“மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள வக்கீல் புதுத்தெரு பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகள் பொன் ரூபிணி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள மீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது பெரியம்மா செல்வராணியுடன் அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.அப்போது அங்கு சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் அருகில் சென்று அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் மாணவியும், அவரது பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக அவர்கள் போலீஸ் ரோந்து வாகனத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த விளக்குத்தூண் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்த பணத்துடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரிபார்த்தபோது, அதில் ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது.
அந்த பணம் யாருடையது, எதற்காக சாலையில் வீசிச் சென்றார்கள், ஹவாலா பணமா அல்லது எங்கிருந்தாவது திருடி கொண்டு வரும்போது பயத்தில் அந்த இடத்தில் விட்டுச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மிகுந்த பொறுப்புணர்வுடன் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை போலீசாரை அழைத்து ஒப்படைத்த மாணவி பொன் ரூபிணிக்கும், அவரது பெரியம்மா செல்வராணிக்கும் போலீசார் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.சமூக வலைதளங்களில் வைரலானதால் பல்வேறு தரப்பினரும் அவர்களை பாராட்டி வருகிறார்கள்.”,

