விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின்­போது இலங்கை இரா­ணு­வத்­திற்குத் தலைமை தாங்­கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, இறு­திப்போர் தொடர்­பான சில தக­வல்­களை அண்­மையில் வெளி­யிட்டு வரு­கிறார்.

ஊட­க­வி­ய­லாளர் தரிந்து ஜய­வர்­த­ன­வுக்கு அவர் அளித்­துள்ள செவ்­வியில் இதற்கு முன்னர் வெளிப்­ப­டுத்­தி­யி­ராத விட­யங்­க­ளையும் கூறி­யி­ருக்­கிறார்.

இறு­திக்­கட்டப் போரின்­போது இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக, பக்­கச்­சார்­பற்ற- நீதி­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என, ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் மீண்டும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள சூழலில், அவ­ரது தக­வல்கள் அதி­க­ளவில் வெளி­வர தொடங்கி இருக்­கின்­றன.

இதற்கு முன்னர், போர்க்­கால மீறல்கள் தொடர்­பாக, சர்­வ­தேச விசா­ரணை அல்­லது கலப்பு விசா­ரணைப் பொறி­முறை பற்­றிய யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்த சூழலில் சரத் பொன்­சேகா இவ்­வா­றான தக­வல்­களை வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை.

ஆனால், அவர் இப்­போது, இலங்கை அர­சாங்கம் நம்­ப­க­மான உள்­ளக விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தாக ஜெனி­வாவில் வாக்­கு­றுதி கொடுத்­துள்ள சூழலில், இந்த தக­வல்­களை வெளி­யிட ஆரம்­பித்­துள்­ளதன் உள்­நோக்­கத்தை புரிந்து கொள்­வது கடி­ன­மா­ன­தல்ல.

அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் அர­சாங்கம் ஓர் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை உரு­வாக்கக் கூடிய சாத்­தி­யங்கள் இருக்­கலாம்.

ஏனென்றால் சர்­வ­தேச அழுத்­தங்­களை சமா­ளித்துக் கொள்­வ­தற்கு, கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டிய நிலையில் அர­சாங்கம் உள்­ளது.

அதனால், சர்­வ­தேசம் எதிர்­பார்க்­கின்­ற­படி, நம்­ப­க­மான, பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை பொறி­மு­றை­யாக இருக்­கி­றதோ இல்­லையோ , பெய­ருக்கு ஒரு பொறி­மு­றையை, உரு­வாக்­கு­வ­தற்­கான சாத்­தி­யங்­களை நிரா­க­ரிக்க முடி­யாது.

ஆனால், அது பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமி­ழர்­களின் நம்­பிக்­கை­யையும் எதிர்­பார்ப்­பு­க­ளையும் நிறை­வேற்றக் கூடிய ஒன்­றாக நிச்­சயம் இருக்கப் போவ­தில்லை.

அதே­வேளை, பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரின் மீது கொண்ட கரி­ச­னை­யினால், அல்­லது அவர்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அர­சாங்கம் இந்த பொறி­மு­றையை உரு­வாக்கும் என எதிர்­பார்க்க முடி­யாது.

சர்­வ­தே­சத்தை சமா­ளிப்­ப­தற்­காக ஒரு பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ளன. அத்­த­கை­ய­தொரு பொறி­முறை உரு­வாக்­கப்­பட்டால், சரத் பொன்­சேகா அதன் முன்னிலையில் பதி­ல­ளிக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

ஏனென்றால் அவர் போர்க்­கா­லத்தில் இரா­ணு­வத்­துக்குத் தலைமை தாங்­கி­யவர்.

அவ­ரது தலை­மை­யி­லேயே போர் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அவ­ரது மூலோ­பாயத் திட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லேயே போர் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

அந்தப் போரில் இடம்­பெற்ற மீறல்கள் அனைத்­துக்கும் பொறுப்­புக்­கூற வேண்­டி­யவர் அவர்.

ஆனால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்­வ­தாக இது­வரை கூறி­ய­தில்லை. தனக்கும் அதற்கும் தொடர்­பில்லை என்­பது போலவே கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­தி­ருக்­கிறார்.

அதே­வேளை, இது­வ­ரையில் போர்க்­குற்ற விசா­ர­ணைக்­காக அவ­ரிடம் யாரும் கேள்வி எழுப்­பவும் இல்லை.

எந்­த­வொரு நாட்­டி­னாலும் பயணத் தடை விதிக்­கப்­ப­டவும் இல்லை.

அமெ­ரிக்கா, கனடா, பிரித்­தா­னியா போன்ற நாடுகள் சில இரா­ணுவ தள­ப­தி­க­ளையும் அர­சியல் தலை­வர்­க­ளையும் தமது நாட்­டுக்குள் நுழை­வ­தற்கு பயண தடை விதித்­துள்­ளன.

ஆனால், சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக அத்­த­கைய எந்தத் தடையும் வெளிப்­ப­டை­யாக விதிக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் அவர், அமெ­ரிக்கா செல்­வ­தற்கு விசா பெற முடி­யாத நிலை ஏற்­பட்­டது உண்மை.அது அவர் மீதான தடை அல்ல. விசா மறுப்­ப­தற்கும் அவரை தடை செய்­தி­ருப்­ப­தற்கும் வேறு­பா­டுகள் இருக்­கின்­றன.

சரத் பொன்­சேகா, பொறுப்­புக்­கூறல் விசா­ரணை பொறி­முறை ஒன்றை எதிர்­கொள்­ளு­கின்ற போது, தன்னை காப்­பாற்றிக் கொள்ள வேண்­டிய நிலையில் இருக்­கிறார்.

அதனால், அவர் தனக்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்­க­ளையும் தன்­னுடன் ஒத்­து­ழைக்­கா­த­வர்­க­ளையும் குற்­றச்­சாட்­டு­களில் சிக்க வைக்க முற்­படக் கூடும்.

அவர் கூறு­கின்ற விட­யங்கள் அனைத்தும் உண்­மை­யா­னவை என்று ஏற்றுக் கொள்ள வேண்­டி­யவை அல்ல.

ஏனென்றால் அவர், இன்­னமும் போரின் போது இரா­ணு­வத்­தினால் குற்­றங்கள் இழைக்­கப்­பட்­டன என்­பதை வெளிப்­ப­டை­யாக ஒப்­புக்­கொள்ள மறுப்­பவர்.

கட்­ட­மைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்கள் அல்­லது இன­அ­ழிப்பு முன்­னெ­டுக்­கப்­பட்­டது என்­பதை, அவர் முழு­மை­யாக எதிர்ப்­பவர்.

அவ்­வா­றான நிலையில், அவர் கூறு­வ­தெல்லாம் உண்­மை­யா­னது என ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இசைப்­பி­ரியா

இசைப்­பி­ரியா படு­கொலை தொடர்­பாக சரத் பொன்­சேகா அண்­மையில் ஊட­க­வி­ய­லாளர் தரிந்து ஜய­வர்­த­ன­வுக்கு அளித்­துள்ள செவ்­வியில் சில தக­வல்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

இரா­ணுவப் புல­னாய்வு பிரிவின் முன்னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ணவின் குழு­வி­னரே அதற்குக் காரணம் என்று உறு­தி­யாக கூறுவேன் என அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அவ்­வாறு தெரிந்­தி­ருந்தும் அவ­ருக்கு எதி­ராக சரத் பொன்­சேகா இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த போது, எந்த நட­வ­டிக்­கையும் எடுத்­தி­ருக்­க­வில்லை.

ஜகத் ஜய­சூ­ரி­

வன்னிப் படை­களின் தள­ப­தி­யாக இருந்த முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ரா­கவும் அவர் குற்­றச்­சாட்­டு­களை முன் வைத்­தி­ருக்­கிறார்.

தான் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த போது அவ­ரிடம் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆனால், திடீ­ரென அவர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

தன்­னு­டைய கருத்தைச் செவி­ம­டுக்­காமல், குற்­றச்­சாட்­டுக்­களைப் பொருட்­ப­டுத்­தாமல் அவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார் சரத் பொன்­சேகா.

சரத் பொன்­சேகா இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்­த­போது, ஜகத் ஜய­சூ­ரி­யவை போர்­மு­னையில் இருந்து விலக்கி, வன்னிப் படை­களின் தள­ப­தி­யாக நிய­மித்­தி­ருந்தார்.

ஜகத் ஜய­சூ­ரி­ய போர்­முனை செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருக்க வில்லை. ஆனால் பின்­களச் செயற்­பா­டுகள் அவ­ரது வசமே இருந்­தது.

போரின் இறு­தியில் சர­ண­டைந்­த­வர்­களைக் கையாண்­டவர் அவர்.

இந்த விவ­கா­ரத்தில் ஜகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக சரத் பொன்­சேகா குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தி­ருந்­தாலும், முன்­களச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் விட­யத்தில் வாய் திறக்­காமல் அமை­தி­யாக இருக்­கிறார்.

ஏனென்றால் அவர்கள் அவ­ருக்குப் போரை வென்று கொடுத்­த­வர்கள்.

கோட்­டா­பய ராஜபக் ஷவுடன் நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்­த­வர்கள் என்ற போதும், அவர்கள் தொடர்­பான எந்த தக­வல்­க­ளையும் சரத் பொன்­சேகா வெளி­யி­டாமல் தவிர்க்­கிறார்.

குறிப்­பாக, மேஜர் ஜென­ரல்கள் சவேந்­திர சில்வா, கமல் குண­ரத்ன, ஷாஜி கல்­லகே, ஜகத் டயஸ், பிர­சன்ன டி சில்வா, போன்ற முன்­ன­ரங்க போர்­முனை அதி­கா­ரிகள், கோட்­டா­பய ராஜபக் ஷவுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்­தனர்.

அவர்கள் சரத் பொன்­சே­காவின் போர்­முனை வழி­ந­டத்­தலை ஏற்று செயற்­பட்­டி­ருந்­தாலும், சில விட­யங்­களில் கோட்­டா­பய ராஜபக் ஷவின் நேரடி உத்­த­ர­வு­களை நிறை­வேற்­றி­னார்கள் என்ற குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதனை சரத் பொன்­சேகா ஆரம்­பத்தில் இருந்தே கூறி இருந்தார்.

ஆனாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை அவர் முன் வைத்­தி­ருக்­க­வில்லை.

இப்­போது இசைப்­பி­ரியா விட­யத்தில் கள­மு­னையில் இருந்த படைத்­த­ள­ப­திகள் எவ­ரையும் சரத் பொன்­சேகா குற்­றச்­சாட்டில் சிக்கவைக்­க­வில்லை.

அதற்கு மாறாக இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் பணிப்­பா­ள­ராக இருந்த, மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ணவின் குழு­வி­னரே இதற்கு பொறுப்பு எனக் கூறி­யி­ருக்­கிறார்.

மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ரண ராஜபக் ஷவி­ன­ருக்கு மிகவும் நெருக்­க­மா­னவர்.

முன்னர், அவர் தொடர்­பாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­பட்­டி­ருந்­தன.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், அவர் பத­வி­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டார்.

அதன் பின்னர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ரண சீனாவின் ஷங்ரி லா குழு­மத்தின் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக பொறுப்­பேற்­றி­ருந்தார்.

இசைப்­பி­ரியா படு­கொலை விவ­கா­ரத்தில் முன்னாள் இரா­ணுவ அதி­காரி ஒரு­வரின் பெயர் குறிப்­பி­டப்­பட்டு குற்­றச்­சாட்டு முதல்­மு­றை­யாக முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

சரத் பொன்­சேகா இந்தக் குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி இருப்­பதன் ஊடாக, அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள முற்­ப­டு­கி­றாரா அல்­லது உண்­மை­யி­லேயே குற்றம் இழைத்­த­வர்­களை தண்­டிப்­ப­தற்கு எத்­த­னிக்­கி­றாரா என்று புரிந்து கொள்­வதில் சிர­மங்கள் உள்­ளன.

எவ்­வா­றா­யினும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போது, அது பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கமோ அல்லது பொலிஸ் தரப்போ எந்த அக்கறையும் காண்பித்திருக்கவில்லை.

ஒரு தமிழர் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் ஒருவர் தொடர்பாகவோ- இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தால், அவர்கள் தொடர்பாக இவ்வாறான அணுகுமுறை தான் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

அது வேறு விதமாக கையாளப்பட்டிருக்கும்.

இதிலிருந்து, தற்போதைய அரசாங்கமும் தண்டனை விலக்கு கலாசாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதிலேயே ஈடுபடுகிறது என்பது நிரூபணமாகிறது.

சரத் பொன்சேகா, அரசாங்கத்துக்கு நெருக்கமானவராக இருந்தாலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அவருடன் இணைந்து பயணிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரியவில்லை.

குற்றமிழைத்தவர்களை பொறுப்புக்கூற வைக்கும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருந்தாலும்- அதற்கான வாக்குறுதியைக் கொடுத்திருந்தாலும், அதனை நிறைவேற்றும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

-சுபத்ரா-

Share.
Leave A Reply