இலங்கைத் தமிழர்கள், அவங்களோட மருமகளான என் மேல பாசத்தைக் கொட்டறாங்க!
பிரியங்கா… தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களின் பிரியமான தொகுப்பாளினி. எப்போதும் முகமலர்ச்சியோடு சிரிப்பூட்டி சிலிர்ப்பூட்டும் ஜாலி என்டர்டெய்னர். விமர்சனங்கள், வதந்திகள் என வெள்ளம்போல் சூழ்ந்தாலும், எதிர்த்துப் போராடி, 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் இதயங்களில் நிலைத்து நிற்பவரிடம் வாழ்த்துகளுடன் பேசினோம்.
‘‘மக்கள் ரசிக்கிற, கொண்டாடுற, கலகலப்பான தொகுப்பாளரா 15 வருடங்கள் நிறைவு செஞ்சிருக்கீங்க. திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு?’
’‘‘15 வருடங்கள் இந்தத் துறையில சாதிக்கணும்னு இஷ்டப்பட்டுத்தான் கஷ்டப்பட்டேன். அந்த உழைப்போட வெற்றிதான் உங்ககிட்ட பேச வெச்சிருக்கு.
இதுக்கே, நான் ஸ்கூல் படிக்கும்போது செகண்ட் லாங்குவேஜா சமஸ்கிருதமும் ஹையர் ஸ்டடிஸ்ல இந்தியும் படிச்சேன்.
இந்தத் துறைக்கு வர்றதால தமிழை நல்லா தெரிஞ்சுக்கணும்ங்குறதுக்காக ஆர்வமா கத்துக்கிட்டேன்.
‘பிரியங்கா நல்லா தமிழ்ல தொகுத்து வழங்குறாங்க’ன்னு யாருமே ஒரு குறையும் சொல்லாத அளவுக்கு தொகுத்து வழங்குறதுல எனக்கு ரொம்பவே பெருமை!
சிவகார்த்திகேயன் அண்ணாதான் ஆங்கரிங்ல எனக்கு இன்ஸ்பிரேஷன். ‘ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இல்லாம இஷ்டத்துக்குப் பேசுறோமே… நம்பளை ஏத்துக்குவாங்களா’ன்னு தோணும்போது, என்னோட மேல் வெர்ஷன் மாதிரி சிவா அண்ணா செம ஜாலியா, கலகலப்பா ஆங்கரிங் பண்ணிக்கிட்டிருந்தார்.
நமக்குப் பிடிச்ச மாதிரி, நமக்கு வர்ற மாதிரி, கேஷுவலா ஆங்கரிங் பண்ணினா மக்கள் ஏத்துக்குவாங்கங்குற நம்பிக்கையே அவரைப் பார்த்துதான் வந்தது.
நான் விஜய் டி.வி-யில சேரும்போது அவர் ஆங்கரிங்ல உச்சத்துல இருந்தார். அப்போ எப்படிப் பழகினாரோ, சினிமாவுல உச்சத்துக்கு வந்தபிறகும் அதே அன்பான அண்ணனாதான் இப்போதும் பழகுறார்.
ரொம்ப சப்போர்ட்டிவ்; என்னோட வெல்விஷர். ஷூட்டிங் பிஸியால என்னோட மேரேஜுக்கு அவரால வரமுடியாமப் போனாலும் ரெண்டு பேரும் வீட்டுக்கு கண்டிப்பா சாப்பிட வரணும்னு அண்ணனா பாசத்தோடு அழைச்சார்.
எப்பவுமே ‘எப்படிடா இருக்க? நல்லா இருக்கியாடா?’ன்னு அதே பாசத்தோட கேட்பார். இவ்ளோ பெரிய உச்சத்துல இருக்கார்னா, அவரோட இந்தப் பண்புதான் காரணம்.
நான் சூப்பர் சிங்கரைப் பார்த்து வளர்ந்த பொண்ணு. அதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை 4-வது சீசனிலிருந்து தொகுத்து வழங்கிக்கிட்டிருக்கேன்.
அங்க நின்னுக்கிட்டிருக்கேங்கிறதை முக்கியமான விஷயமா பார்க்கிறேன். இந்த வேகமான உலகத்துல, மக்களை சந்தோஷப்படுத்தி ஒரு என்டர்டெய்னரா அவங்க மனசுல நிலைச்சு நின்னுக்கிட்டிருக்கேன் என்பதே எனக்கு வெற்றிதான். என்னைப் பிடிச்ச மக்களுக்கு நன்றி.
என்னைப் பிடிக்காதவங்களுக்கும் பிடிக்கிற மாதிரி ஆகணும்ங்குறதான் என்னோட ஆசை, குறிக்கோள் எல்லாமே!”
‘பிக்பாஸ்’, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிகளின்போது உங்கள் மீது எழுந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?’
“நான் பிக்பாஸுக்குப் போறேன்னதும் ‘உன் பேரைக் கெடுத்துக்கவேணாம்’னு நிறைய பேரு சொன்னாங்க.
நான் நடிக்கல. ரொம்ப உண்மையா என்னோட இயல்பைக் காண்பிச்சேன். ‘பிரியங்கா ஜாலியா பேசுவா, சிரிப்பா’ன்னு பார்த்துப் பழகிட்டாங்க.
திடீர்னு நான் கோபப்படுறதை மக்களால ஏற்றுக்க முடியல. இதுவும் என் மீது அவர்கள் வெச்சிருக்கிற அன்பும் எதிர்பார்ப்பும்தான்.
ஆங்கர் பிரியங்காவைத் தாண்டி, பிரியங்காங்குற பர்சனா மக்கள் இதயத்துல பதிஞ்சுட்டேன்ங்கிறதுல சந்தோஷம்தான்.
அதேமாதிரி, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கும் அவ்ளோ உழைப்பைப் போட்டேன். வெற்றியும் பெற்றேன்.
நம்ம விரல்கள் எல்லாமே ஒரே அளவிலா இருக்கு? அப்படித்தான், எல்லாருக்குமே நம்பளை பிடிச்சிருந்தாலும் அதை வெளிப்படுத்துறது வெவ்வேறு விதமா இருக்கும்.
என்னை பாராட்டுற, கடைக்குப்போனா ஆசையா செல்ஃபி எடுத்துக்கிற அக்கா தங்கைகள், அண்ணன் தம்பிகள் நிறைய பேரு இருக்காங்க.
அவங்கதான் என் குடும்பம். அந்தக் குடும்பத்தை சந்தோஷப்படுத்தத்தான் நேரங்காலம் பார்க்காம ஓடிக்கிட்டிருக்கேன்.
நான், இந்த ஃபீல்டுல பெண்களைத் தப்பாவும் நினைக்கமாட்டேன். பெண்கள் முன்னேறணும்னு நினைப்பேன்.
அப்படியிருக்கும்போது, முழு ஷோவையும் பார்க்காம சிலர் என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. நமக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்துக்கு ஏன் ரியாக்ட் பண்ணணும்னுதான் நான் எதுவுமே சொல்லல.
அதேமாதிரி, ‘பிரியங்கா இத்தனை வருடம் இங்கதான் குப்பை கொட்டணுமா’ன்னு சிலர் விமர்சனம் செய்றாங்க. உயிரா நேசிக்கற வேலையை நான் ஏன் விட்டுட்டுப் போகணும்? நான் சரியா வேலை பார்க்கலைன்னா அவங்களே என்னைத் தூக்கிப் போட்டுடுவாங்க.
எல்லா ஃபீல்டிலும் அப்படித்தான் இருக்கு. ஆனா, நீங்க இந்த வேலையைப் பார்க்காதீங்கன்னு சொல்றதுக்கு யாருக்குமே உரிமை கிடையாது.
நானும் ஒரு சாதாரண பெண்தானே, ஏன் இப்படியெல்லாம் பேசுறாங்கங்குற வருத்தம் ஏற்பட்டிருக்கு. ஆனா, அதைத் தலையில ஏற்றிச் சுமக்கிறதில்ல!
‘‘திருமண வாழ்க்கை எப்படிப் போய்க்கிட்டிருக்கு?”
‘ரொம்ப அன்பா, அழகா, சூப்பரா, புரிதலோட போகுது. வாழ்க்கையில நிறைய கஷ்டங்களைப் பார்த்துட்டேன். எனக்குத் திருமணம் பண்ணிக்கற ஐடியாவே இல்ல.
ஆனா, பெத்தவங்களுக்கு இருக்குமில்லையா? அம்மாதான் ‘கல்யாணம் பண்ணிக்கம்மா’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.
ஒரு ஷோவுலகூட வெளிப்படையா திருமணத்தைப்பற்றிப் பேசிட்டாங்க. ஒரு கட்டத்துல, ‘வரன் தேடப்போறேன்’னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம்தான், ஒரு வருடம் டைம் கொடும்மான்னு சொன்னேன்.
அந்த நேரத்துலதான் வசி அறிமுகம் ஆனார். என் ப்ரெண்டோட உறவினர். எங்களுக்குள்ள ப்ரெண்ட்லியா, மெச்சூரா கான்வர்சேஷன் போய்க்கிட்டிருந்தது.
திடீர்னு ஒருநாள் ‘கல்யாணம் பண்ணிக்கலாமா’ன்னு கேட்டுட்டார். அதை நான் எதிர்பார்க்கவே இல்ல. அவருடைய அன்பும் பாசமும் என்னை ஓகே சொல்ல வெச்சிடுச்சு.
திருமணத்தப்போ சில யூடியூப்கள்ல, ‘பிரியங்கா கணவர் சாதாரண ஆள் கிடையாது, தீவு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
200 கோடி ரூபாய் சொத்து இருக்கு, அரசியல் குடும்பம்’ அப்படின்னு வீடியோ போட்டிருந்தாங்க. என் கணவரே இதையெல்லாம் பார்த்துட்டு ‘என்னம்மா இப்படியெல்லாம் வருது’ன்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டார்.
அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது. என் கணவர் வசி இலங்கைத் தமிழர். அவர் சொந்த ஊர் திரிகோணமலை. அவர் குடும்பத்தினர் லண்டன்ல வசிக்கிறாங்க. அங்க ஒரு நிறுவனத்துல பணிபுரியுறார், அவ்வளவுதான்.
ஆனா, பணத்துக்காகக் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு பரப்பிட்டாங்க. நான் இத்தனை வருஷம் உழைச்சிருக்கேன். என்கிட்ட பணம் இருக்காதா?
இதுல நல்ல விஷயமா பார்க்கிறது, என் மேல அன்பு காட்டுற என் ஃபேன்ஸ், ‘எங்க அக்காவை நல்லா பார்த்துக்கோங்க’ன்னு அவருக்கு மெசேஜா அனுப்பிக் குவிச்சுட்டாங்க.
முக்கியமா இலங்கைத் தமிழர்கள், அவங்களோட மருமகளானதால பாசத்தைக் கொட்டித் தீர்க்கிறாங்க. நான் அவங்களுக்கு என்ன செய்யப்போறேன்னு தெரியல!”
‘‘கணவரோடு இந்த தீபாவளிய எப்படிக் கொண்டாடுனீங்க? அவர்கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?’’
‘‘அவருக்கு தீபாவளிக்கு நாலு நாள்கள்தான் லீவ் கிடைச்சது. சென்னையில ரெண்டு நாள், பெங்களூரில் வசிக்கும் என் தம்பி வீட்டில் ரெண்டு நாள்னு தீபாவளியைக் கொண்டாடினோம். தி
ருமணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினப்போ, ‘சென்னை, லண்டன்னு எப்படி இருக்கிறது’ன்னு பேசினோம்.
‘நீ இத்தனை வருஷம் உன் லட்சியத்தை அடைய உழைச்சிருக்க. உன்னோட கரியர் ரொம்ப முக்கியம். லண்டன் வந்து எனக்காக உன்னோட கரியரை நீ விட்டுக்கொடுக்கத் தேவையில்ல. நான் உனக்காக சென்னை வர்றேன்’னு சொன்னார்.
முக்கியமா, என் அம்மா மேல அப்படியொரு பாசம் காட்டுறார். ‘உன் தம்பி பெங்களூருல இருக்கான். உன் அம்மாவுக்கு யாரு இருக்காங்க? அம்மாவை நாமதானே பார்த்துக்கணும்’ன்னு அவர் சொன்னது ரொம்ப ஸ்பெஷலா இருந்துச்சு
.அவர் என்னை ரொம்ப ரெஸ்பெக்ட் பண்ணுறது பிடிக்கும். அது அவர் வளர்ந்த விதமா, அவர் பழகின ஆட்களான்னு தெரியல. ஆனா, எனக்கு ரொம்ப புதுசா இருந்தது.
ரொம்ப மெச்சூரான பர்சன். நான் ரொம்ப இண்டிபெண்டன்டா உழைச்சு முன்னேறினேங்கிறதுல அவருக்கு என்மேல பெரிய மதிப்பு இருக்கு.
ஒவ்வொரு நாளுமே அவரோட பக்குவமான அணுகுமுறைகளைப் பார்த்துப் பூரிச்சுப்போறேன். இன்னும் சொல்லப்போனா, நான் லண்டன் போனா எனக்காக அவர் நல்லா சமைச்சுக் கொடுப்பார். என்னோட சமையலில் ப்ரான் ஃப்ரை, மஷ்ரும் பிரியாணி எல்லாம் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவார். ரொம்ப கேரிங்கான, அன்பான கணவர்!’

