையிலும் இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்தது.

நிலங்களை கைப்பற்றுவது, நிலங்களை விட்டு அகற்றுவது, நிலங்கள் அற்றவர்களாக மாற்றுவது- இதன் ஊடாக இனப்படுகொலை அரசுகள் அல்லது படைகள், தமக்கு எதிரான மக்கள் கூட்டத்தை ஒன்றுமில்லாதவர்கள் ஆக்குவதில் ஈடுபடுவது வழமை.

இந்த சூழலில் தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் காணிகள் விடுவிப்பு முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதிலும் இராணுவம் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் பொருளாதார நோக்கத்தில் பயன்படுத்தப்படும் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது முக்கியமானது. ஏனென்றால் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள நிலங்கள் தனியே பாதுகாப்பு நோக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை.

ஒரு காலகட்டத்தில் பாதுகாப்பு நோக்கம் இருந்தது.

அத்துடன் கேந்திர முக்கியத்துவம் கருதியும் சில இடங்கள் கைப்பற்றப்பட்டு தக்க வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், இப்பொழுது பாதுகாப்பு நோக்கம் அல்லது அதற்கான பரிமாணம் குறைந்திருக்கிறது.

ஏனென்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைந்துள்ளது அல்லது இல்லாமல் போய் உள்ளது.

இவ்வாறான நிலையில் பாதுகாப்பு தரப்பு நிலங்களை கைப்பற்றி வைத்திருத்தல் அவசியமற்ற ஒன்று.

கேந்திர முக்கியத்துவம் என்பது ஒரு இராணுவத்தின் முக்கியமான நிலைகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், அதுவும் கூட எந்த சந்தர்ப்பத்தில் என்ற கேள்வி இருக்கிறது.

அதாவது போர் ஒன்று இல்லாத சூழலில் கேந்திர முக்கியத்துவம் பாதுகாப்பு என்பன அவசியமற்றது.

எதிரி இல்லாத சூழலில் யாருடன் போரிடுவதற்கு கேந்திர நிலைகள் தேவைப்படுகிறது?

ஆனால், நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் அரச படைகள் அவற்றை விடுவிக்க மறுக்கின்றன.

அதற்கு முக்கிய காரணம் அந்த நிலங்கள் அரச படைகளால் வணிக நோக்கத்திற்காக பொருளாதார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

வலிகாமம் வடக்கில் பலாலி படைத்தளத்தை சுற்றியுள்ள பெருமளவு நிலங்கள் வளம்மிக்கவை. அந்த நிலங்கள் மாத்திரமன்றி, அவ்வாறு வடக்கு கிழக்கில் பல இடங்களில் இவ்வாறான பொருளாதாரத் தேட்டத்திற்காக தனியார் மற்றும் அரச நிலங்கள் அரசபடைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காணிகள் விடுவிப்பு இடம்பெறுவதாக அரசாங்கம் கூறினாலும், பொருளாதார நலன்களுக்காக அரச படைகளால் பயன்படுத்தப்படும் நிலங்களின் அளவு குறையவில்லை.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் – இலங்கை இராணுவம் மாத்திரம் 263,640,841.11 ரூபாவை 18 விவசாயப் பண்ணைகள் மூலம் இலாபமாக பெற்றிருக்கிறது.

வடக்கில், வவுனியா மெனிக் பாமில் 14,868,233.70 ரூபாவும் வெள்ளாங்குளத்தில்7,737,736.01 ரூபாவும், ஆண்டியாபுளியங்குளத்தில்12,141,188.36 ரூபாவும் குரும்பசிட்டியில் (பலாலி) 4,102,638.14 ரூபாவும் இரணைமடுவில் 2,170,986.87 ரூபாவும், புதுக்குடியிருப்பில் 14,868,888.96 ரூபாவும், விவசாயப் பண்ணைகளில் இருந்து இலாபமாகப் பெறப்பட்டிருக்கிறது.

வடக்கில் உள்ள இந்த பண்ணைகளின் மூலம் இராணுவத்திற்கு கிடைத்துள்ள மொத்த இலாபம், 55,889,672.04 ரூபா ( சுமார் 55.8 மில்லியன்).

இந்த நிலங்களில் கணிசமானவை தனியாருக்குச் சொந்தமானவை.

அவர்களின் நிலம் பறிக்கப்பட்டு -அவர்கள் இந்த நிலத்தில் பயிரிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு -அந்த நிலத்தின் மூலம் ஆதாயங்களை பெற முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசாங்க படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலங்களின் மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தான் பொருளாதார நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற நிலங்களை விடுவிக்க வேண்டும் என ஜெனிவா தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.

பொது மக்களின் காணிகளை அபகரித்து அவற்றை பொருளாதார நோக்கத்திற்காக இராணுவம் பயன்படுத்திக் கொள்வது மோசமான செயலாகும்.

சுபத்ரா

Share.
Leave A Reply